Monday, July 8, 2019

7 fathers

அப்பாக்கள் தினத்தில் ஐந்து அப்பாக்கள் - J K SIVAN

இன்று சர்வதேச அப்பா தினமாம். ஐந்து வருஷங்களாக அப்பா தினத்தில் விடுமுறை. அரசாங்கம் பிரத்யேகமாக அப்பாவுக்காக எதையும் பரிந்து செய்யாது. அப்பாக்கள் செய்த புண்யத்தால் இந்த ஐந்து வருஷங்களாக அந்த நன்னாள் ஞாயிற்றுக்கிழமையாக பார்த்து வந்து கொண்டிருக்கிறது.

சாணக்கியர் எனும் கௌடில்யர் என்கிற பிராம்மணர் அதி புத்திசாலி என அனைவருக்கும் தெரியும். அவரது அர்த்த சாஸ்திரம் புஸ்தகம் படித்திருக்கிறேன். இவ்வளவு சிந்தனையா? இத்தனை ராஜ தந்திரமா? சாஸ்த்ர ஞானமா? என்று மூக்கின் மேல் விரல் வைக்க பண்ணுபவர். எத்தனை எதிர்ப்புகள் அவருக்கு. கடைசியில் எதிரிகள் சூழ்ச்சியால் உயிர் துறந்தவர். ஞானி. நமது ராஜாஜியை சாணக்கியர் என்பார்கள். அடுத்தது துக்ளக் சோ வும் கூட ஒரு ராஜதந்திரி, சாணக்ய மூளை உள்ளவர், என அழைக்கப் பட்டவர்.

இப்படிப்பட்ட சாணக்கியரிடம் யாரோ ''அப்பா என்பது யார்?'' என்று கேட்டிருக்கிறார்கள் ''
''அப்பா என்றாலே நான் சொல்கிற இந்த ஐந்து அப்பாக்கள் தான் '' என்கிறார் சாணக்கியர். அவர்கள் யார்?
கர்ம பலனாக ஒரு ஜீவன் உலகத்தில் பிறக்கிறது. அப்பாவாகவும் யாருக்கோ அது ஆகிறது. அப்பா என்கிற அந்த ஜீவனின் கடமை என்ன?

ப்ரம்ம வைவர்த்த புராணம் ஏழு அப்பாக்களை சொல்கிறது. இந்த ஏழு வித அப்பாக்கள் வித்யாசப்படு கிறார்கள். 
1. உணவை அளிப்பவன் அப்பா. அம்மா ஊட்டுவாள். ஆனால் அப்பாதான் எங்கோ சென்று யாருக்கோ ஸலாம் போட்டு உழைத்து சம்பாதித்து அரிசி உப்பு புளி பருப்பு வாங்கி வருபவன். அன்னதாதா. உணவின்றி ஒரு நாள் இருக்க முடியுமா. ''என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'' என்று அவ்வையார் பாடியிருக்கிறாளே. அப்பா இல்லை என்றால் சித்தப்பா பெரியப்பா என்று யாராவது இவ்வாறு அம்மாவையும் பிள்ளையையும் காப்பாற்றினால் அவன் கடவுள். பூஜிக்கத் தக்கவன். அப்பாவும் மகனும் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். பெண்ணுக்கு தான் அப்பா மேல் அதிக ஆசை என்று அநேகர் சொல்கிறார்கள். எனவே தான் நான் இணைத்திருக்கும் படத்திலும் அப்பா பெண்.

2. பயத்ராதா: பயத்தை போக்குபவன் of fear (Bhaya-trata , भयत्राता) அப்பா. 
பயம் என்பது மரணத்தின் நிழல். புலியைக் காட்டிலும் கிலி கொல்கிறதே. பயம் உண்மையானால் மரணமும் உண்மையானது.

''நீ கவலைப்படாதே, என்னிடம் விட்டுவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று நமது கவலைகளை, பயத்தை போக்குபவன் யாரா இருந்தாலும் அவன் அப்பா ஸ்தானத்தில் இருப்பவன். பகவானை அப்பனே என்று அதால் தான் வேண்டுகிறோம்.

3. ஒரு மனிதனுக்கு தனது மகளை கன்யாதானம் செய்து வைப்பவன் அப்பா. 
மாமனாரை இகழ்வோர்கள் இதை ரெண்டு மூன்று தரம் படிக்கலாம். தப்பில்லை. கன்யாதாதா. '' எவன் டீ உன்னை பெத்தான். கையிலே கிடைச்சா செத்தான்'' என்று ஒரு உபநிஷதப் பாடல் தமிழ் சினிமாவில் நிறைய டி. வி.யில் கேட்ட பாபத்தை எங்கே சென்று தொலைக்கப்போகிறேனோ? இதை கேட்ட காது ஒரு காதா?

4. குழந்தை தான் மனிதனுக்கு தந்தை என்று ஒரு பொன்மொழி கேட்டிருப்பீர்களே. 'Child is the father of man.' என்ன அர்த்தம்? குழந்தையாக உருவெடுப்பவனே அப்பாவாகிறான் அப்புறம் . குழந்தை தான் அப்பா. ஸ்ரீலங்கா தமிழர்கள், மற்றும் நம்மில் சில தமிழ் குடும்பங்களில் குழந்தைகளைக் கூட ''வாங்க போங்க'' என்று மரியாதை குறையாமல் அழைப்பதை பார்த்திருக்கிறேன். குழந்தை தான் அப்பா.

மனிதன் தான் ஒரு குழந்தைக்கு அப்பாவாகிறான். கல்யாண சடங்குகள் அர்த்தமுள்ளவை. ஒரு புது உயிர் உண்டாக காரணம் அப்பா. ஜநிதா, ஜன்மதா என்று சமஸ்க்ரிதம் அவனை போற்றுகிறது. அந்த அப்பனின் குணங்கள் தோற்றம் எல்லாவற்றையும் தான் புதிதாக உருவான உயிர் பெறுகிறது. அவனுக்காக ஒரு குழந்தை பெற்றுத் தந்து அருமையாக வளர்க்கும் பணி அவன் மனைவியை சேர்ந்தது. அவள் அம்மா ஆகிறாள். முன்னறி தெய்வம் அவளே. எனவே குழந்தை பெற்றவன் அப்பா. போற்றத் தக்கவன். அந்த காலத்தில் அப்பாதான் முதல் வாத்யார்.

அப்போதெல்லாம் தந்தையின் வார்த்தைக்கு மதிப்பிருந்தது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை யாரோ எழுதி வைத்திருக்கிறார்களே. இப்போது அதை யார் படிக்கிறார்கள். ஒருவனை ஆன்மீகத்தில் தெய்வ வழிபாட்டில் உயர்த்துபவன் அப்பா. அவன் வாக்கு மந்திரம். ''Mananam trayate iti mantram (मननं त्रायते इति मन्त्रम्)- மந்திரம் தான் ஒருவனது உண்மையான ஆயுதம். இதை கற்பிப்பவன் அப்பா. 
.
இப்படி ஞானத்தை அளிப்பவன் அப்பா என்றேன் அவனுக்கு ஞான தாதா gnana-datha , ज्ञानदाता என்று பெயர். அவனே குரு. ஆசார்யன். தெய்வத்துக்கு சமமானவன்.

தந்தையைப் போலவே கல்வி கேள்விகளில் சிறக்க வைப்பவன் ஒரு அப்பா. உப நேதா upaneta , उपनेता என்ற பெயர் பெறும் அப்பா. அவன் தான் ஆச்சார்யனாக உபநயனம் பண்ணி வைப்பவன். உபா கர்மம் செய்விப்பவன். ஒருவனின் பிரம்மச்சர்ய வாழ்க்கை இந்த ஆச்சாரியனிடம் தான் கழியும். குருகுல வாச காலம்.

5. அடுத்தது பெரிய அண்ணா. இன்னும் நிறைய குடும்பங்களில் அப்பாவை அண்ணா என்று மரியாதையாக எல்லோரும் அழைக்கும் வழக்கம் இருக்கிறது. அப்பாவுக்கு அடுத்து குடும்பத்தில் மரியாதைக்குரியவர் மூத்த தமையன். அவனே அப்பாவுக்கு சமமானவன். jyeshtha-bhrata , ज्येष्ठ-भ्राता பித்ரு சமஹா: டிவியில் கரை வேட்டி வெள்ளை அரைக்கை சட்டையோடு வரும் அண்ணன் என்று நீங்கள் புரிந்து கொண்டால் ஒருவேளை சாணக்கியன் தற்கொலை செய்து கொள்ளலாம்.

நான் மேலே சொன்னது சாணக்யரின் ஸ்லோகத்தை விளக்க என்னுடைய விமர்சனம் சாணக்யன் சொன்ன அப்பாக்களை கீழே பார்க்கலாம் .

1.अन्नदाता भयत्राता, यस्य कन्या विवाहिता ।
जनिता चोपनेता च, पञ्चैते पितरः स्मृताः ॥

(Anna-dātā bhaya-trātā, yasya kanyā vivāhitāa ।
janitā chopanetā cha, pañchaite pitaraḥ smṛitāḥ ॥)

2 कन्यादातान्नदाता च ज्ञानदाताभयप्रदः ।
जन्मदो मन्त्रदो ज्येष्ठभ्राता च पितरः स्मृतः ॥

(Kanyādātānnadātā cha jñānadātābhayapradaḥ ।
janmado mantrado jyeṣṭha-bhrātā cha pitaraḥ smṛitaḥ ॥)

  

No comments:

Post a Comment