ஶ்ரீமத்பாக்வதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 9- உலூகபந்தனம்
ஒரு சமயம் யசோதை தயிர் கடைந்துகொண்டு இருந்த போது, கண்ணன் பால் குடிக்க விரும்பி அவளைக் கடைய விடாமல் தடுத்தான் . அப்போது அவனிடம் உள்ள அன்பினால் யசோதை அவனை மடியில் இருத்தி பால் கொடுக்க ஆரம்பித்தாள். அச்சமயம் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வழியவே அவனைப் பாதியில் விட்டு சென்றாள்.
அதனால் கோபம் அடைந்து தயிர் கடையும் சட்டியை தடியால் உடைத்துவிட்டு மாயக் கண்ணீருடன் உள்ளே சென்று மறைவில் வெண்ணையைத் தின்றான். திரும்பி வந்த யசோதை அவனைக் காணாமல் தயிர் பாத்திரம் உடைந்திருந்ததைக் கண்டு து அவன் செய்கை என்று உணர்ந்து சிரித்தாள். பிறகு உரலின் மேல் உட்கார்ந்து வெண்ணையை குரங்குக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்து மெதுவாகப் பின்புறம் வந்தாள்.
அவளைப் பார்த்து பயந்தவன் போல் மையிட்ட கண்களைக் கசக்கிக்கொண்டு அழுதவனைப் பார்த்துக் கையில் பிடித்துக் கொண்டு அதட்டினாள். பிறகு அவனை உரலில் கயிறால் கட்ட எண்ணினாள்.
சுகர் கூறுகிறார்.
ந சாந்தம் ந பஹிர்யஸ்ய ந பூர்வம் சாபி நாபரம்
பூர்வாபரம் பஹி: ச அந்த: ஜகதோ யொ ஜகத் ச ய:
தம் மத்வா ஆத்மஜம் அவ்யக்தம் மர்த்யலிங்கம் அதோக்ஷஜம்
கோபிகா உலூகலே தாம்னா பபந்த ப்ராக்ருதம் யதா.
எவனுக்கு உள்ளும் புறமும் இல்லையோ , முன்னும் பின்னும் இல்லையோ, எவன் உலகிற்கு முன்னும் பின்னும் உள்ளும் வெளியுமாகவும் உலகமேயாகவும் இருக்கிறானோ, வெளிப்படையாகத் தோன்றாதவனும், இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவனுமான அவனை மானிட உருக் கொண்டதால் தனது குழந்தையாக எண்ணி யசோதை சாதாரணக் குழந்தையைப் போல் உரலில் கட்டினாள்
நாராயண பட்டதிரி சொல்கிறார் ,
பந்தும் இச்சதி யம் ஏவ ஸஜ்ஜன:
தம் ஏவ பவந்தம் பந்தும் இச்சதி
பந்து என்றசொல்லின் ( உறவினன், கட்டுதல் என்ற )இரட்டை அர்த்தத்தில் ஒரு அழகான வாக்கியம்.
"எவனை சாதுக்கள் தம் பந்துவாகக் கருதுகிறார்களோ அப்படிப்பட்ட உன்னைக் கட்டுவதற்கு விரும்பினாள். "
ஆனால் அவளால் அதைச்செய்ய இயலவில்லை. எடுத்த கயிறு இரண்டங்குலம் குறைவாக இருக்க்க் கண்டாள். அதோடு வேறு கயிற்றை முடிந்தால் அதுவும் இரண்டங்குலம் குறைவாக இருந்தது. வேறு எந்தக் கயிற்றை எடுத்தாலும் அது இரண்டஅங்குல குறைவாகவே இருக்கக் கண்டு , தலையவிழ்ந்து, பூவும் சரிந்து கண்டோர் நகைக்க , வியர்த்து நின்ற தாயின் கஷ்டத்தைக் கண்டு கண்ணன், அன்பினால் தானாகவே கட்டுப்பட்டான்.
பக்த்யாது அனன்யய சக்ய: - பக்தியைத் தவிர வேறு எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறியவன் அல்லவா? அத்னால்தானே ஸஹதேவனால் அவனைக் கட்ட முடிந்தது!
சுகர் கூறுகிறார்
நேமம் விரிஞ்சோ ந பவோ ந ஶ்ரீரபி அங்கஸம்ஶ்ரயா
ப்ரஸாதம் லேபிரே கோபீ யத் தத் ப்ராப விமுக்திதாத்
முக்தி அளிக்கும் அவனிடம் இருந்து யசோதை எந்த அனுக்ரஹத்தைப் பெற்றாளோ அதைப் பிரமனும், சிவனும், அவன் மார்பிலுறையும் திருமகளும் கூட அடையவில்லை.
இதையே தமிழ் த்யாகய்யர் என்று புகழப்பட்ட பாபனாசம் சிவனும் ,
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத்தாய் கண்ணனை ,
என்ன தவம் செய்தனை யசோதா , என்கிறார்.
கண்ணன் உரலில் கட்டுண்டதை பக்தர்கள் பலவிதமாக அனுபவிக்கிறார்கள்.,
லீலாசுகர் கூறுகிறார் .
வரம் இமம் உபதேசம் ஆத்ரியத்வம்
நிகமவனேஷு நிதாந்தசாரகின்னா:
விசுனுத பவனேஷு வல்லவீனாம்
உபனிஷதர்த்தம் உலூகலே நிபத்தம்
வேதமாகிய காட்டில் அலைந்து களைப்படைந்தவர்களே , இந்த அறிவுரையைக் கேளுங்கள். நீங்கள் தேடும் உபநிடதங்களின் பொருள் இங்கு கோபிபவனத்தில் உரலில் கட்டுண்டு நிற்பதைக் காணுங்கள் .
தேசிகர் கோபால விம்சதியில் கண்ணனை 'கிமபி ப்ரம்ம கிசோர பாவ த்ருச்யம்', குழந்தை வடிவில் உள்ள ப்ரம்மம் என்கிறார்.
மேலும் யாதவாப்யுதயத்தில் ,
கண்ணன் பயப்பட்டதை நினைந்தால் நமது பயம் போகும்.. அவ கட்டுண்டதை நினைத்தால் நமது கட்டு விலகும் . இதனால் எதை நினைக்கிறோமோ அப்படியே ஆகிவிடுவோம் என்கிற தத்க்ரது ந்யாயம் என்பதாவது உபநிஷத்தாகிய அரணியத்தில் போய் ஒளிந்து கொண்டுவிட்டது என்கிறார்.
கண்ணனின் எந்த லீலையை நினைந்தாலும் அதன் பலன் எதிர்மறையாக இருக்கும். தத் க்ரது ந்யாயம் என்பது உபநிடதங்களில் சொல்லப்பட்டது. அதாவது ஒன்றை தீவிரமாக நினைந்தால் நாம் அப்படியே ஆகிவிடுவோம் என்பது. ஆனால் இங்கு அது எடுபடாததால் நாணம் கொண்டு தத் க்ரது ந்யாயம் ஆரண்யகத்தில் அதாவது காட்டில் ஓளிந்து கொண்டுவிட்டது என்பது இதன் பொருள் . ஆரண்யகம் என்பது உபனிஷதங்களின் இன்னொரு பெயர்.
அடுத்த அத்தியாயம் மருதமரங்களை சாய்த்த படலம். அதாவதுஅவன் உரலில் கட்டுண்ட உண்மையான காரணம்.
No comments:
Post a Comment