Friday, July 26, 2019

Crazy mohan azhwaar

மறைந்துவிட்ட நண்பர் திரு.'க்ரேஸி' மோகன் அவர்கள் ஒரு "ஆழ்வாரே" என்று எனக்கு தோன்றுகிறது! மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும்! இருக்கும்போது யாருக்கும் தெரிவதில்லை....... இதுதான் உலகம்!!
இதோ, பின்வரும் சில வெண்பாக்களை உன்னிப்பாகக் கவனத்துடன் படிக்கவும்!:
"பெருமாளே சரிதானே"
—————————–
பால் குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்த்
தோல் குடத்தைத் தொத்த வரும் தீவீர வியாதியெலாம்

மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர் சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே, பெருமாளே சரிதானே….(1)

நாய் வால் நிமிர்த்தலுக்கு இணையான நாற்பதிலே
நோய்வாய்க் கிடந்து வளைந்த நேரத்தில்

தாய்போல் தேற்றித் தூக்கி நிறுத்த வல்ல
மாயா ஜால மருந்தாமே, பெருமாளே சரிதானே….(2)

கானல்நீர் இளமைக் காலம் கண்சிமிட்டும் நேரம்
கூனல் முதுகில் முதுமை மூப்பு மூட்டை பாரம்

நாணல் யமுனா நதி நாதன் திருநாமம்
பூணல் பொலிவாமே, பெருமாளே சரிதானே….(3)

முயலாமை கதையாக முடிகின்ற வாழ்க்கையின்
இயலாமை தன்னை இளமையிலே உணர்ந்து

செயலாவையும் ஸ்ரீரங்கனுக் களித்தால்
பயமில்லையாமே, பெருமாளே சரிதானே….(4)

கள் ஒழுகு மலர் தேடிக் கருவண்டு மொய்ப்பது போல்
உள் ஒழுகும் உணர்வுக்கு ஓடிவரும் ஒப்பில்லா

கள்ளழகன் கார்வண்ணன் காகுத்தன் கண்ணனென்று
தெள்ளமுதப் பிரபந்தம் சொல், பெருமாளே சரிதானே….(5)

சிலந்திதன் வலையில் சிக்கிடும் பூச்சியாய்ப்
புலன்கள் ஐம்பொறி புகுந்து புலம்பாமல்

நலம்தரும் நாராயணன் நாமம் சொன்னால்
பலன் பரம் பதமாமே, பெருமாளே சரிதானே….(6)

பத்தியம் இல்லாத பகாசுர வாழ்க்கையை
சத்தியம் என்றெண்ணி சஞ்சலம் அடைவோர்

நித்திய கல்யாண வைபவன் அருளால்
முத்தி அடைவாராமே, பெருமாளே சரிதானே….(7)

இல்லாததை இருப்பதென்று எண்ணிக் குவித்து
செல்லாத இவ்வாழ்வைச் செலவழிக்க முயலாமல்

மல்லாண்ட மணிவண்ணன் மலர்பதம் பற்றினால்
எல்லாமும் தெளிவாமே, பெருமாளே சரிதானே….(8)
….கிரேசி மோகன்…
இவற்றைப் படிக்கப் படிக்க என் மனம் ஒருபுறம் ஆனந்தத்தில் திளைக்கிறது......, அன்னாரின் அருமைத் புலமையை, கவித்துவத்தை நினைத்து! ஆனால் மற்றொரு புறம் ஆதங்கத்திலும், ஏன்..... ஆத்திரத்துடனேகூட பதைக்கிறது! "இத்துணை சிறப்பான வெண்பாக் கவிஞனை இறைவன் சடுதியில் நம்மிடமிருந்து பிரித்துவிட்டானே"!

(ஒரு ஆச்சரியமான கொசுறுத் தகவல் : திரு.'க்ரேஸி' மோகன் அவர்கள், கிட்டத்தட்ட 40 ஆயிரம் (!!!) வெண்பாக்களுக்கு மேல் எழுதியுள்ளார்! தெரியுமா??

No comments:

Post a Comment