Tuesday, August 13, 2019

Srirangam temple 7th,6th,5th & 4th prakarams

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்  ஒரு விளக்கம் 07

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

சோழநாட்டு திவ்யதேசங்கள் ஸ்ரீரங்கம்  07

7 வது திருமதில் 

     இதற்கு பூலோகம் என்று பெயர். இதற்கு ராஜவீதி, மாட மாளிகை வீதி,
சித்திரைத் திருவீதி எனவும் பெயர்கள் உண்டு. இது தற்போது கடைகள்,
வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் சூழ ஒரு குறுநகரம் போல் தெரிகிறது.
இதில் ஒரு கண்ணன் சன்னிதி, ஒரு ஆஞ்சநேயர் திருக்கோவில், 
வானமாமலை மண்டபம் ஆகியன உண்டு. 

6வது திருமதில் 

     புவர்லோகம் என்று அழைக்கப்படும் இத்திருச்சுற்று திருவிக்கிரமன்
திருவீதி என்று அழைக்கப்படுகிறது. இது ஜவுளிக்கடைகளும்,
பாத்திரக்கடைகளும் நிறைந்து ஒரு பஜார் மாதிரி அமைந்துள்ளது. இந்த
வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப்போகும் காரணத்தால் இதற்கு 
உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர். இதில்தான் யானைகட்டும்
மண்டபம் உள்ளது. ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக்
கவனித்த மடம் இதில்தான் உள்ளது. இது இன்றும் ஸ்ரீரங்கநாராயண
ஜீயர்களின் மடம் என்ற பெயரிலேயே வழங்கி தொன்று தொட்டு ஜீயர்கள்
பரிபாலனத்திலேயே இருந்து வருகிறது. அஹோபில மடம், மணவாள
மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது. மணவாள மாமுனிகள்
தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான்
காட்டியருளினார். 

     இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து
பார்த்தால் 5வது திருச்சுற்றுத்துவக்கத்திலே உள்ள வெள்ளைச் சுதைகளால்
ஆன வெள்ளைக்கோபுரம் பொலிவுடன் தோன்றும். 

5வது திருமதில் 

     ஸு வர் லோகம் என்று அழைக்கப்படும் இந்த 5வது திருச்சுற்றில்
நுழையும் நுழைவாசலுக்கு நான்முகன் கோட்டை வாசல் என்று பெயர். இதைச்
சோழமன்னன் அகளங்கன் என்பவன் கட்டியதால் அவன் பெயராலேயே
அகளங்கன் திருச்சுற்று என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஆண்டாள்
சன்னிதி பேரழகு வாய்ந்ததாகும். பெருமாள் உலா சுற்றி வந்ததும் திருஷ்டி
கழித்து கொள்ளும் பழக்கம் உண்டு. அது இச்சுற்றில் உள்ள ஒரு நாலுகால்
மண்டபத்தில்தான் நடைபெறுகிறது. திருஷ்டி கழிப்பதென்பது ஒரு சிறிய
குடத்தின் மேல் ஒரு சிறு கிண்ணம் வைத்து அதில் கனமான திரியிட்டு 
ஏற்றிப் பெருமாளுக்கு எதிரில் ஏற்றியிறக்குவதுபோல் சுற்றுவர். இந்நிகழ்ச்சிக்கு
திருவந்திக்  காப்பு என்று பெயர். இத்திருச்சுற்றில் எட்டுக் கரங்களுடன் கூடின
வரப்பிரசாதியான சக்கரத்தாழ்வார் சன்னதி, பேரழகு பொலியத் தோன்றும்
வேணுகோபால கிருஷ்ணர் சன்னதி போன்றனவும் உண்டு. ஸ்ரீரங்க விலாச
மண்டபம் என்று ஒரு மண்டபமும், வைகாசித் திருவிழா நடைபெறும் வஸந்த
மண்டபமும் தாயார் சன்னதியும் இதில்தான் உள்ளது. 

     தாயார் சன்னதிக்கு எதிரில்தான் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய
கம்பர் மண்டபம் உள்ளது. இங்குள்ள மாடக்கோயிலில்தான் மேட்டழகிய
சிங்கர் எனப்படும் நரசிங்கப் பெருமாள் சன்னிதியும் உள்ளது. 

     ஆயிரங்கால் மண்டபமும் இதில்தான் உள்ளது. இதன் நடுவே உள்ள
திருமாமணி மண்டபத்தில்தான் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று
தொடங்கும் திருவாய்மொழித்திருநாள் உற்சவம் நடைபெறும். அவ்வமயம்
திருவாய் மொழி சேவிப்பதும், அரையர் சேவையும் தெய்வீகமான
நிகழ்ச்சிகளாகும். இராமானுஜரின் திருமேனி வைக்கப்பட்டுள்ள கோவிலும் 
இந்த சுற்றுக்குள்தான் உள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார் ஆகியோருக்கும் கூரத்தாழ்வாருக்கும் பிள்ளை
லோகாச்சார்யாருக்கும் இதில்தான் சன்னிதிகள் உள்ளது. 

4வது திருமதில்

     மஹர்லோகம் எனப்படும் 4வது திருச்சுற்றுக்கு திருமங்கை மன்னன்
சுற்று, ஆலிநாடான் வீதி என்றும் பெயர். இம்மதில் திருமங்கையாழ்வாரால்
கட்டப்பட்டது. இதன் நுழைவாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று
பெயர். இதில்தான் பிரம்மாண்டமான கருடாழ்வார் சன்னிதி உள்ளது. 

     இதற்கெதிரே உள்ள பரமன் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் மிக்க 
கலை நுணுக்கம் வாய்ந்தவை. இதில் முதலாழ்வார்கள் மூவரின் சன்னிதி,
நம்மாழ்வார் சன்னிதி, திருமழிசையாழ்வார் சன்னதி, திருக்கச்சி நம்பிகள்
சன்னிதி போன்றனவும் உண்டு. மிகச்சிறந்த சந்திர புஷக்ரணியும் இதில் தான்
உள்ளது. பிரசாதம் விற்கும் இடமும் இங்குதான். சொர்க்க வாசல் என்பதும்
இதில் தான். வேறெங்கும் காண்டற்கரிய மருத்துவப் பெருமாளான தன்வந்திரி
சன்னிதியும் இதில்தான் உள்ளது. 

3வது திருமதில் 

     ஜநோலோகம் எனப்படும் இந்த 3வது திருச்சுற்றுக்கு ஆர்யபடர்வாசல்
என்று பெயர். முன்பு ஒரு காலத்தில் ஆர்யர் என்னும் வடநாட்டு
அந்தணர்கள் இவ்வாசலைக் காவல்புரிந்து வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
இதற்கு குலசேகரன் திருச்சுற்று   என்றும் பெயர். இந்தச்சுற்றில்தான் தங்கமுலாம் பூசப்பட்ட
துவஜஸ்தம்பம் (கொடிமரம்) உள்ளது. இது 102 தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட
கொடிமரம் ஆகும். விஜயநகரத்து மன்னர்களால் இக்கம்பம்
உண்டாக்கப்பட்டதென அறியமுடிகிறது. உள்கோடை மண்டபம், பரமபதவாசல்
டோலோத்ஸ்வ (ஊஞ்சல் உற்சவம்) மண்டபமும் இதில் உண்டு.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும் ஸ்ரீரங்கம்  திவ்யதேசம்  தொடரும் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment