ஸ்ரீமத் பாகவதம் - தசம்ஸ்கந்தம்- அத்தியாயம் 3
( தொடர்ச்சி)
ஒரு சமயம் பலராமன் மற்றும் இதர இடைச்சிறுவர்கள் யசோதையிடம் வந்து கிருஷ்ணன் மண்ணைத் தின்றான் என்று கூறினர். அப்போது கண்ணன் தாயிடம் தான் மண்ணைத் தின்னவே இல்லை அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று சொல்லி நம்பாவிட்டால் தன் வாயைப் பார்க்கும்படி கூறினான்.
'அப்படியானால் வாயைத்திற,' என்று சொல்லப்பட்ட மனிதக் குழந்தையாக வந்து லீலை புரிந்த ஹரியானவர் தன் வாயைத் திறந்தார்.
அந்த வாயில் யசோதை என்ன கண்டாள் ? உலகம் முழுவதும் கண்டாள். எப்படி தெரியுமா?
பாகவதம் கூறுகிறது .
ஸா தத்ர தத்ருசே விச்வம் ஜகத் ஸ்தாஸ்னு ஹ கம் திச:
ஸாத்ரி த்வீபாப்தி பூகோளம் ஸ வாய்வக்னீந்துதாரகம்
ஸ்தாவரமும் ஜங்கமமும் ஆன உலகனைத்தையும், வாயு ,அக்னி,சந்திரன் , நக்ஷத்திரம் இவைகளுடன் கூட வானையும், திசைகளையும், மலை, தீவு ,கடல் இவைகளுடன் பூகோளத்தையும் கண்டாள் .
அத்துடன் கோகுலத்தையும் தன்னையும் கூடக் கண்டு,
இது என்ன கனவா, மாயையா அல்லது இந்தக் குழந்தையின் இயற்கையான ஆத்ம சக்தியா என்று அவள் வியந்தபோது ஸர்வவ்யாபியான பகவான் புத்திரவாஞ்சை என்ற விஷ்ணு மாயையை உண்டாக்கினார். உடனே தான் கண்டதை மறந்து மகனை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு சீராட்டலானாள்.
இதை லீலாசுகர் எவ்வாறு அனுபவிக்கிறார் என்று பார்ப்போம்.
க்ருஷ்ணேனாம்ப கதேன ரந்தும் அதுனா ம்ருத்பக்ஷிதா ஸ்வேச்சயா
தத்யம் க்ருஷ்ண ? க ஏவம் ஆஹ?முஸலீ, மித்யாம்ப பச்யானனம்
வ்யாதேஹி இதி விதாரிதே சிசுமுகே த்ருஷ்ட்வா ஸமஸ்தம் ஜகத்
மாதா யஸ்ய ஜகாம விஸ்மயபதம் பாயாத் ஸ ந: கேசவ:
பலராமன் கூறுகிறான் – அம்ப-தாயே , க்ருஷ்ணேன – கிருஷ்ணனால் , ரந்தும் கதேன – வீதியில் சென்று , ஸ்வேச்சயா – இஷ்டப்படி, ம்ருத்பக்ஷிதா – மண் தின்னப்பட்டது.
யசோதை , தத்யம் க்ருஷ்ண- கிருஷ்ணா இது உண்மையா , என்று கேட்க , கண்ணன் , க ஏவம் ஆஹ - யார் இவ்வாறு கூறியது என்று கேட்கிறான். அதற்கு அவள் , முஸலீ- பலராமன்தான் கூறினான் என்று சொல்கிறாள்.
கண்ணன் உடனே மித்யா அம்ப, அது பொய் தாயே , ஆனனம் பஸ்ய- என் வாயைப் பாரும் எனக்கூறி, வ்யாதாரிதே- திறந்த , சிசுமுகே – சிறுவனின் வாயில், த்ருஷ்ட்வா ஸமஸ்தம் ஜகத் – இந்த உலகம் முழுவதையும் பார்த்து,
யஸ்ய மாதா- எவனுடைய தாயான யசோதை விஸ்மயபதம்- ஆச்சரியத்தை ஜகாம – அடைந்தாளோ , ஸ கேசவ: அந்த கேசவன் , ந: நம்மை , பாயாத்- காப்பானாக.
இவ்வாறு க்ருஷ்ணாவதாரம் முழுவதும் தன் நிஜ ஸ்வரூபத்தை அவ்வப்போது காட்டிப் பின் தன் மாயையால் அதை மறைத்து எல்லோரும் மானுட பிள்ளை என்றே கருதும்படி செய்கிறான். அப்போதுதானே அவர்களின் அன்பை அனுபவிக்க முடியும் ! அவ்னுடைய விரோதிகள் மட்டுமல்ல, அன்பர்களும் அவன் மாயையால் மயங்கினர்.
No comments:
Post a Comment