2
ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ பெரியவர்களுடன் என்னுடனான அனுபவங்கள் --பகுதி 12
(முதற் பாகம் )
இந்த பன்னிரண்டாம் பகுதி , அப்பொழுது விளங்கிய ஸ்ரீ பாலப்பெரியவர்களின் (தற்பொழுது நமது ஸ்ரீ காமகோடி பீடத்தை அலங்கரித்து வரும், ஸ்ரீ பெரியவர்களின் ) ஆணையின் பேரில் , நாங்கள் பெரம்பூர் குழுவினர், ஐ.சி.எப் ஸ்ரீ சுந்தர ராமனின் தலைமையின் கீழ், சுமார் பத்து பேர்கள், நம் நாட்டின் பலஇடங்களுக்குச்சென்று ,ஆங்காங்கே செய்து வந்த பல ஹோமங்களை ப்பற்றிய விவரங்களேயாகும். எங்கள் குழுவைச்சேர்ந்தவர்கள் எல்லோரும், அவரவர்கள் ஆபீசில் சுமார்பத்து நாட்கள் லீவு போட்டு பல இடங்களுக்குச்சென்று இந்த ஹோமங்களை செய்துவந்தோம். சிலருக்கு ரயில்வே பாஸ் இருந்தது. அவர்களுடைய பாஸி ல் ஒரு துணையையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் சலுகை இருந்தது.(அது இப்பொழுது இல்லை. இப்பொழுது பாஸும் இல்லை என்ற நிலையும் வந்து விட்டது ) .இந்த டிரிப்புகளிலெல்லாம் அநேகமாக நான் தவறாது கலந்துகொள்வேன். இதில் என்னுடைய பங்கு, நாங்கள் செல்லவிருக்கும் பல ஊர்களுக்கு முன்கூட்டியே சென்று , நாங்கள் செய்யவிருக்கும் ஹோமங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை ( நாங்கள் தங்கும் இடங்களை த்தீர்மானித்து, அங்கெல்லாம்எங்களுக்கு.வேண்டியஆஹாரத்திற்கும்,ஹோமங்களுக்குமான வசதிகளையும் ஊர்ஜிதப்படுத்தி க்கொள்வது , அந்தந்த ஊர்களிலெல்லாம் ஹோமத்தைப்பற்றி தகுந்த பிரசாரமும் செய்வதே. சாதாரணமாக ஒவ்வொரு ஊரிலும் மூன்று அல்லது அதிகபக்ஷமாக நான்கு நாட்கள் தங்கவேண்டியிருக்கும். இந்த மாதிரியான ஏற்பாடுகளில் நான் ஈடுபட்டிருப்பதால், ஒவ்வொரு ஊரிலும் முன்பாகவே சென்று,அந்தந்த ஊர்க்காரர்களை அணுகி, அவர்களுடைய வீடுகளிலும் ஓரிரு தினங்கள் தங்கவேண்டியும் இருக்கும். எனக்கு ஹிந்தி பாஷை சுத்தமாகத்தெரியாது. இங்கிலீஷையும், கொச்சை ஹிந்தியையும் வைத்து சமாளித்துக்கொள்வேன்.
ஆனால், நாங்கள் எடுத்துக்கொண்ட காரியம் குருவின் அருளுடன் இருந்ததால், நாங்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு சற்றும் சிரமம் ஏற்படவில்லை. ஒரு சம்பவத்தை நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும். ஷிம்லாவில் (நாம் சிம்லா என்பதை அவர்கள் ஷிம்லா என்றே தான் சொல்கிறார்கள்) நாங்கள் ,அங்கிருந்த பிரசித்தி பெற்ற ஹனுமான் மந்திரில் ஹோமம் செய்வதாக இருந்தது. நாங்கள் முந்தின இடத்திலிருந்து அங்கு அந்த மந்திருக்கு சென்றபொழுது, நன்றாக இருட்டிவிட்டது. சிம்லாவில் குளிர் அதிகம். கீழே விரித்துக்கொள்ள, சார்பாயும், போர்வையாக, கனத்த கம்பிளியும் இல்லாமல் அங்கு ஒரு க்ஷணம் கூட தங்க முடியாது. நாங்கள் அங்கு சேர்ந்தபொழுது குளிர் ஆரம்பித்துவிட்டது;ஆனால் ஒரு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. யாரையும் அங்கே காணோம். எங்களது குரூப்பிலிருந்த எல்லோரும் என்னை ஒருமித்து வைய ஆரம்பித்து விட்டார்கள். நான் செய்வதறியாது திகைத்தேன். ஸ்ரீ பெரியவாளை மனதில் பிரார்த்தித்தேன், ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை மனதில் பிரார்த்தித்தேன், விக்ன ஹர்த்தாவான ஸ்ரீ மஹா கணபதியைப்பிரார்த்தித்தேன். சுமார் 15 நிமிஷங்கள் கழித்து, ஏற்பாடு செய்யும் எல்லா ஆட்களும், தங்கள் ஸாமக்ரியைகளுடன் வந்து சேர்ந்தனர் . எனக்கு அப்பொழுதான் உயிர் வந்தது. அடுத்த அரை மணியில், ஷாமியானா ரெடியாயிற்று, டர்ரீ என்று சொல்லப்படும் கீழ் விரிப்புகளெல்லாம் விரித்து, நாங்கள் தங்கும் இடம் முழுவதும் தயாராயிற்று. கம்பிளிப்போர்வைகள் மூட்டையாக வந்தன. எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நான் மூச்சு விடலானேன் . ஷிம்லாவில்,ஸ்ரீ ராம ஷடாக்ஷரீ, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம ஹோமங்கள் செய்தோம்.
ஷிம்லா என்பது ஹிமாச்சல் பிரதேசில் இருக்கிறது .இந்த ஹிமாச்சல் பிரதேசில் முதன்முதலாக, ஜ்வாலா முகி என்னுமிடத்தில் ஹோமம் செய்தோம். அங்கு இயற்கையாகவே பூமியிலிருந்து பலவிடங்களில் தீ ஜ்வாலை நீல நிறத்தில் தோன்றுகிறது. அவற்றை அங்குள்ளவர்கள் அம்பாளாகவே கருதுகின்றனர், பூஜையையும் அவற்றிற்கு செய்து வருகின்றனர்.இந்தப்பிரதேசத்திலுள்ளவர்களுக்கு அவள் அம்பாளாகவே, அதுவும் மிக வரப்ரசாதியாகவே காக்ஷியளிக்கிறாள். சீக்கியர்களில் பலர் இங்கு வந்து தம் குழந்தைகளுக்கு மொட்டை போடும் பழக்கத்திலிருக்கிறார்கள். மொட்டை போட்டு தலையில் சந்தனம் தடவி, குழந்தைகளை அம்பாளை தரிசிக்க வைக்கிறார்கள். ரூ 100/- க்குக்குறையாமல் உண்டியலில் போடவும் செய்கிறார்கள். அர்ச்சனை என்று ஒன்று தனியாக இருப்பதில்லை. அம்பாளை தினந்தோறும் இரவில் ஒன்பது மணியளவில், பள்ளியறையில் சேர்த்தும் வருகிறார்கள்.அச்சமயம் ஸ்ரீ பகவத்பாதாள் எழுதின சௌந்தரியலஹரியில் எட்டாவது ஸ்லோகமான "
ஸுதா ஸிந்தோர் மத்யே " என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தை சொல்லி அம்பாளை பள்ளியறையில் சேர்க்கிறார்கள். அந்த ஸ்லோகத்தை சரியாக உச்சரிக்காது, அவர்களுக்குத்தெரிந்த முறையில் சொல்லி உபசரிக்கிறார்கள். அம்பாள் உச்சரிப்பையா பார்க்கிறாள்? நம்மிடம் உள்ள பக்தி பாவனையையல்லவோ பார்க்கிறாள் . அங்குள்ள மக்களிடம் பக்தி பாவனை இருப்பதை நாம் நேராகக்காணலாம். அவர்களுக்கு செல்வத்தையும் மற்ற சௌகரியங்களையும் அமோகமாகவே வர்ஷிக்கிறாள். மிகுந்த வரப்பிரசாதி என்றும் பெயர் பெறுகிறாள். அந்த நிகழ்ச்சியை நான் இங்கு திரும்பி வந்ததும் நான் ஸ்ரீ பால பெரியவர்களிடம் சொல்ல, அவர்கள் உடனேயே அந்த மூலசலோகம் அடங்கிய சௌந்தர்ய லஹரி புத்தகத்தை அந்த கோயிலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்கள். அந்த ஸ்லோகம் பின் வருமாறு :
ஸுதா ஸிந்தோர் மத்யே. ஸுரவிடபிவாடீ பரிவ்ருதே
மணி த்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரமசிவபர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா : கதிசன சிதாநந்தலஹரீம் II
இந்த ஸ்லோகம் அம்பிகையின் உறைவிடத்தின் வர்ணனையாக சொல்லப்படுகிறது.
இதன் அர்த்தம் :
ஹே அம்பிகே , நீ அம்ருத கடலின் நடுவே கற்பக மரங்களின் தொகுப்பால் சூழப்பட்ட, மணிகளாலான மணித்வீபத்தில் கதம்ப வ்ருக்ஷங்கள் சூழ்ந்த சிந்தாமணி கிருஹத்தில், திரிகோணாகாரமான கட்டிலில் ஸதாசிவம் என்னும் தத்வத்தாலான படுக்கையில் ஆனந்த ரூபமானவளாய் வீற்றிருப்பதாக சிலர் தியானிக்கின்றனர். அவர்கள் பாக்கியவான்களே . இதன் விரிவான அர்த்தம் எனக்குத்தெரியாது. ஆனால் விரிவான அர்த்தம் ஒன்று உண்டு அதை குரு முகமாகத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நம்மைப்போன்றவர்களுக்கு இது போதும்.
நாங்கள் முதல் நாள் அங்கு சேர்ந்து, அடுத்தநாள் காலையில் அந்தக்கோயிலில் கணபதி ஹோமம் செய்தோம் . எந்த ஊரில் ஹோமம் செய்தாலும் முதலில் ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஸ்வஸ்தி வாசனம் சொல்லிவிட்டு , அதன் பின்தக்ஷிணாமூர்த்திஅஷ்டகம் சொல்லி நமஸ்காரம் செய்து, அதன் பின் தோடகாஷ்டகம் சொல்லி நமஸ்காரம் செய்த பின் தான் ஹோமத்தைத்தொடங்குவது வழக்கம்.எங்களுடன் " ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் --பெரம்பூர் சமிதி " என்ற வசனம் தாங்கிய பேனரை ஒரு தகுந்த இடத்தில் நிறுவி விட்டபின் தான் தொடங்குவோம். முதல் நாள் நாங்கள் தங்கியிருந்த டில்லியில் 1008 மோதகங்களை (சுத்த நெய்யாலானவை) செய்து, மற்ற த்ரவ்யங்களுடன் மோதகங்களையும் சேர்த்து ஆஹுதி செய்தோம். அந்த மோதகங்களை அங்குள்ளவர்க்கெல்லாம் விநியோகமும் செய்தோம்.
எங்கு சென்றாலும் எங்களுடன் இரண்டு சமையற்காரர்கள் , அவருக்கு ஒத்தாசையாக ஒருவரும் கட்டாயம் உண்டு. சமையலுக்கு வேண்டிய அரிசி பருப்பு வகைகளை அங்குள்ளவர்கள் எங்களுக்கு கொடுத்து விடுவார்கள். சமையல் உபகரணங்களையும், காஸ் முதலியவற்றையும் அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்கள். எங்கள் குரூப்பில் ஒருவர் இராமாயண பாராயணம் செய்துகொண்டே வருவார்.
தரம் சாலா
ஜ்வாலா ஜி க்குப்பிறகு நாங்கள் தரம்சாலா விற்குசென்றொம். இது ஜ்வாலாஜி யை விட சற்று பெரிய ஊர். அழகானதும் கூட. ஊரை ஒட்டினாற்போல் தவளகிரியின் பிரும்மாண்டமான உருவம், ஒரு பெரிய பாம்பின் படம் போல் ஊரையே ஆக்ரமித்திருப்பதை காணலாம். ஊரை மக்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அருகே, மெக் லியொட் கஞ் என்னுமிடத்தில் சைனாவால் விரட்டப்பட்ட திபேத்தியர்கள் வசித்து வருகிறார்கள். தலாய் லாமா வும் அங்கே சாதாரணமாக வசித்து வருகிறார். இந்தப்பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு பாங்காக அமைகிறது. ஸ்வாமி சின்மயானந்தா அவர்களின் ஆசிரமமும், அவருடைய சமாதியும் இந்த ஊரின் அருகே இருப்பதாக சொல்கிறார்கள்.
இங்குள்ள கோயிலில் பிரதான தெய்வம் வஜ்ரேஸ்வரி. இங்கு தான் சதி தேவியின் வக்ஷஸ்தலம் விழுந்ததாக சொல்கிறார்கள் .சிறிய கோயில் தான் .ஆனால் அம்பிகை அழகுடன் காண்கிறாள். அதிகமாக இந்தக்கோயிலுக்கு தர்சனார்த்திகள் வருகிறார்கள். ஜ்வாலா ஜி மாதிரி இங்கும் சாந்நித்தியம் நிலவுகிறது. சீக்கியர்களிலும் பலரை இங்கு காணலாம். சற்றே பெரியதான பிராகாரமும் இந்தக்கோயில் கொண்டுள்ளது. நவராத்திரி உத்ஸவத்தை இந்தக்கோயிலில் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். இந்த அம்பிகையைப்பற்றியுள்ள ஒரு ஸ்லோகம் அம்பிகையின் அருகில் எழுதப்பட்டுக்காண்கிறது . அதை எழுதி வைத்திருந்தேன் . அது இப்பொழுது காணாமல் போய்விட்டது. காலை 8-00 மணியிலிருந்து 12-00 மணி வரை தரிசன நேரம். மாலை 5-00 மணியிலிருந்து 7-00 மணி வரையும் தரிசிக்கலாம். அன்றாடம் பகல் 12-00 மணிக்கும், அதன் பின் மாலை 7-00 மணிக்கும் தினசரி சாதுக்களுக்கு அன்னதானம். பகலில் சப்பாத்தி, மற்றும் சப்ஜி , மாலையில் வெண் பொங்கல் அல்லது வேறு ஏதாகிலும். அவரவர்கள் சாப்பிடும் தட்டை அவர்களே கொண்டுவந்து விடுகிறார்கள். கோயில் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தக்கோயிலில் லலிதா சஹஸ்ர நாம ஹோமம் செய்ததாக ஞாபகம் .
ஹிமாச்சல பிரதேசத்தில் பொதுவாக, எல்லா கோயில்களும் நன்றாகவே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் ஒரு நிர்வாக ஆபீசர் இருப்பார். இவர் இயற்கையாகவே தெய்வ நம்பிக்கையுள்ளவராதலால், கோயில் நிர்வாகத்தை சரியாகவே கவனித்துக்கொள்கிறார். இந்த நிலையை நான் அநேகமாகவே வட இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது. ஹிமாசலத்திலும் இந்த மாதிரி தான் உள்ளது.
தரம் சாலாவுக்கு அப்புறம், மண்டி,சோன்-லா, சாமுண்டா, ஷிம்லா முதலிய இடங்களுக்கு சென்றோம். ஷிம்லா வைப்பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டது. பாக்கியுள்ள இடங்களைப்பற்றி அடுத்த இரண்டாவது பாகத்தில் எழுத இருக்கிறேன்.
ச. சிதம்பரேச ஐயர்.
25 ஆக 2019
No comments:
Post a Comment