Thursday, June 13, 2019

On paduka

ஹே..! பாதுகே-21
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 14.05.2019)

சுயம்வரம் நடக்கும் போது ராஜகுமாரிகள் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மாலை எந்த பூக்களால் அந்த காலத்தில் கட்டப்பட்டது தெரியுமா? 

அருகம் புல்லாலும் இலுப்பைப்பூக்களாலும் மட்டும் கட்டப்பட்டிருக்கும். 
 
பாதுகையில் இழைக்கப்பட்டுள்ள பச்சைகற்களும், முத்துக்களும் பாதுகை இந்த சுயம்வர மாலையை கையில் வைத்துக் கொண்டு காத்திருப்பது போலுள்ளதாம். 
 
இந்த லோகத்திலிருக்கும் முட்டாள்களுக்குப் பெருமாளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தெரியவில்லை.  பெருமாள் ஜனங்களை ஸ்ருஷ்டிக்கச் செய்ததே அழிவில்லாத தன்னுடைய லோகத்திற்கு கூப்பிட்டுக் கொள்வதற்காகத்தான்.
அறிவு கொஞ்சம் குறைவாகயிருந்தாலும் பெருமாளிடத்தில் ஆசையிருந்தால் போதும். 
 
பாதுகை கையிலுள்ள இந்த மாலையினால் பெருமாள்,  அஞ்ஞானிகளாய் திரியும் நம்மையும்,   தம் திருவடிகளை ஆஸ்ரயிக்கச் செய்கின்றாராம். பாதுகை நம் மேல் கொண்ட ஆச்சார்ய அபிமானத்தினாலேயே இது சாத்தியமாகின்றது.
 
'சிந்தயந்தீ' என்று ஒரு கோபிகாஸ்த்ரீ.  பெருமாளையநுபவித்ததினால் புண்ணியம் போய், பெருமாளையடைய முடியவில்லையே என்ற துக்கத்தினாலே பாபமும் போய் மோக்ஷத்தை அடைந்தாளாம்.  அது போன்று ஆழ்வார் பெருமாளையனுபவிக்கிறேனென்று சில பாசுரங்களில் ஸந்தோஷப்படுகின்றார். அது அவருடைய ஸூகிருத பலம். இது பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள முத்து.  
சில பாசுரங்களில் அடைய முடியவில்லையே வருத்தப்படுகின்றார்.  அது பாப பலம்.  அது பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள இந்திரநீலம்.
 
நல்ல ஆச்சார்யனுடைய அனுக்கிரஹம், உபதேசங்கள் பெற்று, அவர்களாலே பாசுரங்கள் உபதேசிக்கப்பெற்று பழக்கப்பட்ட மனது தெளிந்தவர்கள், பாசுரங்களை அநுசந்திக்கும் போது அதனுடைய உண்மையான அர்த்தம் அறிந்து சுக துக்கங்களை அனுபவிக்கின்றார்கள்.

முத்துவென்றால் சந்தோஷமாக அனுபவிக்கக் கூடிய பாசுரங்கள்.  இந்த்ரநீலமென்றால் துக்கத்தோடு சொல்லுகின்ற பாசுரங்கள்.
 
ஆழ்வார் பகவானுடைய குணங்களை நினைத்த சந்தோஷத்தோடும் (முத்துக்கள்), அதே பகவான் கண்ணுக்கும், கைக்கும் அகப்படவில்லையே என்ற வருத்தத்தோடு அழுது கொண்டும் (இந்திரநீலம்) இருக்கின்றார்.
 
ஸேது சமுத்திரத்தினில் மட்டுமே அமாவாஸ்யை, பெளர்ணமி ஆகிய நாட்களில் கூட தீர்த்தமாடலாம்..  வேறு எந்த சமுத்திரத்தினிலும் இந்த நாட்களில் தீர்த்தமாடக் கூடாது. அதுவும் தீட்டுக் காலத்தில் ஸேதுவில் தீர்த்தமாடக் கூடாது. 
 
பாதுகையிலுள்ள முத்துக்கள் சமுத்திரம் போன்றும் பச்சைரத்னங்கள் ஸமுத்திரத்தின் காந்தியைப் போன்றும் பிரதிபலிக்கின்றது. இது எல்லாகாலத்திலும் எல்லோரும் ஸ்நானம் பண்ணக்கூடியதாய் ஒரு புது ஸமுத்திரத்தினை உண்டு பண்ணுவதாய் உள்ளது. 
இந்த புது ஸமுத்திரம் ஆழ்வாரின் திருவாய்மொழி ஆகும்.
 
ஜன்மாந்திர ஸூகிருதத்தினாலே நல்ல ஆச்சார்யனை அடைந்து ஆழ்வாரின் பாசுரங்களுடைய அபிப்பிராயத்தினை அறிந்தால், இந்த ஸ்நானங்களினால் வரும் ஸூகத்தினைக் காட்டிலும் விசேஷமான சுகத்தினை அநுபவிக்கின்றான்.
 
பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு ரத்னம் விளக்கினுடைய ஜோதி போன்று உள்ளது.  இந்திரநீலம் அந்த விளக்கினால் உண்டான மையைப் போன்றுள்ளது.  ஆழ்வாருக்கு பெருமாளின் குணங்களை அனுபவித்து அநுபவித்து எல்லையில்லாத ஆசை (ஜோதி) உண்டாகின்றது.  அதனாலே துக்கமும் (மை) அதிகமாகயுண்டாகின்றது.
 
இவ்வாறு பஹூரத்ன பத்ததி என்னும் பதினொறாவது பத்ததி முழுதும் பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள ரத்னங்களை ஆழ்வாரின் அநுபவித்தினையும் ஸ்ரீஸூக்தியினையும் ஒப்பு நோக்கி மிகவும்
ரஸனையோடு அனுபவிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

தாஸன் - முரளீ பட்டர்
#ஹேபாதுகே

No comments:

Post a Comment