Wednesday, October 9, 2019

Greatness of Sandhyavandanam- 3 fingers & the brahmin - Real Story at Tirunelveli - Periyavaa


Courtesy:Sri.V.Ranga Prasad
ஜகத்குரு மகா பெரியவாள் உபதேசித்தது:

ஒருகதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜிகல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள்..

இந்தக்கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐசுவர்யத்தை வைத்து, தானம்செய்யப் போவதாக விளம்பரம் செய்தார்.

அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அனேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்தக் காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல், தானம் வாங்க வந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள்.

கன்னடியர் என்ற ஒரு பிராம்மணர் இருந்தார். ஸந்த்யாவந்தன கர்மாவில் வெகு ச்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார்.

அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று விரல்களைக் காட்டியது. முடியாது என்றார். பிறகு இரண்டு விரல்களைக் காட்டியது. அதற்கும் முடியாது என்றார். கடைசியாக ஒரு விரலைக் காட்டியது, சரி என்றார்.

தான் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு, கால புருஷன் அந்த உருவத்தினின்றும் மறைந்தான். அந்தத் தானத்தில் அடங்கிய சகல ஐசுவர்யங்களையும் அந்தப் பிராமணர் வாங்கிக்கொண்டார்.

மூன்றுவிரல்கள், மூன்று வேளைகளில் செய்யப்படும் ஸந்த்யா வந்தனத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை மாலை இரு வேளைகளின் ஸந்த்யாவந்தன பலன். ஒருவிரல், ஒருவேளை, அதாவது மாத்யாந்நிகத்தின் பலன் என்பது காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளின் அர்த்தம்.

ஸந்த்யா வந்தனத்தின் ஒருவேளையின் பலனைக் கொடுத்ததன் மூலமும், ஐசுவர்யத்தைத் தானம் வாங்கியதன் மூலமும் பிராம்மணருக்குப் பாபம் சம்பவித்துவிட்டது.

அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிய வழியைத் தெரிந்துகொள்ள அகத்திய முனிவர் தவம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் மலைச்சாரலுக்குச் சென்றார். போகும் முன், தம்மிடமிருந்த தனத்தைப் பாதுகாக்கும்படி, கோவில் பூஜை செய்து வந்த ஒரு குருக்களிடம் ஒப்படைத்தார். எங்கே சென்றாலும் அகத்திய முனிவர் காணப்படவில்லை.

முனிவரைக் காணாமையால், அவர் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில், அகத்திய முனிவர் ஓர் கிழ வடிவத்துடன் பிராம்மணர் முன் தோன்றினார். அவரிடத்தில், பிராமணர் இக்கதையைச் சொன்னார். அந்தக் கிழவர், நீ போகின்ற வழியில் ஒரு பசுமாடு உமக்குத் தென்படும்.

அந்த இடத்திலிருந்து நீ ஒரு கால்வாய் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். பசுமாடு எவ்வளவு தூரம் சென்று நிற்கின்றதோ அவ்வளவு தூரத்திற்குக் கால்வாய் வெட்ட வேண்டும்.

நடுவில் பசுமாடு எந்த இடங்களில் சாணி போட்டுமூத்திரம் பெய்கிறதோ அந்த அந்த இடங்களில், சாணிபோட்ட இடத்தில் மடை அமைக்கவும், மூத்திரம் பெய்யும் இடத்தில் வாய்க்கால் வெட்ட வேண்டும் .இவ்விதம் செய்தால் உமக்கு ஏற்பட்டிருக்கும் பாபம் போய்விடும் என்று கிழவர் சொன்னார்.

கன்னடியர் அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்டு, திரவியத்தைத் திரும்ப வாங்குவதற்காக குருக்களிடம் சென்றார்.

குருக்களுக்குப் பிராமணர் கொடுத்த தனத்தின் மீது மோகம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்து பவுன் இளம் துவரம் பருப்பை ஒத்திருக்குமாதலால், குருக்கள் பிராமணரிடம் துவரம் பருப்புகளைக் கொடுத்து, "நீர் கொடுத்த திரவியம் இதுதான், எடுத்துக் கொள்ளும்" என்றார்.

குருக்களின் வஞ்சகச் செயலை அறிந்துகொண்ட பிராமணர், "நான் கொடுத்தது இதுவல்ல, நான் கொடுத்ததைக் கொடுங்கள்" என்றுமிகவும் பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்.

எந்தப்பயனும் ஏற்படவில்லை. ஆகவே, ராஜாவிடம் சென்று முறையிட்டுக் கொண்டார். குருக்களும் தருவிக்கப்பட்டார்.

ஆனால் குருக்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே குருக்கள் பூஜைசெய்யும் லிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தால் நான் ஒப்புக் கொள்கிறேன் என்று பிராமணர் கூறினார்.

அவ்விதம் செய்வதாகக் குருக்களும் சம்மதித்துவிட்டார். குருக்கள் ஆபிசாரப் பிரயோகத்தில் தேர்ந்தவரானதால், லிங்கத்திலுள்ள ஸ்வாமியைப் பக்கத்திலுள்ள ஒருமரத்தில் ஆகர்ஷனம் செய்துவிட்டார்.

இதை ஸ்வாமி, பிராமணரின் சொப்பனத்தில் தோன்றி, நடந்ததைச் சொல்லிவிட்டார். பிராமணர் மறுபடியும் ராஜாவிடம் சென்று "குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிராமணர் செய்யும்படிச் செய்ய வேணுமாகக் கேட்டுக்கொண்டார்". குருக்கள் மறுப்பளித்தார்.

ராஜா விடவில்லை. மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்யுமாறு ஆணையிட்டார் ராஜா. குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தார். உடல் எரிந்து போய்விட்டது.

எரிச்சுக்கட்டி ஸ்வாமி என்பது அந்த ஆலயமூர்த்தியின் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் அந்த ஆலயம் இருக்கிறது. பிறகு, பிராமணர் தம் தனத்தை எடுத்துக்கொண்டு கிழவர் சொல்லியபடி பசுமாட்டைக் கண்டு கால்வாய் வெட்டினார்.

"கன்னடியன் கால்வாய்" என்பது அதன் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கின்றது. அந்தக் கால்வாயின் பிரதேசங்கள் இன்றைக்கும் செழித்திருக்கின்றன. இந்தக் கதையினால் ஸந்த்யாவந்தனத்தின் பெருமை நன்கு விளங்குகிறது.

எனவே ஸந்த்யா வந்தனம் ஒரு கடமை. அதுசெய்வதால் உலக க்ஷேமம் ஏற்படுகின்றது. ச்ரத்தையுடன் செய்தால் மோக்ஷம் லபிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டு, நமது கடமைகளில் ஒன்றாகச் செய்து வரவேண்டும் என்று உங்கள் எல்லோரிடமும் தெரிவிக்கின்றோம்.


--
Radhe Krishna,

No comments:

Post a Comment