Thursday, October 24, 2019

Parables & teachings of Ramakrishna Paramahamsa in Tamil

🕉🔔ஸ்ரீராமகிருஷ்ணரின் கதைகள், உவமைகள்

சைதன்யரும் கீதை கேட்டவனும்
வித்யாசாகர்-சிலருக்கு அதிக சக்தியையும், சிலருக்கு குறைந்த சக்தியையும் கடவுள் தருகிறாரா என்ன?

ஸ்ரீராமகிருஷ்ணர்--- கடவுள் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். எறும்பு வரை எல்லா உயிரினங்களிலும் நிறைந்திருக்கிறார். ஆனால் சக்தி வெளிப்பாட்டில் வித்தியாசம் உண்டு. இல்லாவிட்டால் ஒருவன் பத்துப்பேரை அடித்து வீழ்த்துகிறான், மற்றொருவன் ஒருவனைக் கண்டே ஓடுகிறான்? அது எப்படி? சக்தி வெளிப்பாட்டில் வித்தியாசம் இல்லை என்றால்  உங்களை ஏன் எல்லோரும் மதிக்கவேண்டும்.?
உங்களுக்கு இரண்டு கொம்புகளா முளைத்திருக்கின்றன?
உங்களிடம்  பிறரைவிட அதிக படிப்பும் கருணையும் உள்ளன. அதனால் தான் மக்கள் உங்களை மதிக்கிறார்கள். பார்க்க வருகிறார்கள்.

வெறும் படிப்பினால் எந்தப் பயனும் இல்லை. புத்தகம் படிப்பது கடவுளை அடைவதற்கான வழியைத் தெரிந்து கொள்வதற்காகவும் அவரை அறிவதற்காகவும் தான்.
ஒரு சாது புத்தகம் ஒன்று வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது புத்தகத்தைத் திறந்து காட்டினார். பக்கம் பக்கமாக அதில் ஓம் ராம், ஓம் ராம் என்று மட்டுமே எழுதப்பட்டிருந்தது, வேறு எதுவும் இல்லை.

கீதையின் சாரம் என்ன?
பத்து முறை சொன்னால் என்ன வருமோ அது தான். கீதா, கீதா என்று பத்து தடவை சொன்னால் தாகீ, தாகீ(அதாவது த்யாகீ, த்யாகீ) என்று வரும். அது தான் கீதையின் போதனை-
ஏ, மனிதா எல்லாவற்றையும் தியாகம்  செய்து விட்டு, கடவுளை அடைய முயற்சி  செய், துறவியானாலும் சரி, இல்லறத்தானாக இருந்தாலும் சரி, மனத்திலிருந்து எல்லா பற்றுகளையும் உதற வேண்டும்.

சைதன்யதேவர் தென்னாட்டிற்கு யாத்திரை, சென்றிருந்த போது ஒரு நாள் ஒருவன் கீதை படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சற்று தூரத்தில்  மற்றொருவன் கீதையைக்கேட்டபடி தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான். கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது.
சைதன்யர் அவனது அருகே சென்று, இதெல்லாம் உனக்குப் புரிகிறதா? என்று கேட்டார்.
அதற்கு அவன், சுவாமி, இந்த சுலோகம் அது இது என்பதெல்லாம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை" என்றான்.
பின் ஏன் அழுகிறாய்? என்று கேட்டார் சைதன்யர்.
அதற்கு அவன், அர்ஜுனனின் தேர் தெரிகிறது, அதன் முன்னால் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டு அழுகிறேன், என்று கூறினான்.
கீதை படித்தவன் கிருஷ்ணரைக்காணவில்லை

விஞ்ஞானி ஏன் பக்தி நெறியைப் பின்பற்றுகிறான், இதற்கு விடை, நான் உணர்வு போகாததால் என்பது தான்.
 சமாதி நிலையில் அது போய்விடும் என்பது உண்மை. ஆனால் மறுபடியும் வந்து விடுகிறது. சாதாரண மக்களுக்கோ நான் என்பது போவதே இல்லை.

அரச மரத்தை வெட்டி எறியுங்கள். மறுநாளே அது முளைவிட்டிருக்கும்.
ஞானம் பெற்ற பிறகு கூட இந்த நான் எங்கிருந்தோ வந்து தொலைகிறது., கனவில் புலியைக் கண்டான், பிறகு விழித்தான். விழித்த பின்னும் இதயம் படபடவென்று, அடித்துக்கொண்டிருக்கிறது. இந்த நான் காரணமாகத்தான்  எத்தனை துயரங்கள்.மாடு ஹம்பா, ஹம்பா (நான்) என்று கத்துகிறது. அதனால்தானே அத்தனை துன்பங்களுக்கும் உள்ளாகிறது.

ஏரில் பூட்டப்படுகிறது. மழையிலும் வெயிலிலும் வேலை செய்கிறது. கிழடானாலும் கசாப்புக் கடைக்கு அனுப்பப்படுகிறது. அதன் தோலிலிருந்து செருப்புகள் செய்யப்படுகின்றன. மேளங்கள் செய்யப்படுகின்றன. அப்போது அடிஅடியென்று அடி வாங்குகிறது. இதிலாவது அதன் துன்பங்கள் ஓய்ந்தனவா என்றால் இல்லை. அதன் நரம்பிலிருந்து நாண்  செய்யப்படுகிறது. அந்த நாணிலிருந்து பஞ்சடிக்கின்ற வில் தயாராகிறது. பஞ்சடிக்கும்போது நான் என்ற சத்தம் எழுவதில்லை. துஹீ, துஹீ(நீ.நீ) என்றே சத்தம் வருகிறது. நீ, நீ என்று சொல்கின்ற நிலைக்கு வந்த பிறகு தான் விடுதலை.ஹே பிரபு, நான் அடிமை , நீ எஜமான், நான் பிள்ளை, நீ அன்னை.
🔔🕉

No comments:

Post a Comment