Friday, June 7, 2019

Vishnu Sahasranama 392 to 407 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்-39

.அடுத்த பதினாறு நாமங்கள் ராமாவதாரத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.

392. பரர்த்தி: -பர; ரித்தி: யஸ்ய ஸ: -பரந்த ஐஸ்வர்யம் உடையவர். பகவானுடைய ஐஸ்வர்யம் அவனுடைய அனந்த கல்யாண குணங்களே. ராமனுடைய குணங்கள் எண்ணற்றவை.வால்மீகி ராமனுடைய குணங்களை வர்ணிப்பதில் திருப்தியே அடைவதில்லை.

393.பரமஸ்பஷ்ட: -யாவரும் தம்மை எளிதில் காணும்படி அவதரித்தவர். ராமன். தேசம் முழுவதும் சஞ்சரித்து பறவை மிருகம் உள்பட எல்லா உயிர்களுக்கும் சரண்யனாக இருந்தவன்.

394.துஷ்ட: -பேரானந்தவடிவாக இருப்பவர். மனதுக்கினிய வடிவமும் குணமும் கொண்டவன் ராமன். ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள் என்றபோதும் காட்டுக்குப் போ என்றபோதும் ஒரே சந்தோஷ மனநிலையில் இருந்தவன். கம்பன் சொல்கிறான், இரு நிலையிலும் அவன் முகம் அன்றலர்ந்த தாமரையை ஒத்து இருந்ததாம். சீதையைப் பிரிந்து வருந்தியபோதும் உள்ளூர அவதார காரியம் நிறைவேறப்போகும் திருப்தியே அவன் மனதில் நிலவியதாம்..

395. புஷ்ட: - எப்போதும் பூரணமானவர்., நாராயணன் தசரதனின் நான்கு புதல்வர்களாகத் தன் பூரண வடிவில் அவதரித்தான். ( ஒரே பாயசம் நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டதால்.) ஆனாலும் 'பூர்ணமத: பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே , பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூரணம் ஏவ அவசிஷ்யதே என்ற வேத வாக்கின்படி, இதுவும் கிருஷ்ணாவதாரம் போல பூர்ணாவதாரம்தான்.

396. சுபேக்ஷண:- மங்களமான கடாக்ஷம் உடையவர். ராமன் பார்வைக்கு அழகியவன் , அழகிய பார்வையை உடையவன்., ஜனகர் ராமலக்ஷ்மணர்களைப் பார்த்து விச்வாமித்திரரை கேட்கிறார் , பார்ப்பவர் கண்களையும் மனதையும் கவருபவர்களாகிய இவர்கள் யார் என்று.. வால்மீகி ராமனின் சௌந்தர்யத்தை 24 ச்லோகங்களால் கூறுகையில் கம்பன் அதை ஒரே பாடலில் கூறிவிடுகிறான்.

மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ 
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகுடையான்.

மையோ என்றவர், அது சில சமயம் கண்ணை உறுத்தும் ராமன் அழகு என்றும் குளிர்ந்துள்ளதாயிற்றே என்று மரகதமோ என்றார். ஆனால் மரகதம் வெறும் கல் இவன் கல்லையே பெண்ணாககியவன், மறிகடலோ என்றால் கடல் நீர் உப்பாயிற்றே. இவன் எப்போதும் மதுரமானவன் அன்றோ? ஆகவே மழை முகில் எனலாமோ என்றால் மழை முகில் மழை பொழிந்ததும் காலியாகிவிடும் . இவன் கருணைமழை எப்போதும் பொழிவதாயிற்றே. ஆதலால் என்ன சொல்லி இவனை வர்ணிப்பது என்று அயர்வுற்று ஐயோ இவன் அழகு என்று முடிக்கிறார்.

397. ராம: -ரமதே இதி ராம:-யாவரும் தன்னிடம் மகிழும்படி இருப்பவர். ரமந்தே யோகின: யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி, இதி ராம பதேன பரம் ப்ரஹ்ம அபிதீயதே -நித்யானந்தமாக உள்ள பரப்ரம்மத்தில் யோகிகள் மகிழுகிறார்கள். ஆகவே ராம என்ற சொல் ப்ரஹமத்தைக் குறிக்கிறது.( (பத்மபுராணம்.)

ஓம்நமசிவாய என்பதன் ஜீவனாகிய மகாரமும் ஓம் நமோ நாராயணாய என்பதன் ஜீவனான ரகாரமும் சேர்ந்து ராம என்ற சொல்லாகும்.( (கூறியவர் த்யாகராஜ சுவாமிகள் , கீர்த்தனை , 'எவரனி நிர்ணயின்சீரிரா.')

சிவபெருமானே ராமநாமத்தின் பெருமையை ராமராமராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே என பார்வதிக்குச் சொல்கிறார்.

398. விராம:- விரமந்தே அஸ்மின் இதி ராம: - சகல உலகும் இவரிடம் அடங்குகின்றன. எல்லோருக்கும் சரண்யனான ராமன்.

399. விரத:-விகதம் ரதம் யஸ்ய இதி விரத:- ரதி என்பது சுக போகங்கள் . எல்லாவற்றையும் விட்டவன்.பகவான் அவாப்த ஸமஸ்த காமன். ராமன் கைகேயியிடம் ,' ரிஷிபி: துல்யம் மாம் வித்தி ' நான் ரிஷிகளுக்கு ஒப்பானவன் என் அறிவாய் என்கிறான்.

400. மார்க்க: முக்திக்கு வழியாக் இருப்பவன்.
401. நேய:- பக்தர்கள் தன்னை அவர்கள் இஷ்டப்படி நடத்த அனுமதிப்பவர். இது ராமாவதார்த்திற்கும் கிருஷ்ணாவதாரத்திற்கும் பொருந்தும். அவரகளைத் தன்னிடம் அழைத்துக் கொள்பவர் என்றும் சொல்லலாம்.

402. நய:- எல்லாவற்றையும் நடத்துபவர். ராமோ விக்ரஹவான் தர்ம : என்றபடி எல்லோருக்கும் தர்மத்தை உபதேசித்தவர்.
403. அனய:- தாம் யாராலும் நடத்தப்படாதவர். அன்பர்களுக்குக் கட்டுப்பட்டது போலத் தோன்றினாலும் அதுவும் அவர் சங்கல்பப்படியே நடக்கிறது.பரதன் மேல் கொண்ட அன்பினால் ராமன் அவன் சொல் கேட்டு அயோத்திக்குத் திரும்பவில்லை .அவனைத் தன் வழிக்குத் திருப்பினான்

404. வீர:--பராக்ரமம் உள்ளவர். ரகுவீரன் ரண தீரன்.,
405. சக்திமதாம் ஸ்ரேஷ்ட:- சக்தி வாய்ந்த பிரம்மாதி தேவர்களுக்கும் மிகுந்த சக்தி உள்ளவர்.

ப்ரம்மா ஸ்வயம்பூ: சதுரானனோ வா ருத்ரஸ்த்ரிநேத்ரஸ்த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்திரா: ஸுரநாயகோ வா த்ராதும் ந சக்தா: யுதி ராமவத்யம் 
(சுந்தரகாண்டம் -51.44)

ஹனுமார் ராவணனிடம் பிரம்மாவோ, ருத்ரனோ, இந்திரனோ எவருமே ராமனால் யுத்தத்தில் வதம் செய்யப்படுபவனைக் காப்பாற்ற இயலார் என்கிறார்.

406. தர்ம:- ஆசாரப்ரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபுரச்யுத: ராமோ விக்ரஹவான் தர்ம:, ராமன் தர்மமே வடிவானவர். சீதையும் லக்ஷ்மணனையும் கூட விட்டுவிட்டாலும் தர்மத்தை விடமாட்டேன் என்று கூறுகிறான்.

407. தர்மவித் உத்தம: -தர்மம் தெரிந்தவருள் சிறந்தவர். ராமன் தருமத்தைக் கடைப்பிடித்தது மட்டும் அல்லாமல் மற்றவருக்கும் தருமத்தை உபதேசித்தவன். நதிகள் கடலில் சேர்வது போல சாதுக்கள் எப்போதும் வந்தடையும்படி இருப்பவர் என்கிறது ராமாயணம்.

No comments:

Post a Comment