Thursday, October 3, 2019

I am a dog - Manicka vasagar

Courtesy: Sri.N.V.S.Manian

ஒரு குரு தனது சீடரகளிடம் ஒரு கேள்வி கேட்டார்.  ஒரு தொட்டியில் நிரம்பத் தண்ணீர் இருக்கிறது. பக்கத்தில் ஒரு பாத்திரம், நிறைய பொத்தலகளோடு கூடிய பாத்திரம், இருக்கிறது . தொட்டியில் இருக்கும் தண்ணீரை இந்த பாத்திரத்தில் நிரப்ப வேண்டும். என்ன செய்வீர்கள் என்பது கேள்வி . ஒவ்வொருவராகக் கேட்டுக் கொண்டே வந்தார். ஒருவராலும் அதற்கு ஒரு யுக்தி சொல்லத் தெரியவில்லை. பிறகு குருவே அதற்கு பதில் சொன்னார். பொத்தலகள் உள்ள பாத்திரத்தை தொட்டிக்குள் முக்கி விட்டால் பொத்தல் பாத்திரத்தில் தொட்டித் தண்ணீரை நிரப்பி விடலாம் என்று சொன்னார். சீடர்கள் யுக்தியைப் புரிந்து கொண்டார்கள்.  இதன் மூலமாக குரு ஒரு ஆனமீகப் பயிற்சியைத் தொடங்கி வைத்து ஞான உபதேசமே செய்து விடுகிறார்.

அப்படித்தான் மாணிக்கவாசகருக்கு ஏற்பட்ட, அல்லது கிடைத்த, அனுபவமும்.

மதுரையில், பாண்டிய மன்னனிடம் முதன் மந்திரியாக இருந்த திருவாத்வூரர், குதிரைகள் வாங்கும் பொருட்டு, தொண்டி என்னும் துறைமுகத்துக்குச் செல்கிறார்.. செல்லும் வழியில், ஒரு குருந்த மரத்தடியில், ஒரு அருளாளர் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் சில சீடர்கள் இருக்கும் காட்சி அவர் கவனத்தை ஈர்க்கிறது.  அப்போது திருவாத்வூரர்க்கு, "ஈர்த்து தன்னை ஆட்கொள்ளப் போகும்" குரு இவர்தான் என்பது தெரியாது. சீடர்களுக்கு மத்தியில் போய் அமர்கிறார்.  அருளாளர் அடி பணியும் போது, திருவாத்வூரர்க்கு, திருவடி தீட்சை கிட்டுகிறது.அந்த  திருவடி தீட்சையின் விளைவாக, அருளாளராக வந்த சிவன், திருவாதவூரர் சிந்தையுள் புகுந்து, ஆட்கொள்ளுகிறான்.  அவ்வளவுதான். திருவாத்வூரர், " எனை நான் என்பது அறியாமல், பகல் இரவாவதும் அறியாமல்",இருக்கிறார். திருவாதவூரரை ஆட்கொள்ளவே நடந்த நாடகம் இது. நமக்குத் திருவாசகம் கிடைக்க அருளிய அருள் செயல் இது.

"சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனால்" அவருக்கு தான் வந்த காரியமே மறந்து போகிறது. " சிந்தை மகிழ சிவபுராணம்" செய்கிறார்.
சிந்தை மகிழ என்றால், சிந்தையுள் முழுவதுமாக அமர்ந்திருக்கிறானே அவன் மகிழ என்றும் பொருள் கொள்வதற்கும் இடமிருக்கிறது,

"கயல் மாண்ட கண்ணி பங்கனான் சிவன், இவரோடு கலந்து முழுவதுமாக ஆட்கொண்ட பிறகு, இவர் சொல்வது எல்லாம், சிவன் சொல்வதாக ஆகிவிடுகிறது. திருவாசகம், ஈசன் பாடினதாக ஆகிவிடுகிறது. மணிவாசகரைப் பாடுவித்த செயல் நடை பெறுகிறது. குருந்த மரத்தடியில் கிடைத்த அனுபவம் நினைவுக்கு வருகிறது. பாடுகிறார்.

           " சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன்
                  கண் இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி,
             வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன்
                 மணிவார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர
             வந்து எனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை
                  மால் அமுதப் பெருங்கடலே! மலையே! உன்னைத்
             தந்தனை- செம்தாமரைக் காடு அனைய மேனித்
                 தனிச் சுடரே- இரண்டுமில் இத்  தனியனேற்கே!

எந்தப் பொறிகளின் வ்ழியாக, உணர்வுகள் வெளியேறுகின்றனவோ, அவைகளையே உள்ளே புகும் வாயில்களாக மாற்றிவிடும்
யுக்தியை இந்தப் பாடல் சொல்லுகிறது.

மாணிக்க வாசக்ருக்கு தன்னை "  நாயினேன்" என்று சொல்லிக் கொள்வதற்கு அளவே இல்லை. கடைப்பட்ட நாயினேன் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார். நாய் நன்றி உள்ள பிராணி. அதனை அடித்துத் துரத்தினாலும், போகாது. நன்றி உணர்வைக். காட்டிக் கொண்டே இருக்கும்.

சமீப காலத்தில் நாளேடுகளில் வந்த செய்தி இது. பெல்ஜியம் நாட்டில்,  ஒருவர் நாய் வளர்த்துக் கொண்டிருந்தார். இருவருக்கும் இடையே இருந்த பாசம் அளவில்லாதது. இவர் அளித்த உணவுக்கு அந்த நாய் காட்டிய நன்றி உணர்வு இருக்கிறதே அது அலாதியானது.  வயதான காலத்திலும் அவர் கூடவே இருந்து வந்தது. ஒரு  நாள், பெரியவர் இறந்து விட்டார். நண்பர்கள், நாய்க்குத் தெரியாமல் எப்படியோ ஏற்பாடுகள் செய்து, அவர் உடலுக்கு கல்லறை அமைத்து விட்டார்கள். தன் எஜமானரைக் காணாத நாய் ஊன் உறக்கம் இன்றித் தவித்தது, வழி முகர்ந்து, அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையைக் கண்டு பிடித்து விட்டது.என்ன செய்தும், நாயை அவ்விடத்திலிருந்து அகற்ற முடியவில்லை. பிறரால் உணவு கொடுக்கப்பட்டும் அது உண்ண மறுத்தது. கல்லறையின் அருகில் இருந்தே, பல நாட்கள் கழித்து அது இறந்தது.  இப்படிப் பட்ட நன்றி உணர்வு அஃந்த  நாய்க்குலத்திற்குத் தான் உண்டு.

மாணிக்கவாசகர், தன்னை நாயினேன் என்று பலகாலும் கூறிக் கொள்வதற்குக் காரணம், சிவனிடத்தில் அவருக்கு  இருந்த அசாத்தியமான நன்றி உணர்வு தான். தகுதியில்லாத தன்னையும் ஆட்கொண்டானே என்ற நன்றி உணர்வு தான், திருவாசகம் முழுக்க விரவிக் கிடக்கிறது.

பாடலுக்கு வருவோம்.  இந்தப் பாடலில்  நாயினேன் என்ற பாவமும், இரண்டும் கெட்டானாக( துன்ப இன்பங்களை அறியும் ஆற்றல் இல்லாதவனாக) இருக்கிறேனே என்ற ஏக்கமும் காணப்படுகின்றன.

சிந்தனை முழுவதும் உனக்கு ஆக்கினேன்.
என் கண் இணை உன்னுடைய திருப்பாத போக்குக்கு ஆக்கினேன்.
வந்தனையும், உன் பாத மலர்க்கே ஆக்கினேன்.
வாக்கும், உன் மணி வார்த்தைக்கே ஆக்கினேன்,(உன் நாமமே உரைத்தேன்)

ஐம்புலன்கள் ஆர வந்து, பொறிகளின் வழியாக உள்ளே புகுந்தாய்.
ஐம்புலக் கதவு உள்ளே திறக்கும் ஒருவழிப் பாதையாக ஆகிவிட்டது.
ஒன்பது வாயிலும் ஒடுங்கி விட்டன.

"சிந்தனை:" என்று தொடங்கி, "ஆர வந்து" என்ப்து வரை, முதல் நிலை.
"உள்ளே புகுந்த விச்சை மால்" என்ப்து வரை இரண்டாவது நிலை.
"மலையே உன்னைத் தந்த்னை" என்ப்து மூன்றாவது நிலை.

சிந்தனையில் குருவின் நினைப்பு, பொறி புலன்களை அடக்கி இருந்த போது, ஈசன் உள்ளே புகுந்த வித்தை (விச்சை)களை உணர்ந்து கொண்ட மாணிக்க வாசகர், உள்ளே புகுந்த இறை அருள் இருக்கிறதே அது கடல் போன்றது என்பதைக் கடலே என்ற வார்த்தையில் காட்டுகிறார்.
கடல் அசைகிறது. முன்னும் பின்னும் போகிறது. அது அசையாமல் நிற்பது இல்லை. எனவே ஈசன் அருள் அப்படி இல்லை, அது நிலையானது என்பதைக் குறிக்க " மலையே" என்றார்.ஈசன் அருள் அளவற்றதும், நிலையானதும் ஆகும் என்கிறார்.
"தந்தது உந்தன்னை, கொண்டது எந்தன்னை" என்ற நிலை இதுதான்.

செயலுக்குக் காரணமான, ஐந்து புலன்களையும் நீ ஆட்கொண்ட காரணத்தால், நான் செய்யும் செயல்களை எல்லாம் குற்றம் காணாமல் நீ ஏற்றுக் கொண்டாய் என்று மற்றொறு பாடலில் சொல்லுகிறார்.

                                             நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை
                                            பேயெனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை
                                            சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள், கொண்டருளும்
                                            தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பி.

என்று தன் மனத்தையே தும்பியாகப் பாவித்துப் பாடுகிறார்.

நம்மாழ்வார், நாரையைத் தூதாகவும். திருமங்கை ஆழ்வார், தும்பியையும், குயிலையும் தூதாகவும்,.  ஆண்டாள் நாச்சியார், குயிலைத் தூதாகவும் அனுப்புவதாக பாடல்கள் உள்ளன. இந்த மரபு, தமிழ் இலக்கியத்தில், சிறப்பாக பக்தி இலக்கியத்தில், கடைப் பிடிக்கப் பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. பறவைகள் வேகமாகப் பற்ப்ப்து போல்,மனமும் வேகமாக இடம் விட்டு இடம் செல்வத்னால், மனதைப் பறவைகளுக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள்.

"  நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை" என்ற அடியில் " பாடுவித்த" என்ற சொல், முன்னே குறிப்பிட்டபடி, இறைவன் உள்ளே புகுந்து என்னைப் பாடுவித்தான் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. திருஞானசம்பந்தரும்" எனதுரை தனதுரையாக" என்று சொன்னதும், "உள்  நின்ற நாவுக்கு உரையாடியாய்" இருக்கிறான் என்று நாவுக்கரசு பெருமான் சொன்னதும் இக்கருத்தை ஒட்டித்தான் இருக்க வேண்டும். அருளாளர்கள் பாடியுள்ளார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அந்த அருளாளர்களே, த்ம்முள் இருந்து இறைவனே பாடினான் என்றல்லவா சொல்லுகிறார்கள்,

செய்யும் பிழைகளை எல்லாம் பொறுத்துக் கொள்வதற்கு எவ்வளவு பெரிய கருணை உள்ளம் வேண்டும்? அதற்கும் ஒரு எல்லை இருக்கத்தானே செய்கிறது. அந்த எல்லையைத் தொட்டு விட்டால் "சீ போ , நான் செய்தது எல்லாம் உனக்குப் போதும் என்று பலர் சொல்வதைப் பார்க்கிறோம் அல்லவா?அப்படி எல்லாம் சொல்லாமல், நற்குணமில்லாத பேயேனது பிழைகளை எல்லாம் பொறுத்து, நான் செய்யும் செயல்களை எற்றுக் கொள்ளும்அன்பை நீ காட்டுகிறாய் என்று தன் நன்றி உணர்வை சொல்லுகிறார்.. பெற்ற தாய் ஒருத்திக்குத் தான், தன் மக்கள் செய்யும், பிழைகளை, கருணை உள்ளத்தோடும், தயை உணர்வோடும் பொறுத்துக் கொள்ளும் குணம் உண்டு. அப்படிப் பட்ட தாயான ஈசற்கே, தும்பியே, நீ சென்று ஊது என்று தன் மனக் கிடக்கையை, உள்ளப் பாங்கை வெளிப்படுத்டுகிறார்.

நம்முடைய செயல்களே சில சமயங்களில், நமக்கு வியப்பைக் கொடுக்கும்.. இதை நானா செய்தேன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளுவோம்.
அரிய செய்ல்களைச் செய்வதற்கும், பெரிய செயல்களை செய்வதற்கும். உந்து சக்தியாக விளங்குவது, நம்முள் இலங்கும் காண்பரிய பேரருளே ஆகும்.,



ent from my iPhone


Sent from my iPhone


Sent from my iPhone

No comments:

Post a Comment