வாழ்க்கைப் பாதையில் சில மைல் கல்கள்
- J.K. SIVAN
தள்ளாத வயது என்று ஏன் சொல்கிறோம்? எதுவோ நம்மை கீழே தள்ளி, நாம் விழுவதற்கு எந்த நேரமும் தயாராக இருப்பதால். எதுவுமே நம்மை தள்ளி விடும். அது தள்ளிவிடாமல் ஒருவரை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவரே நமக்கு உற்ற துணை. அவர் ஒருவர் தான் நம் மேல் அக்கறையோடு செயல் படுவார். யார் அவர்? அந்த ''அவர்'' நாம் தான். இது தான் எனக்கு தெரிந்த நல்ல ''நமக்கு நாமே'' திட்டம்
உன்னைப் பிடித்து வெளியே தள்ளாமல் உனக்கு என்று ஒரு இடம் இப்போதே பிடித்து வைத்துக் கொள் . உனக்கு அப்புறம் யார் அதை எடுத்துக் கொண்டு போனால் என்ன தெரியவா போகிறது?
பழைய நண்பன், உன்னை மணந்து நீ கிழவனாகியபோது தானும் கிழவியாகிய ஒரே பழைய மனைவியை தான் சொல்கிறேன். பின்னாலே தேவைப்படும் தேடவேண்டாம், என்று தான் ல் சின்ன வயசு கல்யாணத்தின் போதே ''ஜான் வாஸா '' (பொய்யாக மாப்பிள்ளை முடுக்கிக்கொண்டு காசி யாத்திரை போகும்போது) வாக்கிங் ஸ்டிக் தருகிறார்கள். அது தான் வயோதிகத்தில் மூன்றாம் கால்.
தைரியத்தை எப்போதும் இழக்காமல் உன் அன்றாட அத்தியாவசியமான தேவைகளை புரிந்து கொண்டு அனுசரித்து நட. மரணத்தை கண்டு அஞ்சவே வேண்டாம். அது கட்டாயம், நிச்சயம் வரும். எப்போது என்று அதுவே தீர்மானிக்கட்டுமே . நீ அதைபற்றி நினைக்காதே.
உடம்பு சீராக இருந்துவிட்டால் உள்ளம் தானாகவே அமைதி அடையும். வலி இல்லாவிட்டால் தான் வாதாபி கணபதி பாடமுடியும். பல்வலியோடு பல்லவி பாட முடியாதே.
ஆறுமுக சாமி அறுபது வயதாவதை உணர்ந்தான். வழுக்கைத்தலையை தடவி விட்டுக்கொண்டு . ரிட்டையர் ஆகிவிட்டான். சந்தோஷம் வேண்டுமென்றால் நாளையிலிருந்து ஆபிஸ் போகவேண்டாம், பயம் வேண்டாம்.
ஆனால் வங்கி கணக்கில் ஐந்து நம்பர் எண்ணிக்கையில் பணம் இருந்தால் தான் எவரையும் நம்பாமல் வாழக்கை ஓடும். கண்டிப்பாக இருக்க வேண்டும். நல்ல உணவை விரும்பி சாப்பிடவேண்டும்.
பிடித்த ஆடையை உடுத்திக் கொள் .
போதும் இந்த கட்டுப்பாடு. ஆபிசோடு போய்விட்டது. பிடிக்காதவனையும் பார்த்து குட் மார்னிங் சொல்ல அவசியம் இல்லை. கை கால் உன் வசம் இருக்கும்போதே. ஊர் சுற்றிப் பார். இனி லீவ் இல்லை என்ற சால்ஜாப்புக்கு இடமில்லை. நல்ல பிள்ளையாக கோவில் குளம் எல்லாம் போய் வழிபடு.
பையன் பெண் எல்லாருக்கும் உன்னாலான கடமையை செயது விட்டாய். அது அத்தனை
யும் இனிமேல் பேரன் பேத்திக்கும் செய்ய விருப்பம் தான். எல்லோராலும் முடியாது. முடிந்தவர்கள் செய்யட்டும் அதற்காக உடம்பு பர்ஸ் இரண்டும் இடம் கொடுத்தால் தான் அது முடியும். இல்லையேல் விட்டுவிடு. இது சுயநலம் இல்லை. இயலாமை.
காற்றில் அறுந்து போன பட்டம் சுதந்தரமாக எங்காவது பறந்து கொண்டு தான் இருக்கும். உன் மாஞ்சா கயிறு கண்ட்ரோல் கட்டுப்பாடு இனி அதற்கு இல்லை.
ஆச்சு 70 வருஷம் நெருங்கி விட்டாயா?
எத்தனை காலண்டர்கள் மாற்றியாகி விட்டது வீட்டில்.
உடல் தொந்தரவு கொடுக்கவில்லை என்றால் நீ தான் சக்ரவர்த்தி. உள்ளம் சோர்வடைய ஆரம்பிக்கும். அனுமதிக்காதே . ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இரு அதற்கு. சும்மா இருக்காத பிசாசு இந்த மனசு.
உடல் அசைவுகள் தளர்வதற்கு ரொம்பவும் இடம் கொடுக்காதே. நட. உட்கார். எழுந்திரு. தூங்கு. உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்வதற்கு விடாமல் பழக்கப் படுத்திக்கொள். முடிந்தால் மற்றவருக்கும் கொஞ்சம் உழை.
என்ன கொஞ்சம் நடை மெதுவாக இருக்கும். முன் போல் ஓடிப்போய் ட்ரெயின் ஏற்கமுடியாது. பஸ்ஸில் தொங்கிக்கொண்டு போகமுடியாது.
உன் அதிகார காலம் பறந்தோடி விட்டது. ''நான் சொன்னபடி தான் எல்லோரும் இந்த வீட்டில் நடக்கவேண்டும்'' என்ற ஹிட்லர் பாணி கூச்சல் உன்னிடம் இருந்து விடை பெறவேண்டும். பேரன் பேத்திகள் மேல் உனது ஆணைகளை செலுத்தாதே. கேட்கமாட்டார்கள். மூக்கை அனாவசியமாக அறுத்துக்கொண்டு அவமானப் படுவாய்.
ஞாபகம் வைத்துக்கொள்.. தொடர்ந்து நீ வாழ்க்கை எனும் வட்டத்தில் ஒரு முனையிலிருந்து மறு முனை செல்கிறாய். இதோ அடுத்த முனை அருகே வந்து விட்டது தெரிகிறதே. வாழ்க்கை முறையை சுலபமாக்கிக் கொள்
ஓஹோ இப்போது 75லிருந்து 80 பக்கம் நகர்கிறாயா? ''ஆஹா, வாய்யா என் கூட்டாளியே''
உடம்பு மக்கர் பண்ண ஆரம்பித்து விட்டதோ? ஆமாம் எத்தனை வருஷம் தான் அது அடிமையாக இருக்கும். அதற்கும் சுதந்திரம் பிடிக்காதா? இப்போது அது எஜமான். மனதளவில் இதை புரிந்து கொண்டு தயாராகு.
உன்னை ஊசியால், கண்ட கண்ட இடத்தில் துளை போட்டு குழாய் செருகும் சித்ரவதை பண்ண, உன் சேமிப்பை குறைக்க நிறைய ஆஸ்பத்திரிகளில் வெள்ளை கோட்டுக்கள் உன் வாழ்வில் வரும் நேரம் இது. எதிர்பார்த்து தயாராகு.
மறுமுனை கையெட்டும் தூரத்தில் வந்துவிட்டதா? கவலையே வேண்டாம். உன் ஆகாராதிகள், எண்ணங்கள் சீராக இருக்கட்டும். பயம் விலகட்டும். '' தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாண் என்ன முழம் என்ன'' பாட்டு ஞாபகம் இருந்தால் அடிக்கடி உரக்க பாடு. தைரியம் தானாகவே வரும்.
முதியோர் இல்லம் உனக்குமா? இல்லையென்றால் நீ அல்லவோ இந்நாட்டு மன்னன். பாவம், போய் அடிக்கடி அங்கே மற்றவர்களை சந்தித்து அவர்களோடு பேசு. அனுபவங்கள் சொல்லிக் கொடுக்கும். எந்த கேள்விக்கும் அதிலேயே பதில் அடங்கி இருக்கிறது. புத்திசாலி கெட்டியாக அதை பிடித்து விடுவான். நீ தான் கெட்டிக்காரன் ஆயிற்றே.
நிம்மதி மனத்தில் தான் இருக்கிறது. வெளியே இல்லை. எதையும் தாங்கும் இதயம் நமக்கு கொடுக்கப் பட்டிருக்கிறதே. ''வருவதை எதிர் கொள்ளடா''
ஒழிந்தபோதெல்லாம், சாப்பாட்டுக்கப்புறம், சின்ன தூக்கம் தூங்கி மாலை டீ, காப்பி வரும் வரை நீ வந்த வழியை திரும்பிப்பார். எவ்வளவு கஷ்டங்கள் நஷ்டங்கள் தாண்டி வெற்றி நடை போட்டிருக்கிறாய். அது உன்னை கடைசிவரை அப்படியே செல்ல விடுமே. அடுத்தவனுக்கு இது தெரியாது. புரியாது. உனக்கு உதவ அவனால் முடியாது.
நீண்ட வாழ்க்கை பயணப் பாதையின் முடிவுக்கு வந்துவிட்டேனா? ஆஹா என் மனம் சஞ்சலமில்லாமல் அமைதியாக இருக்கிறது. நோய் என்னை ஜெயித்துவிட்டதோ. வாழ்த்துக்கள். போட்டி என்றால் யாராவது ஒருவர் தானே ஜெயிக்க முடியும். நான் சிரித்துக் கொண்டே என் தோல்வியை ஒப்புக்கொள்வது தான் அழகு. அதுவே வெற்றி. அதுவே என் கம்பீரம்.
80 -100 வருஷங்கள் என் பின்னாலா....! ஆஹா !!
ஹே , மரணமே வா. உன்னை திரும்பிப் போக செய்வதற்கு என் சொத்தை இழக்க நான் தயாரில்லை. அது டாக்டருக்காகவோ ஆஸ்பத்திரிக்கோ நான் கஷ்டப்பட்டு சேமித்து வைக்கவில்லை. என் அருமை மகன் மகள், பேரன் பேத்திக்கு உதவினால் எனக்கு சந்தோஷம். ஆகவே என் காசு உனக்கும் உன் வெள்ளைக்கோட்டு ஏஜெண்டுகளுக்கும் தர மாட்டேன். உனக்கு ''நான் '' என்று தப்பாக நான் நம்பிய ஆகிய இந்த உடல் மட்டும் தான் இலவசம். வா. வா. நான் தான் உன்னை வரவேற்க எப்போதோ தயாராகிவிட்டேனே.
No comments:
Post a Comment