Wednesday, June 12, 2019

Trayambak temple

*கங்காத்துவாரம் திரியம்பக லிங்க மகிமை*

பிரம்மா முதலான தேவர்களும் சப்த ரிஷிகளும் நாலாவித தீர்த்தங்களும் வந்து கவுதமரையும் கங்கையையும் சிவபெருமானையும் கண்டு ஜய ஜய என்று பூஜித்து பலவாறாகவும் துதித்து மகிழ்ந்தார்கள். 

கங்கையும் சிவபெருமானும் மகிழ்ச்சியடைந்து "நீங்கள் வேண்டும் வரம் என்ன?" என்று கேட்டார்கள். "நீங்கள் இருவரும் எப்போதும் இவ்விடத்திலேயே எழுந்தருளியிருந்து நற்கருமம் புரியும் முனிவர்க்கு எல்லாம் அருள் பாலிக்க வேண்டும்" என்று ரிஷிகள் கூறினார்கள். 

கங்கை அவர்களை நோக்கி "நீங்கள் யாவருமே தீர்த்த ஸ்வரூபமாக நிற்பதால் நான் இங்கிருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன? நீங்கள் யாவருமே கவுதமரிடத்திலேயே இருக்க வேண்டும். நான் மட்டும் தற்சமயம் போகிறேன். உங்களுக்கு எல்லா க்ஷேமம் உண்டாகட்டும் நீங்கள் உலகத்தைப் புனிதமாக்கிக் கொண்டு இங்கேயே இருங்கள்" என்றாள். 

உடனே தேவர்கள் முனிவர்கள் யாவரும் மீண்டும் கங்கையை வணங்கி "தாயே! எங்களையெல்லாம் புனிதமாக்கும் நிமித்தமாக நீ இங்கேயே இருக்க வேண்டும்" என்று வேண்டினார் அதற்கு அவள், "உங்களைவிட என்னிடம் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது!" என்று கேட்டாள்.

அப்போது நதி மங்கையர் அவளை நோக்கி "தாயே! மானிடர்கள் செய்த பாபங்களை எல்லாம் அவர்கள் எங்களைச் சேவிப்பதாலும் எங்களிடம் ஸ்நான தானாதிகளைச் செய்ததாலும் பதினோரு ஆண்டுகளிலும் பெற்று அவற்றை பன்னிரண்டாவது ஆண்டில் யாவரும் சிங்கராசியில் பிரகஸ்பதி பிரவேசிக்கும் போது உன்னிடம் வந்து ஸ்நானம் செய்து போக்கடித்துக் கொண்டிருப்போம். ஆகையால் நீ எங்களுக்காகவேனும் தயவு செய்து சிவபெருமானோடு இங்கேயே எழுந்தருளியிருக்க வேண்டும். குரு சிங்கத்திற்கு எழுந்தருளியிருக்கும் ஒரு வருஷகாலம் வரையில் இங்கே வந்து உன்னிடத்தில் ஸ்நானம் செய்து எங்கள் பாபத்தை ஒழித்துச் செல்வோம்" என்று விண்ணப்பித்தார்கள். 

அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கியும் கவுதமருக்குக் கொடுத்த வரம் காரணமாகவும் கங்காதேவியும் சிவபெருமானும் அங்கேயே எழுந்தருளியிருக்கிறார்கள். 

அந்த நாள் முதல் சிம்மராசியில் குருபிரவேசிக்கும் பொழுதெல்லாம், பிரமாதி தேவர்கள் தீர்த்தங்கள், க்ஷேத்திரங்களுக்கு வருவார்கள். ஆகையால் சிங்கராசியில் குரு பிரவேசித்திருக்கும் காலத்தில் பிற தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதனால் ஒரு பயனுமில்லை. 

அந்தச் சிங்கக் குரு கழிந்த பிறகு தான் அந்தத் தீர்த்தங்கள் தம் இடத்திலிருக்கும், ஆகையால் அவ்வவற்றிற்குரிய பயன்களை அளிக்க சக்தியுடையனவாக இருக்கும். எப்படியிருப்பினும் கங்கை, நர்மதை, கயை, கோமதி இவற்றில் எந்தக்காலத்திலும் ஸ்நானம் செய்யலாம். 

சிங்ககுரு வென்பது கணக்கில்லை. தீர்த்த யாத்திரை செய்பவர்கள் முதலில் கோமதி நதிக்குச் சென்று அதன் பிறகே கோதாவரி நதியை அடைந்து மீண்டும் கோமதி நதிக்குச் சென்று ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் ஒழியப் பெறுவர். 

இந்தக் கோதாவரிக்குக் கவுதமி என்றும் பெயர் இப்பொழுது கவுதமி தீர்த்தக்கரையில் எழுந்தருளியிருக்கும் திரியம்பகேஸ்வர ஜோதிர்லிங்க மகிமைச் சொன்னேன். இவ்வாறு சூதபுராணிகர் கூறினார். 

சனகாதி முனிவர்கள் அவரை நோக்கி "மாதவரே! கங்கை ஜலமயமாக வந்ததாக இந்தச் சரிதத்தில் சொன்னீர்களே அது எங்கிருந்து வந்தது? கவுதம முனிவருக்கு அபகாரம் செய்த துஷ்ட பிராமணர்கள் அதற்காக என்ன கதியை அடைந்தார்கள்? அவற்றை எங்களுக்கு சொல்ல வேண்டும்" என்று வேண்ட  சூதமுனிவர் சொல்லானார். 

No comments:

Post a Comment