Monday, September 9, 2019

Our life is held between snakes, rats in a well with honey sip in between - Story from Mahabharata

ஐந்தாம் வேதம் J K SIVAN

''விதுரா உன் சொல் ஆறுதல் அளிக்கிறது. பேசு''

''கண் தான் தெரியவில்லையே தவிர காது கேட்கிறதே. ஜேஜே என்று கூட்டமாக மனிதர்கள் பேசும் சப்தம் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் ஹஸ்தினாபுர அரணமனை நிசப்தமாகி விட்டதே. பேரிடியாக செயதிகள் ஒன்றன் பின் ஒன்றாக 
காதில் விழுகிறதே .கௌரவர்கள் எல்லோருமே மறைந்துவிட்டார்களா?'' திருதராஷ்டிரன் புலம்பி புழுவாக துடிப்பதை சஞ்சயன் பார்க்கிறான்.

''திருதராஷ்டிரா, கலங்கவேண்டாம். என்ன செய்வது. விதியின் செயலை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பதினோரு அக்ஷ்வுணி சைன்யம் முழுதுமே இறந்தது. இறந்த உன் மகன்கள், உறவினர்கள், வாரிசுகள் அனைவருக்கும் செய்யவேண்டிய ஈமக்கிரியைகள் நடைபெற வேண்டுமே.

''சஞ்சயா, நானோ கண்ணற்றவன். ஆனால் காது இருந்தது. எவ்வளவோ பேர் சொல்லியும் என் காது கேட்கவில்லை. இப்போது எவருமில்லாதவன். நான் அனாதையாகி விட்டேன் . துன்பங்கள் தானாக வருவதில்லை. நாமாக வரவழைத்துக் கொள்வது . பெரியோர் வாக்கு பொய்யே இல்லை. முற்பகல் செய்தது இதோ பிற்பகல் விளைந்துவிட்டதே.''

''வைசம்பாயன ரிஷி எனக்கு துக்கம் தொண்டை அடைக்கிறது. கண்களில் ஆறு ததும்பி வழிகிறது.
''ஜனமேஜயா, உண்மை கசக்கத்தான் செய்யும். ஹஸ்தினாபுரத்துக்கு மீண்டும் விதுரன் திரும்பி விட்டான். திருதராஷ்டிரனிடம் அருமையாக சொல்வதைக் கேள் :

''சகோதரா, எதுவுமே சாஸ்வதமில்லை. எதற்கு வருந்துகிறாய். மேலே போகப் போக கீழே விழுந்தால் நேரும் துன்பம் அதிகம். சேர்த்து வைத்தது தான் சிதறும். வாழ்க்கையின் முடிவே மரணம் தான். யுத்தத்தில் போரிடாவிடினும் மரணம் நிச்சயம். கால வெள்ளம் அனைத்தையும் அடித்துச் செல்லும். எல்லாமே எல்லோருமே எங்கிருந்தோ வந்தவர்கள் தான். சிலகாலம் இங்கு வாசம், சந்தோஷம் துக்கம். பழக்கம் ஆகிவிட்டது. பிறகு ஒருநாள் எங்கோ செல்பவர்கள், இதில் என்ன வருத்தம்/

''விதுரா, உன் வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் மனதில் துயரத்தை விலக்குகிறது. மேலே சொல்'' என்றான் திருதராஷ்டிரன்.

''அண்ணா, எந்த மனதில் அமைதி குடிகொள்கிறதோ, அங்கே துன்பமோ இன்பமோ இல்லை. எதிர்பார்த்தவன் தான் ஏமாறுகிறான். எல்லாமே ஒரே மாதிரியான எலும்புக் கூடுகளான போது அதில் எது ராஜா, எது பிச்சைக்காரன்? வித்தியாசம் உடை, உணவு, ஆடை, ஆடம்பரம், வீடு வாசல், எண்ணம் இதில் தானே. அதெல்லாம் போனபிறகு? இந்த உடல் ''அரைக்காசுக் குதவாத மாயக் குயவனார் பண்ணிய மண் பாண்டம்..''

''திருதராஷ்டிரா, புரியும்படியாக சொல்கிறேன் கேள். மனித வாழ்க்கை எதைப் போல தெரியுமா?

ஒரு அடர்ந்த காடு, அதில் கொடிய விலங்குகள் சூழ்ந்திருக்கிறது. ஒருவன் ஓடுகிறான். அந்த காட்டையே வலைபோட்டு மடக்கும் ஒரு கொடூர ராக்ஷஸி அவனைக் கண்டுவிட்டாள். அவள் கையில் அகப்படாமல் காட்டுக்குள் உள்ளே திரும்பி ஓடினால் ஒரு பெரும் புதர் மறைத்த மா பெரும் கிடு கிடு பள்ளம். ஐயோ, அதில் விழுந்தால்? அதன் அடியில் ஐந்து தலை நாகங்கள் விஷம் கக்கியவாறு அவனைக் கொல்ல வென்றே காத்துக் கொண்டிருக்கின்றனவோ?. அவன் பள்ளத்தில் விழாதவாறு ஒரு மரத்தின் வேர்களும், கொடிகளையும் பிடித்துக்கொண்டு தடுமாறுகிறான் . மேலே பார்க்கிறான் பள்ளத்தின் மேல் ஆறு தலையும், பன்னிரண்டு கால்களும் கொண்ட கருப்பு காட்டு யானை. மேலே ஏறி சென்றால் அவன் கதி அதோகதி. அதற்குள் இன்னொரு புதிய ஆபத்து ..கருப்பும் வெள்ளையும் நிறம் கொண்ட பெரிய காட்டு எலிகளா , பெரு ச்சாளிகளா? அவன் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் வேர்களை செடிகொடிகளை கூரான பற்களால் கடித்து துண்டிக்கின்றன. அவன் தலைக்குமேல் பள்ளத்தின் பக்கத்தில் வளைந்த ஒரு பெரிய மரக்கிளையிலில் லக்ஷக்கணக்கான தேனீக்கள், ஒரு பெரிய தேனடையை சுற்றி பறக்கின்றன. தலை கீழே தொங்கி கொண்டிருக்கும் அந்த மனிதனின் வாயில் தேன் துளிகள் தேனடையிலிருந்து இனிப்பாக விழுகிறது. சப்புக்கொட்டிக்கொண்டே விழுங்குகிறான். துன்பங்கள் ஒரு கணம் மறந்து விட்டது.ல் தேனின் சுகம் அவனை இன்பமடையச்செயகிறது. இன்னும் இன்னும் என்று தேனுக்காக ஆசைப் படுகிறான். ஒரு கணம் அவன் நிலையை உணர்ந்து பார் திருதராஷ்டிரா'' .என்கிறார் விதுரர்.

விதுரன்சொன்ன இந்த கதையில் காடு தான் உலகம். அந்த மனிதன் கண்டுபிடித்த இடம் அவன் வாழ்க்கை. மிருகங்கள் தான் வியாதி. அந்த கொடூர ராக்ஷஸி தான் இயலாமை, பள்ளம் தான் உடம்பு. பள்ளத்தின் அடியில் பாம்பு தான் காலம். கொடிகள், வேர்கள் தான் பிடித்துக் கொண்டு தொங்கும் ஆசைகள். யானை தான் வருஷம். அதன் ஆறு தலைகள் தான் பருவங்கள். பன்னிரண்டு கால்கள் தான் மாதங்கள். கருப்பு வெளுப்பு எலிகள் தான் இரவு பகல். தேனீக்கள் எண்ணங்கள். தேன் துளிகள் அவனது ஆசைகள் விருப்பங்கள் தரும் திருப்தி. இப்படி ல்தான் மனித வாழ்க்கை நிறைந்தது.

'' விதுரா உன் நீதிக் கதை எனது அறியாமையை போக்குகிறது. மேலே சொல்? என்ற திருதராஷ்டிரனுக்கு விதுரன் சொல்கிறான்:

THOSE INTERESTED IN THE BOOK ''AINDHAM VEDHAM'' CAN CONTACT ME 9840279080 THRU WHATSAPP GIVING YOUR NAME AND ADDRESS FOR DETAILS

  

No comments:

Post a Comment