Friday, July 5, 2019

10 good thoughts to help others

பேசும் தெய்வம் J K SIVAN 
மஹா பெரியவா

லோகோபகார சிந்தனைகள்- '' ஓம் சிவ சிவ ''

ஒரு அழகான பரிசு யாருக்காவது கொடுக்கும்போது அதை தங்க நிறம், பளபள ஜரிகை, பட்டுத்துணி யில் நன்றாக சுற்றி மேலும் அழகு சிங்காரங்கள் செய்து கொடுத்தால் எவ்வளவு நன்றாக, திருப்தியாக இருக்கிறது?

இது தான் எனக்கு தெய்வத்தின் குரல் படிக்கும்போதும் அது பற்றி எழுதும்போதும் இருக்கிறது மஹா பெரியவா எண்ணங்கள் சிந்தனைகள் அதி அற்புதமானவை. தெய்வீகம் நிறைந்தவை. அவற்றை தெளிவு படுத்தி, சுருக்கவேண்டிய இடத்தில் சுருக்கி, நீட்ட வேண்டிய இடத்தில் மெருகூட்டி நீட்டி அழகாக சொல்லும்போது, எழுதும்போது நமக்கு ரா கணபதியின் எழுத்து மூலம் பெரியவா இன்னும் பளிச்சென்று தெரிகிறார் இல்லையா?

பெரியவா சொன்ன சில விஷயங்களை அடிக்கடி நினைத்து பார்க்க தோன்றுகிறது. எவ்வளவு ஆழ்ந்த பரந்த பரோபகார சிந்தனைகள். ஒரு வயதான மனிதர், எதுவும் தேவையற்ற ஒரு துறவி, நமக்காக, எந்நேரமும் இறைவனை நம் எல்லோரிலும் பார்த்துக் கொண்டு மனித சமூகத்துக்கு செய்யும் பணிவிடையை மஹேஸ்வரனுக்கு புரியும் செயல்களாக செய்யுங்கள் என்று விடாமல், வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த அவர் மீது கடவுளுக்கு சமமான பக்தி உண்டாகிறதில் என்ன ஆச்சர்யம்? இதெல்லாம் அடிக்கடி எதற்காக சொல்வது தெரியுமா? இன்னும் எவராவது ஒரு சிலர் இந்த படிப்பினையை புரிந்து கொண்டு அதன் வழி நடந்தால் உலகத்துக்கு நன்மை தானே. உலக நன்மையைக் கூட கருதவேண்டாம். அவரவர் தனது தனி நபர் வாழ்வில் ஒழுக்கத்தோடு இறை உணர்வோடு தார்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் உலகம் தானே ''அதே'' யாகிவிடுமே. தனிமனிதன் தானே சமுதாயம், சமுதாயம் தானே உலகம். உலகம் இறைவன் படைப்பு தானே, படைப்பே அவன் தானே. மஹா பெரியவா அளித்த அறிவுரைகளை நல்ல சிந்தனைகளை சுருக்கமாக தருகிறேன்.

இப்போதைக்கு ஒரு பத்து சிந்தனைகள். மற்றவை அடுத்ததில்.

1. உடம்பினால் பிறருக்கு உதவும் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நாம் அல்ல. அது நமதன்று, பகவான் கொடுத்தது.அது அவரைச் சேர்ந்தது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவ சியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், வீட்டில் மறைந்த நமது பெற்றோர், முன்னோர்களுக்கு ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவும் காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? 
மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த சனாதனம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமான்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷ தர்மத்தை நாம் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குறிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்கள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை , மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம், ஸ்காந்த புராணம்.

பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. ''சிவ'' என்ற இரண்டு எழுத்துக்களே அது. அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் 'நம: சிவாய' என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் 'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன:

(1) விபூதி தரித்தல்,
(2) ருத்ராக்ஷம் அணிதல்,
(3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் 'சிவ' என்ற பதத்தை ஜபம் செய்தல்,
(4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல்,
(5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல். 
இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது. 
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம்.

''கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஆலகால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

 

 

No comments:

Post a Comment