ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் ஒரு விளக்கம் 30
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏
சோழநாட்டு திவ்யதேசங்கள் திருக்குடந்தை (கும்பகோணம்) 01
பாலாலி லையில் துயில் கொண்ட
பரமன் வலைப் பட்டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிறை மேய்த் தாயனாய்க்
குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண்ணந்துழாய் கொண்டு
என் நெறி மென்குழல் சூட்டீரே
நாச்சியார் திருமொழி 13-2 (628)
என்று ஸ்ரீ ஆண்டாளால் காதற் பாமாலைச் சூட்டப்பட்ட மாயன்
கிடக்கும் குடந்தை என்னும் கும்பகோணம் கோவில்களின் நகரமென்றும்,
தஞ்சைத் தரணியில் தனிப்பெருமை வாய்ந்த பதியென்றும் எவருக்குஞ்
சொல்லாமல் எளிதில் விளங்கும்.
இத்திருக்குடந்தையில் பள்ளி கொண்டுள்ள ஆராவமுதப் பெருமாளைப்
பற்றி பிரம்மாண்ட புராணம், பாத்ம புராணம், பவிஷ்ய புராணம் போன்ற
நூல்கள் பரக்கப் பேசுகின்றன. பவிஷ்ய புராணம் 32 அத்தியாயங்களில்
பேசுகிறது. சோனாட்டில் காவேரி, அரிசொல் ஆறு (அரசலாறு) எனுமிரு
நதிகளுக்கிடையேயான அழகான ஷேத்ரமாகும்.
இப்பெருமானின் தோற்றத்தை ஆராயப் புகுங்கால் திருப்பதி
சீனிவாசனும், அரவணை கிடந்த ஸ்ரீரங்கநாதனும் தாமே வந்து இங்கு புகுருவர்.
மும்மூர்த்திகளில் சாந்தம் நிறைந்தவர் யார் என்று அறியச் சென்ற
ப்ருகு முனிவர், திருமாலின் நெஞ்சில் உதைக்க இதனால் அவமானம்
அடைந்த லெட்சுமி தன் மணாளனை விட்டுப் பிரிந்து இப்பூவுலகிற்கு வந்து
மறைந்திருக்கலானார். ப்ருகு முனிவரும் எம்பெருமானை உதைத்த பாவத்தைப்
போக்கவும், மனம் நொந்த திருமகளை சாந்தி அடையச் செய்யவும், திருமகளே
தனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டுமென்றும், தான் பணிவிடை செய்து
தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்து ஹேம
மஹரிஷி என்ற பெயரில் இத்தலத்தில் கடுந்தவம் செய்து வரலாயினர். திரு
இழந்த லோகத்தில் தாமும் இருக்க வொன்னா எம்பெருமான் லட்சுமி
தேவியைத் தேடி பூவுலகிற்கு வந்து திருமலையில் (திருப்பதியில்) ஒரு புற்றில்
மறைந்து வசிக்க, பத்மாவதி என்னும் கன்னியைத் திருமணம் செய்து
கொண்டார்.
கலியுகத்தில் பத்மாவதியை மணந்துகொள்வதாக எம்பெருமான்
இராமாவதாரத்தில் வாக்கு கொடுத்திருந்தார். இந்த பத்மாவதி தேவியே
இராமாவதாரத்தில் வேதவதி என்னும் பெயர் பூண்டிருந்தாள்.
(இவ்வரலாற்றினை திருப்பதி ஸ்தல வரலாற்றில் தெளிவாகக் காணலாம்)
ஹோல்காப்பூரில் மறைந்திருந்த லட்சுமி, நாரதர் வாயிலாக
பத்மாவதியை மணந்த நிகழ்ச்சியை அறிந்து மிக்க சீற்றத்துடன் திருமலைக்கு
வர, லட்சுமியின் கோபத்திற்குப் பயந்து எம்பெருமான் திருமலையினின்றும்
ஓடிவந்து இங்கு (கும்பகோணத்தில்) ஒரு பாதாளக் குகையில் தம்மை
மறைத்துக் கொண்டார். இன்றும் இக்கோவிலில் பாதாளச் சீனிவாசன் என்ற
பெயரில் பூமிக்கடியில் ஒரு திருச்சன்னதி உள்ளது. இவ்விதம் வேங்கடநாதன்
இங்கு வந்து சேர்ந்தார்.
எம்பெருமானை தொடர்ந்து இவ்விடத்திற்கு வந்த திருமகள் எங்கு
தேடியும் காணமுடியாததால், எவ்விதமாயினும் காணவேண்டுமென்றும் ஏக்கம்
மிகுந்து, (பாலா லிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு
என்னுமாப்போலே) இனி எம்பெருமானை காண்டற்கு ஒரே வழி அவனைக்
குறித்து தவமியற்றலே என்றெண்ணி அவ்விடத்தே இருந்த ஒரு
பொற்றாமரையில் ஒரு சிறு குழந்தையாகத் தோன்ற காத்திருந்த தருணம்
கண்முன் வாய்த்ததென்று அறிந்து ஹேம மஹரிஷி (ப்ருகு முனிவர்)
அக்குழந்தையை வாரியெடுத்து கோமளவல்லி என்ற திருநாமம் சூட்டி
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்து வரலானார்.
இஃதிவ்வாறிருக்க, இராமவதாரத்தில் பட்டாபிஷேகம் சூட்டிக்கொண்ட
ராமன், இலங்கையின்றும் தன்னுடன் வந்த வீடணனுக்குப் பிரியா விடை
கொடுத்தனுப்புங்காலை தம் முன்னோர்களான இட்சுவாகு வம்சத்தாரால்
கடுந்தவம் செய்து பிரம்மனிடமிருந்து பெற்று தினந்தோறும் ஆராதிக்கப்பட்டு
வந்த (ஆராதன விக்ரஹ) எம்பெருமானைக் கொடுத்துவிட்டார். ப்ரணா
வாக்ருதி, வைதீக என்ற இரண்டு விமானங்களால் ஒருங்கேயமைக்கப்பட்ட
அவ்வாராதன எம்பெருமானை வீடணன் கொண்டு வருங்கால், காவிரி,
கொள்ளிட நதியிடையில் அரங்கநாதனாக அசைக்க இயலாது, அரவணையில்
பள்ளிகொண்டுவிட, திகைத்து மலைத்து நின்று செய்வதறியாது கண்ணீர்
சிந்தினான். வீடணனை நோக்கி ப்ரணா வாக்ருதி என்னும் விமானத்துடன்
யாம் இங்கேயே பள்ளிகொள்ள விரும்பியுள்ளோம். நீ ஆண்டுக்கொருமுறை இங்குவந்து எம்மை வழிபட்டுச்
செல்லலாம், என்றார்.
ப்ரண வாக்ருதியின் இன்னொரு பிரிவான வைதிக விமானத்துடன் யாம்
குடந்தை சென்று ஹேம மஹரிஷிக்கு அருள் புரிந்து லட்சுமி தேவியையும்
மணக்கவிருக்கிறோம் என்று சொல்லி அர்ச்சா ரூபியானான்.
அப்போதே கையில் சார்ங்கம் என்னும் வில்லுடன் மகர
சங்கராந்தியன்று வைதீக விமானத்துடன் குடந்தை வந்திறங்கிய எம் பெருமான்
கோமள வல்லியை ஏற்றுக்கொண்டு (மணம் செய்து) ப்ருகு முனிவருக்கும்
பேரருள் புரிந்தார்.
இவ்விதம் ஸ்ரீரங்கநாதனும் இவ்விடம்வந்து சேர்ந்தார்.
ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் திருக்குடந்தை (கும்பகோணம்) திவ்யதேசம் தொடரும் ....
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் ஒரு விளக்கம் 31
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏
சோழநாட்டு திவ்யதேசங்கள் திருக்குடந்தை (கும்பகோணம்) 02
மூலவர்
சாரங்க பாணி, ஆராவமுதன் சயனதிருக்கோலம், கிழக்கு நோக்கிய
திருக்கோலம்.
தாயார்
கோமளவல்லி
உற்சவர்
பெயர்களே
தீர்த்தம்
ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
விமானம்
வைதிக விமானம்
காட்சி கண்டவர்கள்
ஹேம மஹரிஷி
சிறப்புக்கள்
எண்ணற்ற சிறப்புக்களை கொண்டது இத்திருக்கோவில்
1. மொத்தம் 52 பாசுரங்களில் முதலாழ்வார்கள் மூவருடன்
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள்
ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
திருமலைக்கும் அரங்கத்திற்கும் அடுத்து இங்குதான் ஆழ்வார்களின்
மங்களாசாசனம் அதிகம். அரங்கம் 11, திருமலை 10, இங்கு உள்ள
ராஜகோபுரம் உயரத்தில் மூன்றாவதாகும். முதலாவது ஸ்ரீரங்கம் 236 அடி
உயரம் ஆகும். இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் உயரம் 165 அடி ஆகும். 150 அடி
உயரமுள்ள இத்தலத்தில் ராஜகோபுரம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.
2. இந்நகர் ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக
விளங்கியது.
3. 108 திவ்ய தேசங்களில் இத்தலத்திற்கு மட்டுமே உபய பிரதான
திவ்ய தேசம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது மற்ற ஸ்தலங்களைப்
போலன்றி இங்கு மூலவருக்குள்ள சகல மரியாதைகளும் சிறப்புக்களும்
உற்சவருக்குமுண்டு. இருவரும் ஒப்பிலா அழகில் திளைத்தவர்கள். உபயமாகப்
பயன்படுவதே இங்கு பிரதானமானதாகவும் ஆவதால் இதற்கு உபயப் பிரதான
திவ்ய தேசம் என்று பெயர்.
4. வடஇந்தியாவில் 12 ஆண்டுகட்கு ஒரு முறை கும்பராசியில்
குருவரும் காலத்தில் கும்பமேளா கொண்டாடப்படுவதைப் போல் 12
ஆண்டுகட்கு ஒருமுறை சிம்மராசியில் உள்ள மக நட்சத்திரத்தில் வியாழன்
வரும் காலத்தில் இங்கு மகாமகம் என்னும் நீராடல் விழா
கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளான கங்கை,
காவேரி, யமுனை, ஸரஸ்வதி, கோதாவரி, நர்மதா, கிருஷ்ணா, சிந்து, சரயு
முதலிய ஒன்பது நதிகளும் இங்குவந்து இந்த மகாமகக் குளத்தில் நீராடி
தங்கள் பாவங்களைப் போக்கி புனிதம் அடைகின்றனவாம். இச்சமயத்தில்
இச்சந்நதியில் உள்ள மகாமகப் பொற்றாமரைக் குளத்தில் நீராடுவது மிகப்
பெரிய புண்ணியமாகும். இந்த குளக்கரையில்தான் 9 நதி கன்னிகைகட்கு
அவர்களின் உருவத்திற்கொப்ப 9 சிலைகள் உள்ளன. இவ்வமைப்பு இங்கு
மட்டும் உள்ளது.
5. இத்தலத்தில் அமைந்துள்ள சித்திரைத்தேர் அல்லது சித்திரத்தேர்
எனப்படும் தேர் தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும்.
இத்தேரை திருமங்கையாழ்வாரே இப்பெருமானுக்கு அர்ப்பணித்தார். அழகிய
சித்திரங்களும், நுண்ணிய வேலைப்பாடும் நிறைந்தது இத்தேர்.
இத்தேரினையே மங்களாசாசனம் செய்வது போல் திருவெழு கூற்றிருக்கை
என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார். தேரின் உருவமைப்பை ஒத்தான பாடல்களைக் கொண்ட இத்திருவெழு கூற்றிருக்கை ரதபந்தம் என்ற பெயரில்
அழைக்கப் படுகிறது.
ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் திருக்குடந்தை (கும்பகோணம்) திவ்யதேசம் தொடரும் ....
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் ஒரு விளக்கம் 32
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏
சோழநாட்டு திவ்யதேசங்கள் திருக்குடந்தை (கும்பகோணம்) 03
6. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுப்பதற்கு இப்பெருமானே
காரணமாக இருந்ததாகக் கூறுவர். நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த
நாதமுனிகள் இப்பெருமானை தரிசிக்க வந்தபோது இவரைப்போலவே
எம்பெருமானை தரிசிக்க வந்த சில பக்தர்கள் "குழலின் மலியச் சொன்ன
ஓராயிரத்துள் இப்பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய்
நோக்கியர்க்கே" என்ற பாசுரத்தை இசைத்துக் கொண்டு வந்ததைக் கேட்ட
நாத முனிகள், ஆயிரம் பாக்களுண்டோ என்று ஆச்சரியப்பட்டு அவைகளை
ஒன்றுவிடாமல் சொல்லுமாறு கேட்டார். அதற்கவர்கள் இந்த பத்துப்
பாசுரங்கள் தவிர வேறு எந்தப் பாசுரமும் தமக்குத் தெரியா தென்றும்.
இவைகள் ஆயிரம் பாக்கள் மட்டுமன்று மொத்தம் நாலாயிரம் ஆகுமென்று
எடுத்துரைக்க, இதைக்கேட்ட நாத முனிகள் மிகவும் ஆச்சரியத்துடன் இந்த
நாலாயிரத்தையும் தொகுப்ப தெங்ஙனம் என்ற சிந்தனையில் அங்கேயே
துயின்றுவிட அவரது கனவில் வந்த எம்பெருமான் நாலாயிரத்தை தொகுக்கும்
பொருட்டு நாதமுனிகளை ஆழ்வார் திருநகரிக்கே போகுமாறு பணித்ததாகவும்,
அவ்வாறே குருகூர் வந்தடைந்த நாத முனிகள், நம்மாழ்வாரைக் குறித்துத்
தவமிருந்து இறுதியில் நம்மாழ்வாரின் தரிசனத்துடன் நாலாயிரத்தையும்
தொகுத்து நற்றமிழ் உலகுக்கு தெய்வீகப் புகழ் சேர்த்துவிட்டார்.
ஆராவமுதன் என்று பெயர் கொண்ட இப்பெருமான் ஆழ்வார்களின்
பாக்களைத் தொகுப்பதற்கு காரணமாக இருந்தமையால்
ஆராவமுதாழ்வாரென்ற பெயரையே இப்பெருமானுக்குச் சூட்டலாயினர்.
இக்கதை குருபரம்பரையில் காட்டுமன்னார்குடியில் என்று காணப்படினும்
ஆராவமுதாழ்வான் என்ற திருநாமம் இங்கு உள்ள பெருமாளை
ஊர்ஜிதப்படுத்தும்.
7. திருமழிசையாழ்வார் இப்பெருமாளை நோக்கி இலங்கைக்கு நடந்த
வருத்தத்தால் கால்கள் நொந்து களைத்துப்போய் படுத்துள்ளீரோ,
வராஹரூபியாய் உலகைத் தாங்கிய களைப்போ, என்று கேட்டுகிடந்தவாறே
எழுந்திருந்து பேசு கேசவனே என்று பாடியதும், சற்றே எழுகின்ற
திருக்கோலத்தில் புஜத்தைச் சாய்த்து எழுந்திருக்க முயல்வது போல் காட்சி கொடுத்தாராம். இன்றும் இதுபோல்
சாய்ந்தவாறே எழுந்திருக்க முயலும் திருக்கோலத்தில்தான் காட்சி தருகிறார்.
இந்த நிலைக்குத் தான் உத்தனன் சாயி (சாய்ந்து எழமுயலும் திருக்கோலம்)
என்று திருப்பெயர்.
"நடந்த கால்கள் நொந்ததோ நடுங்கு ஞால மேனமாய
கிடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச்சுரம்
கடந்த கால் பரப்பிக் காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்த வாறெ யெழுந் திருந்து பேசு வாழி கேசவனே"
பெருமாள் எழ ஆரம்பித்ததும், ஐயோ வீணாக நாம் சிரமப்
படுத்திவிட்டோமே என நினைத்த ஆழ்வார், எழுந்திருக்க முயன்ற
எம்பெருமானை நோக்கி வாழி கேசவனே என்றார். அப்படியே எழ முயன்ற
சாய்ந்த திருக்கோலத்திலேயே இருந்துவிட்டார்.
8. 150 அடி உயரமுள்ள ராஜகோபுரம் இப்பெருமான் மீது பக்திகொண்ட
லட்சுமி நரசிம்ம சுவாமி என்ற பக்தர் ஒருவரால் கட்டப்பட்டதாகும்.
9. இங்குள்ள சிங்கச் சின்னம் பொறித்த மண்டபம் பல்லவ மன்னன்
மகேந்திர வர்மனால் கட்டப்பட்டதாகும் (7ம் நூற்றாண்டு)
10. தாயார் கோமளவல்லி ஒரு போதும் வெளியில் உலாவராது
இறைவன் திருப்பணியிலேயே இடையறாது ஈடுபட்டிருப்பதால் படிதாண்டாப்
பத்தினி என்ற பெயரும் தாயாருக்குண்டு.
11. இங்குள்ள உற்சவமூர்த்தி சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும்
கையில் வைத்திருப்பதால் சாரங்கபாணி என்ற திருநாமம் உண்டாயிற்று.
சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை என்பது பெரியாழ்வாரின்
மங்களாசாசனம்.
12. வைணவ மத வளர்ச்சிக்கு ஒரு பெரிய மலைபோன்று விளங்கிய
கிருஷ்ணதேவராயரால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது.
13. முகலாயர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை கொள்ளையிட்டு
அழித்துவிட எத்தனித்துவிடுங்கால் நெய்வாசல் உடையார் என்னும் பக்தர்
தமது பக்தி மேலீட்டால் வைக்கோற்போரால் இப்பெருமானின் இருப்பிடத்தை மூடி
மாடுகட்டும் இடம் என்று சொல்லி அவர்களை மருளச் செய்து
திருப்பியனுப்பினார். நெய்வாசல் உடையார் வம்சத்தாருக்கு ஸாசனமும்,
மரியாதைகளும் இங்கு தொன்றுதொட்டு இருந்து வந்தது.
ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் திருக்குடந்தை (கும்பகோணம்) திவ்யதேசம் தொடரும் ....
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
No comments:
Post a Comment