Tuesday, June 18, 2019

Thirunavukkarasar

அறுபத்து மூவர் J K SIVAN 
திருநாவுக்கரசர் 3

சங்கடம் தீர்த்த சங்கராபரணன்

இது வரை தன்னோடு ஒன்றாக சமணமதத்தை எங்கும் ஆர்வத்தோடு பரவச்செய்வதில் ஒத்துழைத்தவன் ஒரே நாளில் சமணமதத்தை விட்டு விலகி, ஹிந்து சைவ மதத்தினனாக மாறி, சிவன் மேல் போற்றி பாடுகிறான், எங்கும் சைவத்தை பரப்புகிறான் என்றால், அந்த ராஜாவுக்கு தர்ம சேனன் மேல் எவ்வளவு கோபம் இருக்கும்? தன் முன்னே அழைத்து வரப்பட்ட திருநாவுக்கரசரை கோபத்தோடு பார்க்கிறான். முகம் சிவக்கிறது. மீசை துடிக்கிறது மஹேந்த்ரவர்ம பல்லவனுக்கு.

''இந்த துரோகிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்'' எங்கள்பிரான் அருகே இருந்த சமணர்களிடம்.

''மஹாராஜா, நமது மனம் கொதிப்பது போல் இவனும் கொதிக்கவேண்டும். இவனை கொதிக்கும் சுண்ணாம்பு காளவாயில் போடலாம். அது தான் தக்க தண்டனை'' என்கிறார்கள்.

''அப்படியே செய்யுங்கள். காவலாளிகள், இவனை உடனே எடுத்துச் சென்று கொதிக்கும் ஒரு சுண்ணாம்புக்கலவாயில் போட்டு அவன் வெந்து செத்த சேதியை வந்து சொல்லுங்கள்'' என்கிறான் மஹேந்திரவர்மன்.

கொதிக்கும் சூடான ஒரு சுண்ணாம்புக் காலவாயில் திருநாவுக்கரசரை தூக்கி போட்டுவிட்டார்கள் சமணர்களும் அரசனின் வீரர்களும். ரொம்ப சந்தோஷம் அவர்களுக்கு. திருநாவுக்கரசன் இனி தொலைந்தான்''

திருநாவுக்கரசர் துளியும் அஞ்சவில்லை. மகேஸ்வரன் அருளின்றி எதுவும் நடவாது என்று அவருக்கு தெரியாதா. என்னை இந்த கொதிக்கும் சுண்ணாம்புக் காளவாயின் சூட்டில் வெந்து நீராக நீ ஆக்கினை இட்டால் அதை சந்தோஷத்தோடு நான் ஏற்றுக் கொள்கிறேன், இந்த சுண்ணாம்புக்காளவாய் உனது திருவடிநிழலென மனதில் மகிழ்வோடு ஏற்கிறேன்'' என்று சொல்லி கொதிக்கும் சுண்ணாம்புக் களவாய்க்குள் இறங்குகிறார். கதவை இனி ஏழு நாள் கழித்து தான் காளவாயின் சூடு தணிந்த பிறகு திறப்பார்கள்.

''ஆஹா என்ன ஆச்சர்யம்.நாவுக்கரசரைக் கொடும் சுண்ணாம்பு வெப்பம் தஹிக்கவில்லை. மெல்லிய குளிர் தென்றலாக இதமாக சுகமளித்தது. அவர் கொதிக்கும் சுண்ணாம்புக்காள வாயில் அனுபவித்த ஜிலுஜிலு சுகத்தை நமது AC நிச்சயம் அளிக்காது. அவர் அனுபவித்த சுகானுபவத்தை நம்மால் விவரிக்க இயலாது. சொல்லமுடியாது. நாவுக்கே அரசர் நம் அப்பர் அற்புதமாக சொல்வதைக் கேட்போமே.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே (ஐந்தாம் திருமுறை, 6112)

சுண்ணாம்புக்காளவாய் அவருக்கு கண்ணுக்கு தெரியவில்லை.அவர் பார்த்தது உமாமகேஸ்வரன், திருவீரட்டானேஸ்வரனின் திருவடிகளில் அவகண்ட இனிய குளிர்ந்த திருவடி நிழல். ஒரு சாயங்கால வேளை, ஒரு நறுமணம் வீசும் மலர்கள், கனிகள், நிறைந்த சோலையில் அப்பர் வீற்றிருக்கிறார். அருமையான மெய் சிலிர்க்க வைக்கும் மனதை வருடும் வீணை இசை விடாமல் கேட்கிறார். அந்தி மறைந்து வானில் பூரண சந்திரன், தண்ணொளி வெண்ணிலவு, மலர்களின் தேனோடு கலந்து நறுமணம் தாங்கி வரும் மெல்லிய தென்றல் அவரை புளகாங்கிதமடைய செய்கிறது. போதாதற்கு ஜிலு ஜிலுவென்று ஒரே சீராக அழகாக ஓடும் ஸ்படிகம் போன்ற குளிர்ந்த நீர் ஓடும் ஒரு அருவி அவர் கால் அருகே. இது ஒருநாள் அல்ல ஏழுநாள் அனுபவித்தார். என் ஜெகதீசா, எல்லாம் என் தந்தையாகிய உன் திருவடி நிழல் தந்த சுகமே என்கிறார் அப்பர்.

ஏழாம் நாள் சுண்ணாம்புக் காலவாயின் குறுகிய கதவு திறக்கப்பட்டது. வெந்துபோன திருநாவுக்கரசர் உடலை தேடியவர்களுக்கு அவர் சௌகர்யமாக AC அறையில் இருப்பது போல் சுகமாக இருந்தது தெரிகிறது. 
வெந்த கூழான உடலை தேடி வந்தவர்கள் அவர் ஆனந்தமாக த்யானத்தில் இருப்பதை கண்டு ஆச்சர்யப்படுகிறார்கள். மஹேந்திரனுக்கு சேதி செல்கிறது. ஒருவேளை மந்திரங்கள் தந்திரங்கள் கற்றுக்கொண்டிருப்பானோ. இவனை வெளியே உயிரோடு விடுவது ஆபத்து என்று அஞ்சுகிறான் பல்லவன்.
இவனுக்கு உணவில் கொடிய விஷம் கலந்து கொடுங்கள் என்று ஆணை இடுகிறான்.

பால் சாதத்தில் கொடிய விஷம் கலந்து தனக்கு கொடுக்கப்பட்டது நாவுக்கரசரும் தெரிகிறது. அவரால் என்ன செய்யமுடியும். இறைவா, பரம சிவா, ஆலகால விஷத்தையே உண்டவன் நீ. உன் பக்தன் இந்த நஞ்சை உண்ணுவதும் பொருத்தமே என்று நீலகண்டனை வேண்டுகிறார். ''எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாகும்'' என்று கூறி இறைவனை வேண்டி அதை உண்கிறார். எந்த வித கெடுதலையும் அந்த கொடிய நஞ்சு அவருக்கு ஸ்லேய்யவில்லை. தலை வெடித்துவிடும் போல் ஆகிவிட்டது சமணர்களும் பல்லவ வீரர்களுக்கும்.

'என்ன தர்மசேனன் இறந்து விட்டானா?'' என்று மீசையை முறுக்கி கேட்ட மஹேந்திரனிடம் ''அரசே, என்ன ஆச்சர்ய, கொடிய நாகங்களின் விஷத்தை நிறைய உணவில் கலந்து கொடுத்தோம். முழுதும் உண்டுவிட்டு ஒன்றும் நடவாததுபோல் சாதாரணமாக இருக்கிறான் தர்மசேனன் என்கிறார்கள்.''

'இது என்னை மிகவும் கவலைக்கிடமாக்குகிறது. நம்மிடம் ளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெருமானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று.

மகேந்திர பல்லவன் திகைத்தான். இவனை என்ன செய்வது. மிகவும் தந்திரம் மந்திரம் கற்றுக்கொண்டவன், நமது சமண மத ரஹஸ்ய மந்திரங்களின் சக்தியை கைக்குள் அடக்கியவன் போல் இருக்கிறதே.நமக்கு விரோதமாக இவன் இயங்கக்கூடாதே. எப்படி கொல்வது இவனை என்ற பெரும் கவலை வாட்டியது.

கண்ணெதிரே இவன் சாவதை பார்த்தால் தான் திருப்தி என்று அரசன் என்னும்போது அவனது பட்டத்து யானை பிளிறிய சப்தம் காதில் கேட்டது. அடுத்த கணமே அவன் முகம் மலர்ந்தது. ''இவனைக் கட்டி, நமது பட்டத்து யானையால் இடரச்செயது அங்கேயே ஸ்தலத்தில் இவன் மரணமடைய செய்யுங்கள்'' என்று உத்தரவிட்டான்.

திருநாவுக்கரசரின் கை கால்களை சங்கிலியால் பிணைத்து ஒரு திறந்த மைதானத்தில் நிற்கவைத்தார்கள். எதிரே கோபமூட்டப்பட்ட பெரிய மதயானை தயாராக நின்றது. கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர்.

ஐயா, எதற்கு என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்ட நாவுக்கரசரும் ஒரு காவலாளி ''அடே மந்திர தந்திரக்காரா, உன் ஜம்பம் இனி பலிக்காது, அதோ பார் அந்த யானையின் பாதங்களில் நீ கூழாகி சாகப்போவதை நீயே பார் '' என்று சிரிக்கிறான்.

அடடா நான் எவ்வளவு அதிருஷ்டக்காரன், என் பிரான், என் தந்தை பரமேஸ்வரன் அவன் மகனை விட்டே என்னை கைலாசத்துக்கு அழைத்துச் செல்லப்போகிறானா. கிடைக்கவொண்ணா பாக்யம் அல்லவோ இது என்று ஒரு பதிகம் வீரட்டானேஸ்வரர் மேல் பாடுகிறார்.

''சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் 
அண்ணல் அரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் 
திண்ணன் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை''

சுண்ணவெண் சந்தனச்சாந்தும்` என்று தொடங்கும் அந்த திருப்பதிகம் பா டுகிறார்.அதில் கொதிக்கும் சுண்ணாம்பை குளிர்ந்த மணமிக்க சந்தனமாக மாற்றிய குளிர்ந்த சந்திரனை பிறையாகச் சூடிய சிவபிரான் யானை வடிவில் வந்த கஜமுகாசுரனை கொன்று அந்த யானையின் தோலை ஆடையாக உடுத்த பெருமையைப் பாடுகிறார். '' பயப்படுவதற்கென்ன இருக்கிறது, பயமூட்ட என்ன வரப்போகிறது இங்கே''.
என்கிறார் அப்பர்.

நமக்கு இந்த பதிகம் புரியாவிட்டாலும், அப்பர் அழகாக நாவுக்கரசர் அல்லவா, பாடியது அந்த வேழத்துக்கு புரிந்து விட்டது.ஆஹா இப்படி ஒரு புகழ் வாய்ந்த பதிகம் நானும் கேட்க நேர்ந்ததே என்று நினைத்ததோ தெரியவில்லை. அந்த மதயானை திருநாவுக்கரசர் அருகே வந்தது. அவர் கண்மூடி சிவத்யானத்தில் இருந்தார். பாகன் யானையை அங்குசத்தால் குத்தி துன்புறுத்தி கோபமூட்டினான். அந்த யானையோ அவரை மூன்றுமுறை சுற்றி வந்து காலை மடக்கி அவர் முன் சிரம் தாழ்த்தி வணங்கியவாறு நின்றது. தன்னை துன்புறுத்திய பாகனை தும்பிக்கையால் மேலே இருந்து கீழே இழுத்தது காலால் நசுக்கியது அவன் கூழானான். அடுத்து நின்று சப்தமிட்டு தொந்தரவு செய்த சில சமணர்களுக்கும் அதே கதி. கொத்தாக அவர்களும் யானை காலடியில் உயிரிழந்தார்கள்.

இந்த பயங்கர செய்தியும் பல்லவனுக்கு பேரிடியாக போய் சேர்ந்து அடுத்து என்ன செய்வது என்று குழம்பினான்.

  

No comments:

Post a Comment