Thursday, September 26, 2019

Who am I - Answered by Thirumoolar

Courtesy:Sri.N.V.S.Manian

                                                                    நானாரோ?  தானாரோ 

 

Spare the Rod and spoil the child  என்று சொல்வார்களே, அப்படி, வளர்க்கப்பட்ட ஒரு மனிதன். நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி, சூரியனினொளி முகத்தில் படும் நேரத்தில் எழுந்து,சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமலும், கண்டதையும் நாக்கின் ருசிக்கு அடிமையாகி, சாப்பிட்டுச் சாப்பிட்டு, உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டு, வயிற்றில் குடல் புண்கள் ஏற்பட்டு,  ப்டுக்கையில் வீழ்ந்து விட்டான். 

 

வைத்தியர் வந்தார். பார்த்தார். ஒழுங்குபடுத்தப் படாத வாழ்முறை செய்திருக்கும் கோளாறுகளை எல்லாம் பார்த்தார். நோயாளிக்கு எல்லாவற்றையும் விளக்கினார்.  பாழடைந்த வீட்டில் எப்படி ஒரு குடும்பம் வாழ முடியாதோ அப்படி, பாழடைந்த ஒரு உடலுக்குள், உயிரானது தங்கி இருக்காது என்பதை எடுத்துச் சொன்னார். அதாவது இது மரணத்திர்குக் கொண்டு தள்ளி விடும் என்று நோயாளிக்குப் புரிய வைத்தார். உடலுக்கு ஓய்வு வேண்டும். திட உணவு சாப்பிடக்கூடாது, திரவ உணவு தான் சாப்பிடலாம். இப்படி, ஒரு ஒழுங்காக, கட்டுப்பாடாக இருந்து, மருந்துகளையும் நேரத்தோடு சாப்பிட்டு வந்தால், மூன்று வாரத்தில் உடம்பில் குணம் காணலாம், என்று  சொல்லிஒரு வாரம் கழிந்த பின், அதிகக் காரம் இல்லாமல், தக்காளி சூப் அல்லது கத்திரிக்காய் சூப் கொடுக்கலாம் என்றும் சொல்லிவிட்டுப் போய் விட்டார். பயலுக்கு பயம் வந்து விட்டது. உடலை விட்டு உயிரானது போய் விடுமோ என்று அஞ்சினான். அப்போது தான், அவனுக்கு உடல் என்ப்து ஒரு கூடு என்றும் உயிர் என்பது அந்த கூட்டுக்குள் வாழும் ஒரு சக்தி என்பதும் புரிந்தது.  இவை இரண்டும் சேர்ந்து இருப்பது தான் வாழ்வு என்பதையும்  அறிந்தான்..  உடம்பே எல்லாம் என்று இருந்தவன், உயிருக்காக அஞ்சினான். உடலுக்குள்ளே உயிரானது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று எண்ண ஆரம்பித்தான். உயிரைத் தேடி அதைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையும் உண்டானது.

                                                                 ஊன் தேடும் உயிர்

 

வைத்தியர் சொன்னதைப் போல, ஒரு வாரம் கழித்து, தக்காளி சூப்பும், கத்திரிக்காய் சூப்பும் சாப்பிட்டான். முந்தின வாரம்  முழுக்க வெறும் கஞ்சி சாப்பிட்ட வாய்க்கு தக்காளி. கத்திரிக்காய் சூப் ருசித்தது. 

 

தக்காளி விதையும், கத்திரிக்காய் விதையும் ஒன்று போலவே இருக்கும். பெரிய வித்தியாசம் இராது. இரண்டு விதைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பொட்டலம் கட்டி, மாதக் கணக்கில் வைத்திருந்தாலும், ஒன்றின் குணம் மற்றொன்றிற்குப் பாயாது.  வெகு காலம் கழித்து, அவைகளை, மண்ணில் தூவினால், கொஞ்சம் வெப்பமும், ஈரப்பதமும் சேர்ந்தால், விதை முளைக்க ஆரம்பிக்கும். பூமிக்குள்ளே இருக்கும், கனிமங்களும், பல் சுவை சத்துக்களும், கல்லும், மண்ணும், சரளையும், அந்த விதையை நோக்கி, " எங்களுக்கும் ஒரு வாழ்வு கொடு" என்று பிச்சை எடுத்துக் கதற ஆரம்பிக்கும். அந்த விதைகள் இருக்கின்றனவே அவை இந்த உயிரில்லாத ஜடப் பொருள்களின் மீது பெருங்கருனை பொழிய ஆரம்பிக்கும்.  அப்போது பார்க்கலாம். தக்காளி விதை தக்காளிச் செடியாகத்தான் முளைக்கும். கத்திரி விதை கத்திரிச் செடியாகத்தான் முளைக்கும்.   தன்னுடைய இயல்பை மறக்காமல். அத்தனை துளியூண்டாக இருந்த விதைக்குள். இருக்கிற மரபு ஞானம், செடி முளைத்து, பூத்து காயாக மாறும் தருணத்தில், தக்காளி செடி தக்காளிக் காயையும், கத்திரிக்காய் செடி, கத்திரிக் காயையும் காய்ப்பதை பிரமிப்போடு உணரலாம். மன்ணுக்குள் இருக்கும் கனிம சத்துக்களை எடுத்துக் கொண்டு, அந்த அந்தக் காய்கள், அதன் அதன் ருசியோடு காய்த்து, வள்ளல் தன்மையோடு, மனித இனத்திற்கு நல்கும் அந்தக் காட்சி இருக்கிறதே, அது மிகவும் அபாரமான், அபூர்வமான காட்சி ஆகும். இயற்கையின் சக்தியை, அதன் இயல்பை உணர வைக்கும் நேரம் ஆகும். பூமிக்குள்ளே இருந்த ஜடப் பொருள்கள், இப்போது, கத்திரிக்காயோடும், தக்காளிப் பழத்தோடும் சேர்ந்து கலந்து, ஒரு ஜீவத் தன்மை பெற்று விடுகின்றன. ஜடப் பொருள்கள் உயிர் சக்தி பெற்று ஒரு பரிணாம வளர்ச்சியை அடைகிறது.

 

நம்முடைய ஆள், இப்படிக் காய்த்த  தக்காளியையும், கத்திரிக் காயையும் வைத்து தயார் பண்ண சூப்பைச் சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறினான். சிறிது நாள் ஆயிற்று. உடலும் உயிரும் சேர்ந்து உணர்வைத் தேட ஆரம்பித்தது. வீட்டில் உள்ளரைக் கூப்பிட்டு, ரேடியோவிலும், டி.வி. பெட்டியிலும், சங்கீதம் போடச் சொன்னான்.  இந்த சங்கீதம் இனிமையாக இல்லை. இன்னார் பாடின பாட்டைப் போடு என்று அந்த சங்கீத உணர்வுக்குள் இனிமையைத் தேட ஆரம்பித்தான். சங்கீத நிகழ்ச்சிகளையும், நடன நிகழ்ச்சிகளையும், இலக்கிய ரசனைகளையுமே கண்டு ஆனந்திக்கத் தொடங்கினான்,   

 

                                                          உயிர் தேடும் உணர்வு.

 

நம்முடைய ஆளின் உடலுக்கு ஏற்பட்ட குணக் கேடானது, அவனை, ஒரு நல்ல வாழ்வு நெறியில் திருப்பி விட்டு விட்டது. எல்லாம் நேரக் கணக்கோடும், ஒழுங்கு முறையோடும் நடந்தது.  பசித்த போது தான் சாப்பிட்டான். சாப்பிடட உணவு ஜீரணமாயிற்றா என்று ஆராய்ந்து தான் அடுத்த உணவைத் தேடினான்.  உடலோடு பேசவே ஆரம்பித்து விட்டான், உடலோடு ஒரு சமாதான உடன்படிக்கையே போட்டாற்போல நடந்து கொண்டான். அப்புறம் என்ன , உடம்புக்கும் அவனுக்கும் உயிர்த் தோழமையே ஏற்பட்டு விட்டது. 

 

ஜடப் பொருள்கள் உயிர்த்தனமை அடைந்து, அந்த உயிர்த்தன்மையானது உணர்வுகளைத் தேடும் நிலைக்கு உயர்ந்து விட்டது. பரிணாம வளர்ச்சி தன் பிரயாணத்தை மேலும் தொடர்கிறது.

 

மரணத் தறுவாயில் இருந்த இந்த உடல், மருந்துகளாலும், உணவின் சேர்க்கையாலும், பலம் பெற்று, உணர்வுகள் கூடி, இயல்பு நிலைக்குத் திரும்புகிறதே, இது என்ன பேரதிசயம் என்று யோசிக்க ஆரம்பித்தான். ஒரு விதைக்கு, எங்கிருந்து இத்தனை சக்தி வந்தது. இந்த விதைக்கு இத்தனை சக்தியைக் கொடுத்தது யார். எந்த மருந்தானாலும், அது, பஞ்ச் பூதங்களின் சேர்க்கையாலே உருவாவது தானே? இவை எல்லாம் எப்படி நடக்கின்றன? இப்படி செயலாற்றும் மாபெரும் சக்தி எது? என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான்..

 

அது  ஊன் தேடும் உயிரேயோ?

 

அல்லது அது உயிர் தேடும் உணர்வேயோ?

 

கடவுள் சக்தியைத் தேடிக் கொண்டிருக்கும், நல்ல குடிமக்களைப் பார்த்தான். அவர்கள், இறை சக்தியை மறைகளுக்குள் ( வேத உபனிஷத்துக்குள்) தேடிக் கொண்டிருந்தாரகள். இவனுக்கு சந்தேகம் வந்து விட்டது.

 

அது வான் தேடும் மறையேயோ?

 

மறைகளுக்குள் இறை சக்தியைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் சொன்னார்கள். மறைகளே இன்னும் ஈசனைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறது. மறைகள் அந்தப் பொருளை இடை விடாமல், இதுவா, அதுவா, என்று தேடி, இது இல்லை, அது இல்லை என்று ஒவ்வொரு பொருளாக, நீக்கி நீக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்கள்.

 

அது மறை தேடும் பொருளேயோ?  என்றான்.

 

இந்தக் காட்சியை பட்டினத்தார் பார்க்கிறார்.  அவருடைய கண்களுக்கு ஒரு வினோதமான காட்சி தென்படுகிறது.

 

ஒரு இரவு, ஒரு வீட்டிற்குள் கள்ளன் புகுந்து விட்டன். ஏதோ சாமான்கள் உருளுகிற சத்த்ம் கேட்டு, வீட்டின் உடமைக் காரர்  விழித்துக் கொண்டு, "கள்ளன், கள்ளன்" என்று சத்தம் போட்டுக் கொண்டே தெருவுக்கு ஓடி வந்து விட்டார். பக்கத்து வீடு , எதிர்த்த வீடு, அதற்கடுத்த வீடுகளிலில் எல்லாம் இருந்து மக்கள் தெருவுக்கு  வந்து "கள்ளன் கள்ளன்" என்று கள்ளனைத் தேடிக் கொண்டு ஓடினார்கள். வீட்டிற்குள் ஒளிந்து கொண்டிருந்த கள்ளன் என்ன பண்ணான் தெரியுமா? இது தான் சந்தர்ப்பம் என்று, அவனும், மற்றவ்ர்களோடு சேர்ந்து கலந்து கொண்டு, "கள்ளன் கள்ளன்" என்று கூவிக் கொண்டு ஓடினானாம். கள்ளனைத் தேடி கள்ளன் ஓடின கதையாகவல்லவா இருக்கிறது., கடவுளைத் தேடுகிற காரியம் என்று படுகிறது பட்டினத்தார்க்கு.கூட்டத்துக்குள் ஒருவனாக இருக்கிற கள்ளனை கூட்டமல்லவா, எங்கோ தனியாக இருக்கிறான் என்று தேடிக் கொண்டிருக்கிறது என்று ஆச்சர்யப் படுகிறார்.

 

பாடுகிறார்.

 

                                             ஊன் தேடும் உயிரேயோ

                                           உயிர் தேடும் உணர்வேயோ

                                      வான் தேடும் மறையேயோ,

                                           மறை தேடும் பொருளேயோ

                                      தான் தேட, ஜகமெலாம்

                                           உடன் தேட, தன்னைத் தான்

                                      நான் தேடி, நான் காண.

                                           நான் ஆரோ? தான் ஆரோ?

 

ஜடப் பொருள்கள் உயிர்த்தனமை அடைந்து, அந்த உயிர்த்தன்மையானது உணர்வுகளைத் தேடும் நிலைக்கு உயர்ந்து, பின்னும் அது அறிவுக்குள் இறைவனைத் தேடும் அறிவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு, மனிதனுக்குள்ளே இருக்கும் இறை சக்தியாக பரிணமிக்கிறது வரை, பரிணாம வளர்ச்சி  மூத்து, முதிர்ந்து வளர்ந்து வருகிறது.

 

தானாக இருக்கிற நான், வேறாக இருப்பதாக தவறான எண்ணம் கொண்டு, என்னை எப்படி நான் காண முடியும்?

 

இந்தக் கேள்விக்கு திருமூலர் அற்புதமாக விடை அளிக்கிறார்.

 

                                                நான் என்றும் தான் என்றும்

                                                   இரண்டு என்று இருந்தேன்.

                                                 நான் என்றும் தான் என்றும்

                                                    இரண்டு அல்ல என்று

                                              நான் என்ற ஞான 

                                                   முதல்வனே  நல்கினான்.

                                              நான் என்ற நானும்

                                                    நினைப்பு ஒழிந்தேனே

 

இரண்டு என்கிற  உணர்வுகளுக்கு இடமே இல்லை என்று,அந்த ஞான் முதல்வனே எனக்கு அறிவுறுத்தினான்..     நான் வேறு அவன் வேறு எனற நினைப்பை ஒழித்து விட்டு, அவனாகவே நான் இருக்கிறேன். " இருத்தல்" என்ற ஒரு உணர்வு தான் எஞ்சி இருக்கிறது  எல்லாமாய், எங்குமாய் இருப்பது , "  தான்" என்ற உணர்வு மட்டுமே     

 

இரண்டல்லாத ஒரே பொருள், எப்படித் தன்னை மறைத்துக் கொண்டு, உலகத்துப் பொருட்கள் எல்லாமுமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது என்கிற ஒரு தத்துவத்தை இந்த இரண்டு பாடல்களும் அற்புதமாக நமக்கு விளக்குகின்றன.

 

(இந்தக் கட்டுரைக்கு உண்டான அடிப்படை விஷ்யம், ஜஸ்டிஸ் மகராஜனோடு நிகழ்ந்த உரையாடல்கள்) 

 

 

No comments:

Post a Comment