Friday, November 1, 2019

Thirunangur temple

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்  ஒரு விளக்கம் 88

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

சோழநாட்டு திவ்யதேசங்கள் திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்) (திருநாங்கூர்) 01

        கல்லால் கடலையணைகட்டி யுகந்தாய்
          நல்லார் பலர் வேதியர் மண்ணிய நாங்கூர்
     செல்வா, திருவெள்ளக் குளத்துறைவானே
          எல்லா இடரும் கெடுமா றருளாயே - (1313)
                        பெரிய திருமொழி 4-7-6
     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் சீர்காழி
தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ.
தூரம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று.

வரலாறு

     திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள
ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே
ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று.

 முன்னொருகாலத்தில் சூர்ய வம்சத்தைச் சார்ந்த துந்துமாரன் என்னும்
மன்னனுக்கு சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு 9 வயதில்
மரண கண்டமென்றும் அதிலிருந்து மீள முடியாதென்றும் சாஸ்திர வாதிகளால்
தெரிந்த மன்னன் அதற்குப் பிராயசித்தம் காண தன்குல குருவான வசிட்டரை
அணுகினான். அவர் இவ்விடத்திற் சென்று (ஆயுள் விருத்தி) மந்திரஞ்
ஜெபித்து மரண கண்டத்தை வெல்லுமாறு கூறினார்.

     எனவே இவ்விடம் வந்த சுவேதன், இங்கு தவம் செய்து கொண்டிருந்த
மருத்த முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து மந்திரப் பயிற்சிப் பெற்று
தடாகத்தின் தெற்கில் வில்வ மரத்தடியில் வடக்கு முகமாயமர்ந்து ஆயுள்
விருத்தி மந்திரத்தை ஜெபித்து (ஐப்பசிமாதம் வளர்பிறை தசமி முதல்,
கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி வரை ஒரு மாதம்) கடுந்தவமியற்ற
சிறுவனின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவனுக்கு காட்சி கொடுத்து மரண
கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல நீடித்த ஆயுளை
நல்கினார்.

     இவ்விதம் சுவேதன் பகவானின் அருள் பெற்றதால் ஸ்வேத புஷ்கரணி
என்றாகி தமிழில் வெள்ளக்குளம் ஆயிற்று.

      ச்வேத வத்ஸ சிரஞ்சீவிந் ஜிதோ ம்ருத்யுஸ்தவயா அதுநா
          ம்ருக்யுஞ்ஜயேன மந்த்ரேண ப்ரிதோஸ்மி தவஸி வ்ரத
     தீர்க்கமாயு ப்ரதாஸ்யாமி கல்பாந்தஸ் தாயி தேந்நாப
          விநோசோ ந பவேத்தாத மார்க்கண்டேயே ஸமோவப
                                   - என்பது புராணம்.
     திருமங்கையாழ்வார் வேங்கடவனையே இத்தலத்தில் காண்கிறார்.
வேங்கடவனே இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதாகவும், திருப்பதி
ஸ்ரீனிவாசனுக்கு இப்பெருமானை அண்ணன் எனவும் விளிக்கிறார்.
திருமங்கையாழ்வார் தமது துன்பங்களைப் போக்குமாறு கீழ்க்கண்டவாறு
வேங்கடவனை வேண்டுகிறார்.

     கண்ணார் கடல் சூழி லங்கை இறைவன்றன்
          திண்ணாகம் பிளக்கச் சரஞ்செல வுய்த்தாய்
     விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய
          அண்ணா, அடியேனிடரைக் களையாயே - 1038
     என்று திருப்பதி வேங்கடவனை அண்ணா என்றழைத்து தன்
துன்பத்தைப் போக்குமாறு வேண்டுகிறார்.

     திருவெள்ளக்குளத்துப் பெருமாளை வேண்டும்போது கண்ணார் கடல்
போல் என்ற சொற்றொடராலேயே மங்களாசாசனத்தை ஆரம்பித்து
இப்பெருமாளையும் அண்ணா அடியேனிடரைக் களையாயே என்கிறார்.

     இதோ அப்பாடல்,

     கண்ணார் கடல்போய் திருமேனி கரியாய்
          நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்
     திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
          அண்ணா, அடியேனிடரைக் களையாயே - 1308
     திருவேங்கிடமுடையானிடத்தில் அடியேனிடரைக்களையாயே என்று
முன்னமே தன்னால் வேண்டப்பட்டது திருவெள்ளக்குளத்து ஸ்ரீனிவாசனால்
நிறைவேறினமையால் அவருக்கு இவர் அண்ணாவாயிற்றார்.

     திருமங்கை வேறு எந்தப் பெருமாளையும் அண்ணா
என்றழைத்தாரில்லை. முதலில் திருமலைவேங்கடவனை அண்ணா என்று
விட்டு அதற்குப் பிறகு இப்பெருமாளை அண்ணா என்றதால் அவருக்கு இவர்
அண்ணனானார். அதாவது வேங்கடவனை அண்ணா என்றழைத்த இவர்
அதற்குப் பிறகு தமது மங்களாசாசனம் முற்றிலும் வேறு எவரையும் அண்ணா   என்றழைக்கவில்லை. திருவேங்கடத்திற்குப் பிறகு இவரை மட்டுமே அண்ணா
என்றதால் அந்த அண்ணாவுக்கு இவர் அண்ணனானார்.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்) (திருநாங்கூர்)  திவ்யதேசம் பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment