Thursday, August 1, 2019

Srimad Bhagavatam skanda 10 adhyaya 1 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1௦- அத்தியாயம் 1

பூமிதேவியானவள் பெயரால் மட்டும் அரசர்களாகவும் உண்மையில் அசுர குணம் கொண்டவர்களாகவும் இருந்தவர்களால் ஆக்ரமிக்கப்பட்டு அதிக பாரத்தால் வருந்தி பிரம்மதேவரை சரணம் அடைந்தாள். பிரம்மா அவள் கூறியதைக் கேட்டு அந்த பூமிதேவியுடனும் தேவர்களுடனும் முக்கண்ணருடனும் பாற்கடலை அடைந்தார்.

அங்கு சென்று உலக நாயகரும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவரும் ஆன நாராயணனை ஒன்றுபட்ட மனதுடன் புருஷசூக்தத்தைச் சொல்லிப் போற்றி வழிபட்டார். பிரம்மா அப்போது சமாதி நிலையில் ஆழ்ந்து அசரீரியாக எழுந்த வாக்கைக் கேட்டு தேவர்களிடம் கூறினார்.

" ஏற்கெனவே பூமிதேவியின் மனக்கவலையை பகவான் உணர்ந்திருக்கிறார். நீங்கள் உங்கள அம்சங்களால் பூமியில் பிறந்து பகவான் பூபாரத்தைப் போக்குவதற்கு எவ்வளவு காலம் சஞ்சரிப்பாரோ அவ்வளவு காலம் பூமியில் இருக்க வேண்டும். பகவான் வசுதேவரின் மகனாக அவதரிக்கப் போகிறார்.தேவஸ்த்ரீகளும் அவரை மகிழ்விக்க பூமியில் பிறக்கட்டும்.

பிரம்மா இவ்விதம் தேவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு பூமி தேவியையும் தக்க வார்த்தைகளால் சமாதானம் செய்து தன் இருப்பிடம் ஏகினார்.

இப்போது தேசிகர் யாதவாப்யுதயத்தில் இதை எவ்வாறு வர்ணிக்கிறார் என்று பார்ப்போம். 
பாற்கடலுக்கு சென்ற தேவர்கள் பகவானை துதித்தனர். பின்னர் பகவான் கருணை மேலிட்டு அவர்கள் முன் தோன்றினார். தேசிகரின் வர்ணனை பின் வருமாறு.

கருத்த மழை மேகம் வெண்மையான சரத் கால மேகத்தின்மேல் காணப்பட்டதைப் போன்று ஆதிசேஷன் மேல் சயனித்து கையில் தாமரை மலருடன் காட்சியளிக்கும் ஸ்ரீதேவியுடன் காட்சியளித்தார். அழகான மிருதுவான ஆபரணங்கள் அவர் மேனியில் மலர்களைப்போல் இருந்தன. அவர் மேனி கல்யாணகுணங்களாகிய பூந்தோட்டமாகவும் அவருடைய ஆபரணங்கள் அதில் உள்ள மலர்களாகவும் தோன்றினவாம்.

இதில் தேசிகரின் பக்தி வெளிபடுகிறது. ஒரு சிறந்த பக்தனுக்கு பகவானுடைய விக்ரஹம் உண்மையில் அவர் மேனியாகவே தென்படுவதால் அதன் மேல் மெல்லிய மலர்களை அன்றி அவைகளின் காம்புகள் கூட இருக்க சகியான் அல்லவா?

பகவானின் ஒவ்வொரு அவயவமும் ஒன்றுக்கொன்று அழகில் போட்டியிடுவதால் அவனுடைய ஆபரணங்களுக்கு அவை அழகு சேர்க்கின்றனவே அன்றி அவைகளால் அவனுக்கு அழகு சேர்வதில்லை என்கிறார். 
அவனுடைய் மகிமை என்னும் கடலில் இருந்து எழும் மரகதக்கல் போல் பிரகாசித்தானாம். 
என்றும் மறையாத சூரியன் போலவும், என்றும் குறையாத சந்திரன் போலவும், எல்லையற்ற அமுதக்கடல் போலவும் தோன்றிய அவனது கருணை வற்றாத அமுதம் போல தேவர்களுக்கு அருள் செய்தது. அவனுடைய அபயகரமும் மலர்ந்த புன்சிரிப்பும் அவர்கள் கோரிக்கையை தெரிவிக்கும் முன்னமே அவர்களுக்கு அதை தருவதற்கு சித்தமாக உள்ளதை தெரிவித்தது.

இங்கு ஒரு அழகான உருவகத்தைப் பார்க்கிறோம். கடல் சூழ்ந்த பூமி பூதேவியின் மேகலை ஆகவும், பகவான் அதன் நடுவில் பதிக்கப்பட்ட பதக்கமாகவும் உருவகப்படுத்தப்பட்ட பின் தேவர்கள் பூமிதேவியை அரக்க குணம் கொண்ட அரசர்களிடம் இருந்து விடுவித்து ஆதிசேஷனின் சூடாமணியைபோல் பிரகாசிக்கச் செய்ய வேண்டும்,. அதாவது பூமி பாரமாக இல்லாமல் சூடாமணியைப் போல் இருக்க வேண்டும் என்று கோரினர்.

பூதேவியும் பகவானைப் பணிந்து தன் நிலையைக் கூறினாள். தேசிகர் பூதேவியை அற்புதமாக வர்ணிக்கிறார். அவள் பகவானுடைய மாயையைப் போல் அழகானவளாக காட்சி அளிக்கிறாள். 
அதைக்கேட்ட பகவான் பாஞ்சஜன்யத்தை ஒக்கும் த்வனியால் தன்னை நம்பினோர் என்றும் துன்பம் அடைவதில்லை என்று கூறி தான் பூமியில் அவதாரம் எடுக்கப் போவதாகவும் துஷ்ட க்ஷத்ரியர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டப்போவதாகவும் கூறி அவர்களை அரசர்களாகப் பிறந்து தன் செயல்களின் பயன்களை அனுபவிக்குமாறு கூறினார். பிறகு தேவகியின் கர்பத்தில் பிரவேசிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்

  

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1௦- அத்தியாயம் 1(தொடர்ச்சி)

பின்னர் சுகர் கண்ணன் பிறப்பிற்குக் காரணமான சம்பவங்களைப் பற்றிக் கூறலானார்.

சூரனின் மகனான வசுதேவர் கம்சனின் சகோதரியான தேவகியை மணந்தார். அப்போது தன் சகோதரியிடம் கொண்ட அன்பால் கம்சன் அவர்கள் இருவரையும் தேரிலேற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் ஒரு அசரீரி வாக்கு முழங்கக் கண்டான்.அது கூறியதாவது, "மூடனே , இவளின் எட்டாவது குழந்தை உனக்கு யமனாகப் போகிறது." 
அப்போது பாவியும் துஷ்டனுமான கம்சன் தேவகியைக் கொல்ல முயற்சித்தான்.

அந்தப் பாவகரமான செயலை கொஞ்சம் கூடத் தயங்காமல் செய்யத் துணிந்த அவனைத் தடுக்க முற்பட்ட வசுதேவர் அவளால் அவனுக்கு ஆபத்தில்லையாதலால் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறி சமாதானப் படுத்தினார். கம்சனும் அதை ஒப்புக்கொண்டு அவளை விட்டு விலகினான்.

அப்போது வசுதேவர் மனதில் தோன்றியது என்னவென்றால், வரவிருந்த ஆபத்தைத் தடுத்து ஒரு பாவமும் அறியாத தேவகியை காப்பாற்றியாகிவிட்டது. இனி வரப்போவதை யார் அறிவார்? தேவகிக்கு குழந்தைகளே பிறக்காமல் போகலாம். அல்லது அதற்குள் கம்சனே இல்லாமல் போகலாம். தெய்வச்செயலைத் தடுத்து நிறுத்துவார் யார். இவ்வாறு எண்ணியவராக மனதில் கோபமும் வருத்தமும் எழுந்தாலும் அதை மறைத்துக் கொண்டவராக கம்சனிடம் இனிய முகத்துடன் பேசினார்..

தேவகியின் முதல் பிள்ளை பிறந்த போது வசுதேவர் தான் கொடுத்த வாக்குப்படி அந்தக் குழந்தையை கம்சனிடம் எடுத்துச் சென்றார். கம்சன் எட்டாவது குழந்தையால்தானே தனக்கு பயம் என்றெண்ணி அதைக் கொல்லாமல் அவரை எடுத்துச் செல்லுமாறு கூறினான். ஆனாலும் வசுதேவருக்கு கொடியவனான் அவன் வார்த்தையில் நம்பிக்கை பிறக்கவில்லை.

பிறகு நாரதர் பகவானின் திருவுளத்தின்படி கம்சனிடம் வந்து கம்சனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் தவிர மற்ற யாதவர்கள் எல்லோரும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றும் அவன் முடிவுக்காக தேவகியின் எட்டாவது குழந்தையாக பிறக்கப்போகும் பகவானை எதிபார்த்துக் காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார். உடனே பயம் கொண்டு கம்சன் தேவகிக்குப் பிறந்த எல்லா குழந்தைகளையும் கொல்ல முற்பட்டான்.

பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்ற பின்னர் ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்பமாகத் தோன்றியபோது பகவான் அந்த கர்பத்தை தேவகியினிடம் இருந்து எடுத்து கோகுலத்தில் நந்தகோபரின் பாதுகாப்பில் இருந்த வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோஹிணியின் கர்பத்தில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தார். அப்போது பகவானின் அவதார சமயம் நெருங்கியது.

No comments:

Post a Comment