Wednesday, July 17, 2019

The stuti of Godha

கோதைத் துதி-27
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 12.06.2019)

வாலி வதம் முடிகின்றது..!  

சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றபோது மழைக்காலம்..!  

பட்டாபிஷேகம் முடிந்து வாலியிடத்து இராமபிரான் , "இந்த வர்ஷாகாலம் முடிந்து இலங்கைக்குப் படையெடுப்போம்..!  அது வரை ராஜ்யபோகத்தினை அனுபவித்துக் கொண்டிரு..!" என்கிறார்.  

சம்மதித்த சுக்ரீவன் போகத்தினை அனுபவிக்கின்றான் - காரணமான ஸ்ரீஇராமனது ஆணையை மறந்து விடுகின்றான்..!

சீதையில்லாத இராமன் சீறுகின்றான்..!  

இலக்குவனை நாணொலி எழுப்பி அச்சுறுத்தச் சொல்கின்றான்..!  

சுக்ரீவனது மனைவி தாராக் கேட்கின்றாள், " "கிம் கோபமூலம் மநுஜேந்த்ர புத்ர!" ? (தாங்கள் சீறிவருவதன் காரணம் யாது?.) என்கிறாள்..!  
இராமா..! உன் க்ஷமா குணத்திலான்றோ சற்று மறந்து அபசாரப்பட்டு விட்டோம் - அதற்காக தாங்கள் இவ்வளவு சீற்றம் கொள்ளலாகுமோ..? என்று பொருள்பட கேட்கின்றாள்..!

" என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது
என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருதவாய்ச்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே?" (2938 - திருவாய்மொழி)

என்கிறார் ஸ்வாமி நம்மாழ்வார்..!  

எலும்பில் நுால் கோர்த்துத் தைத்தால் எவ்வளவு ஹிம்ஸையாகயிருக்குமோ அவ்வளவு ஹிம்ஸை நின் கருணையின்மையால் அவதிப்படுகின்றேன்..!  (இங்கு எலும்பாவது நம் சரீரமாகும்..!  நுாலானது சுவாசிக்கும் காற்றாகும்..! )

நான் செய்த பிழையையே நினைத்துக்கொண்டிருக்கின்றாயே..!

உன்னுடைய மன்னிக்கும் குணத்தினை மறந்துவிட்டாயே..!

 உன் உயரிய க்ஷமா குணத்தினை நீ மறந்தாற் போன்று, என் குற்றங்களையும் நீ மறக்கலாகாதா..? என்கிறார்..!

நஞ்சீயர் சொல்கின்றார், " ஸஹதர்மசரீம் சௌரேஸ் ஸம்மந்த்ரித ஜகத்திதாம். அநுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாதநிக்ரஹாம்" - ஸஹதர்மினியான பெரியபிராட்டியார் அனுக்ரஹமே அறிந்தவள்..! "பிழை செய்யாதவன் இப்புவியினில் இல்லை." எனும் பரிவோடு ஜீவாத்மாக்களுக்காக பரிபவள்..!
இத்தகைய பிராட்டியின் குணத்திற்கு மாறாக நீ என்னை புறக்கணித்தல் தகுமோ..?  எனக்கு அருளாத திருமாலைப் பிராட்டியார் பின்னர் ஏறெடுததும் நின் திருமுகத்தினைப் பார்ப்பாளோ..?  எனும் கருத்துத் தொனிக்கப் பாடுகின்றார்..!

ஆனால் ஆண்டாளின் பாணியே வேறு..!

"நீ வாயினால் பாடு..!  
மனதினால் சிந்தனை செய்..!  
துாயவனாய் இரு..!  
துாய மலர்களால் அர்ச்சித்து வா..!
கவலை வேண்டாம்..!

நீ முன்பு செய்த பிழைகளும், இனி அறியாமல் செய்த பிழைகளும், தீயினில் இட்ட துாசு போன்று, ஒன்றும் இல்லாது போகும்..!" என்று அடித்துச் சொல்கின்றாள்..!

ஏனெனில் அரங்கனிடத்து அவளுடைய செல்வாக்கு அத்தகையது..!

" மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்" (478)

ஸ்வாமி தேசிகன் ஆண்டாளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார்..!  அடியேன் பலகாலும் குற்றம் செய்தவன்; குற்றமே செய்துகொண்டு இருப்பவன்..!  ஆனாலும் நீ என்னைப் புறக்கணிக்கப்போவதில்லை..!  தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை கடித்துவி்ட்டால் தாய் அந்த சேயைக் கோபிப்பாளோ..? நீ எந்தன் தாய்..! என்று புளகாங்கிதமடைகின்றார்..!

ஜாதாபரா தமபி  மா மநுகம்ப்ய  கோதே
 கோப்த்ரீ  யதி   த்வமஸி   யுக்தமிதம்  பவத்யா :  |
வாத்ஸல்ய  நிர்ப்பரதயா  ஜநநீ  குமாரம்
ஸ்தந்யேந   வர்த்தயதி  தஷ்ட பயோதராபி  ||27||

அடியேன் பலகாலும் குற்றம் செய்தவன்!
குற்றமே செய்துகொண்டு இருப்பவன் என்றாலும், நீ, என்னைப் புறக்கணிப்பதில்லை !. காக்கின்றாய்.!
இது உனக்கு ஏற்ற செயல்..!
தாயார், குழந்தையிடம், அளவில்லா அன்பு கொண்டவள்...! அதன் பசி அறிந்து, பாலூட்டுபவள்..! ஆனால், குழந்தைக்கு, தாயார் செய்யும் உபகாரமும்,  தாயாரின் அன்பும் பாசமும், எப்படித் தெரியும் ? ஸ்தன்ய பானம் செய்யும்போது , குழந்தை கடித்தாலும், இதற்காக அந்தக் குழந்தையைத் தாயார், தூக்கி எறிந்து  விடுவதில்லையே !    
வேறு உபாயத்திலும் இறங்குவது இல்லையே !முன்போலவே அல்லவா, ஸ்தன்ய பானம் கொடுக்கிறாள் .  ஆஹா , இது உனக்குத் தகுந்ததே !
(உருபட்டூர் ஸ்ரீ சௌந்திரராஜய்யங்கார் அவர்களின் தமிழாக்கம்..)

தாஸன்
-முரளீ பட்டர்
#கோதைத்துதி#
(இன்று காலை 12.06.2019 அதிகாலை மேலச்சித்திரை வீதியில், ஸ்ரீ உ.வே.வி.எஸ்.கருணாகராச்சார் தலைமையில், நடாதுார் ஆழ்வான் திருமாளிகையில், ஸ்ரீஆண்டாள்-ரங்கமன்னார்-கருடாழ்வார்  நடாதுார் ஆழ்வான்,  நடாதுார் அம்மாள் ஆகியோரின் திவ்யமங்கள   விக்ரஹங்கள் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது..! ஆண்டாளின் பூரண கிருபையினை உணரந்தேன்..)

No comments:

Post a Comment