Tuesday, June 18, 2019

Path shown by Godha Devi kothai

கோதைத் துதி-25
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 26.05.2019)

பகவான் பல அவதாரங்கள் எடுத்தும் சாதிக்கவியலாததை, ஆழ்வார்காளாக அவதரித்தப்போது சாதித்தனர்..!

அது ஜீவாத்மாக்கள் உய்யும் வழி..!

இதில் கோதைக் காட்டிய பாதை மகத்தானது..!

"வையத்து வாழ்வீர்காள்" என்று பல உயர்ந்த விஷயங்களை, எளிமையாக பின்பற்றும் மார்க்கத்தைக் காண்பிக்கின்றாள்..!

கோபீகா ஸ்திரீகள் கிருஷ்ணனை வேண்டி தனுர் மாதத்தில் அனுஷ்டித்த நோன்பினை, இவள் "பாவை நோன்பாக" அனுஷ்டித்து பரமனடி சேரும் வழிக் காட்டுகின்றாள்..!

இதற்கு முந்தைய யுகங்களில் பகவானை, மஹரிஷிகள் யக்ஞத்தினால் ஆராதித்தனர்..!  கலியுகத்தில் அவன் நாமாவை, ஓங்கி உலகளந்த அந்த உத்தமனின் பெயரைப் பாடினாலே போதும் என்றும் உரைக்கின்றாள்..!

கோதை உரைப்பதோடு நிற்கவில்லை..!  தான் முன்னின்று அனுஷ்டித்துக் காட்டினாள்..! தாம் கொண்ட நோன்பின் நோக்கம் அடையப்பெற்றாள்.!

மா தவம் புரிந்து மாதவனையே மணாளனாக அடைந்தாள்..!

"பத்துடையடிவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய 
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்
மத்தறு கடைவெண்ணெய் களவினில் உரலிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே..! (திருவாய்மொழி-1.3.1)

வெண்ணெய் களவில் மாட்டிக்கொண்டான் கண்ணன்..!  

அவனை உரலோடு கட்டிப்போட்டாள் யசோதை..!

அதுபோன்று தம் சூட்டிக்களைந்த மாலையினாலும், பாமாலையினாலும் அவனே வந்து மாட்டிக்கொள்ளும்படிச் செய்தாள்..!  அவனை தன் அன்பினால் கட்டிப்போட்டாள்..!  அவன் ஸவதந்திரம் போயிற்று..! 

நம்மாழ்வார், ஒரு ஆய்ச்சியர் குறுங்கயிற்றால் கண்ணனைக் கட்டுவதை, கட்டுண்ணப்படுவதை எண்ணியெண்ணி மோஹித்து ஆறு மாதம், ஆறு மாதமாக மூவாறு மாதங்கள் அதாவது 18 மாதங்கள், உரலோடுக் கட்டுண்ட இந்த விருத்தாந்திலேயே மோஹித்து,  எழுந்திருக்கவேயில்லையாம்..! 

ஆனால் இன்று வரை ரங்கநாதன், ஆண்டாளிடத்து, தம் ஸ்வதந்திரம் அனைத்தும் பறிபோய், பாரதந்தரியனாகவே, அவளிட்ட வழக்காகவே உள்ளான்..!   

ஸ்ரீபராசர பட்டர் நம்பெருமாளை ஸேவிக்க வருகின்றார்..!

அன்று நம்பெருமாள் மோகனாவதாரத் திருக்கோலத்தில், தாயார் சாற்றிக் கொண்ட மூக்குத்தி, திருமாங்கல்யம், நெத்திச்சூட்டி, சந்த்ர சூர்ய ஜடவில்லைகள், இராக்குடி, தண்டை, சலங்கை, குஞ்சலம் ஸஹிதம்
அமர்க்களமாக வீற்றிருக்கின்றார்.

பட்டரைப் பார்த்து பெரிமிதத்துடன் பெருமாள் கேட்கின்றார்..!

"பட்டரே..!  நான் எப்படியிருக்கின்றேன்..! இந்த வேடம் கச்சிதமாகப் பொருத்தியிருக்கின்றதா...?"

பட்டர் பாதாதி கேசாந்தம் தரிசிக்கின்றார்..!

"ப்ரபோ..!  அபாரம்..!  ஆனால் ஒரு சிறு குறை..!  தாயார் திருக்கண்களில் பெருகும் வாத்ஸல்யம் இல்லை அடியேன்" என்கிறார்..!

தாயின் வாத்ஸல்யம் தந்தைக்கு வருமோ...,?

பட்டர் ஒரு சங்கடத்தினால திருக்கோஷ்டியூரில் இருக்கின்றார்.  ஆண்டாள் அவரது கனவில் ஸ்ரீரங்கம் திரும்புமாறு பணிக்கின்றார்..! அப்போது  பட்டர் கோதையினைத் துதிக்கின்றார்..!

நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய

நீளாதேவியின் அம்சமான நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்த திருமார்பிலே உறங்குகின்றான்..! அவனைத், தான் சூடிக் கொடுத்த மாலையாலே கட்டியிழுக்கின்றாள்.. 1 அவளுக்குக் கட்டுப்பட்டவனான கிருஷ்ணனுக்கு அவனுடைய பாரதந்த்ர்யத்தை (அதாவது ஆத்மாக்கள் அவனிட்ட வழக்காயிருந்து அவனுக்கே பயன்படுவதை) உணர்த்தி எம்மை அடிமைகொள்ள வேணும் என்று நிர்பந்தித்த ஆண்டாளை நமஸ்கரிக்கிறேன் என்று இந்தத் தனியனை சமர்ப்பிக்கிறார் ஸ்ரீ பராசர பட்டர்.

ஜகத்பிதாவான பகவான், அவரவர் செயலுக்கேற்ற ஊதியம் தருபவன்..! 

நன்மைகளைச் செய்தால் நற்பலன்கள்..! 

திருந்தாத சிலரைக் கண்டு தம் புருவம் நெறிக்கின்றான்..!  

அவனது புருவ நெறிப்பினால் சமஸ்த லோகங்களும் நடுங்குகின்றன..!  

ஜீவாத்மாக்கள் அல்லலுறுகின்றன..!

நம் ஜகன்மாதாவான, நம்மை ரக்ஷிக்கவென்றே அவதரித்துள்ள ஆண்டாள், நாம் அல்லலுறுவதைக் காணச் சகியாமல் தன் புருவத்தினை, அருகிலுள்ள தன் நாதனிடம் நெரிக்கின்றாள்..!

ரங்கநாதன் அடங்கிப்போகின்றான்..!

நம்மை ஆட்கொண்டு, அவனை அடக்கி, நமக்கொரு நல்வழி காட்டுகின்றாள்..!

25 
கோதே  குணைரபநயந்  ப்ரணதாபராதாந்
 ப்ருக்ஷேப  ஏவ  தவ  போக  ரஸானுகூல :  |
கர்மாநுபந்தி     பல  தாந    ரதஸ்ய  பர்த்து :
ஸ்வாதந்த்ர்ய துர்வ்யஸந    மர்ம பிதா  நிதாநம்  ||

கோதே..... தாயே....நீ புருவத்தை நெறிக்கும்போது ,அது உனக்கும் உன் நாதனுக்கும் ,பெரியதொரு போகத்தைக் கொடுக்கிறது. அவன் புருவ நெறிப்பு , உலகங்களை நடுங்கச் செய்கிறது;  எங்களின் பாபங்களைப்  பொறுக்கமாட்டேன் என்கிறான்; அந்த சமயத்தில், உனது புருவ நெறிப்பு ,அவனுடைய புருவ நெறிப்பை   அடக்கி விடுகிறது. அவன் உனக்கு நாதன்; உலகங்களுக்கு எல்லாம் நாதன்; தன்னைக் குறைசொல்லாவண்ணம் காத்துக் கொள்கிறான்; அதற்காக அவன் ஏற்படுத்திக்கொண்ட சங்கல்பம், அவரவர் கர்மாக்களுக்கான பலனை அளிப்பது;  இதில் அவன் ஸ்வதந்த்ரனாக  இருந்தாலும்,உன் புருவ நெறிப்பு   , அவனை அடக்கி விடுகிறது.  என்ன பாக்யம், எங்களுக்கு!

தாஸன் - முரளீ பட்டர்
#கோதைத்துதி

No comments:

Post a Comment