Friday, September 13, 2019

How to come out from this well of samsara?

Courtesy:Sri.NVS.Manian

ஆழம் மிக்க கருத்துக்கள் வெளிப்படும் போது, அதனுடைய ஊற்றுக் கண் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை.   இந்தப் பிறவியில், கண்டும், கேட்டும் அறிந்தும், கொண்டவைகளா, அல்லது, வேறு எப்போதோ, எங்கேயோ கிடைத்து பொதிந்து வைத்த சேமிப்பா  என்பதும் தெரியவில்லை.  

ஞானம் என்பது, கேட்டோ, அல்லது கொடுத்தோ பெறப்படுவதில்லை என்று சொல்லுகிறார்கள். அது, தன்னாலே தன்னையே வெளிப்படுத்திக் கொள்ளும் என்றும் அறிகிறோம்.     எந்த  சூழ்னிலையில், எந்தப் பக்குவத்தில், எந்த நேரத்தில், ஞானம் என்ற ஒன்று ஸ்புரிக்கிறது என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது.

ஞானம் என்பது உண்மை நிலை.   அன்பும் அப்படித்தான்.    ஆத்மா என்பதும் உண்மை  என்று தான் முன்னோர்கள் கூறினார்கள்.
ஆக, ஞானம், அன்பு, ஆத்மா இவை எல்லாமே ஒன்றாக, உண்மையின் மறு வடிவமாக இருக்கின்றன என்று கொள்வதில் என்ன தவ்று இருக்க முடியும்.

ஞானம் ஸ்புரிக்கிறது.
அந்த ஞானத்தின் விளைவாக, எல்லாம் ஒன்றின் மறுவடிவங்கள் என்ற உணர்வு  ஏற்படுகிறது.
எல்லாம் ஒன்று என்று அறிந்த பின், வெறுப்பு இல்லாமல் அன்பு செலுத்த முடிகிறது

     .
இந்த ஒன்று எது? யாருக்கு இது ஏற்படுகிறது?
நீண்ட நெடும் கேள்வியாக உள்ளே புகுந்து, சர்வ காலமும் அதே நினைவாய், அதே  கேள்வியாய், பதிலை ஆழத் தேடித் தோண்டும்  செயலாய் ஆகி விடுவதைத் தவம் என்ற சொல்லால் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.
அப்படித் தேடும் செயலில் ஈடுபட்ட சிலருக்கு, ஆத்மாவைத் தெரிந்து கொள்ளுமனுபவம் சித்திக்கிறது.

 


பகவான் ரமணரும், காஞ்சி  மஹாப் பெரியவரும், இந்தச் சிலரில் சிலராய் இருப்பார்களோ?

மனித இனம் தோன்றிப் பலகாலம், மனித வாழ்க்கை ஆத்மாவை மையமாக கொண்டே  வாழ்ந்திருக்க வேண்டும். அத்னால், உயர்ந்த எண்ணங்களும், பரந்த பார்வையும், ஆழமான அன்பும், உலகத்தில், அந்தக்காலங்களில் இருந்திருக்க வேண்டும்.  இதைத் தான், வேறு யுகம் என்று சொல்லுகிறோமோ.  

 

ஒரு கால கட்டத்தில்,  மயக்கம் காரணமாக , திடீரென்று  ஒரு இறக்கம் எற்பட்டிருக்கிறது.. ஆத்மாவை மையமாகக் கொண்ட வாழ்வு, உடலை மையமாகக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும் போது, ஒரு  பெரிய,ஆழமான் பள்ளத்தாக்கில் மனித சமுதாயம் வீழ்ந்திருக்க வேண்டும்.  அதிலிருந்து  வெளிவர முடியாமல், இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

அழுகாறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், இவை நான்கும் இந்தப் பள்ளத்தாக்கில்,  எரிந்து கொண்டிருக்கின்றன. ஒளியை நாடி அதில் விழுந்து இறக்கும் விட்டில் பூச்சிகளைப் போல, மனித சமுதாயம்
இந்த நான்கு எரிதல்களில் வீழ்ந்து த்ன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது.

வெளி உதவி இல்லாமல், பள்ளத்துலிருந்து வெளிவர முடியாது.   எப்போது யாரால், கைதூக்கி விடப்படப்  போகிறோமோ தெரியவில்லை.
பள்ளத்தில் வீழ்ந்து இருக்கிறோம் என்று அறிந்து கொண்டவர்களே சிறிதாய் இருக்கும் போது, அந்த சிறிய கூட்டமும், இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்வது தான் ஒரே வழி என்று தோன்றுகிறது.

நம்பிக்கையும் பிரார்த்தனையும் தான் நாம் பிடித்துக் கொண்டு ஏறும் கயிறுகளாக இருக்கும்.

No comments:

Post a Comment