Friday, June 28, 2019

Janabhai Story

*பக்த ஜனாபாய்* 

"ராத்ரி முழக்க மழை இப்படி விடாம கொட்றதே!! பாண்டுரங்கா!! நீ தான் ரக்ஷிக்கனும்!!" என்றபடி கண்ணயர்ந்து விட்டார் நாமதேவர்.

இரவு முழுக்க உறங்காமல் வழக்கம் போல் விட்டலனை நினைத்துக்கொண்டே இருந்தாள் ஜனாபாய்.  மழைத்துளி ஒவ்வொன்றும் விழும் போதும் "விட்டல பாண்டுரங்க!! விட்டல பாண்டுரங்க!!" என்ற சப்தம் கேட்டதோ அவளொருத்தியே அறிவாள்!!

நாமதேவர் இல்லத்திலே வேலை செய்வதே ஜனாபாயின் பணி. இரவு நெடு நேரம் மழை கொட்டிக்கொண்டே இருந்தது. "படீர்!!" என்று பெருத்த ஓசை ஒன்று விடியும் வேளையில் நாமதேவரின் வீட்டிற்கு வெளியே கேட்டது!!

கொட்டும் மழையில் எங்ஙனம் வெளியில் சென்று பார்ப்பது!! விடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்றபடி நாமதேவர் குடும்பத்தார் அனைவரும் இருந்து விட்டனர். விடியலில் ஒரு வழியாக மழை கொஞ்சம் ஓய்ந்து தூறலாக பெய்துகொண்டிருந்தது!!

யாரோ வாசல் சுவற்றை செங்கற்களைக் கொண்டு சரிசெய்வது போலிருந்தது!! நாமதேவர் செங்கற்களில் ஓசையைக் கேட்டு வெளியே சென்று பார்த்தார்!! "ஆஹா!! இக்காட்சிக்கு ஈடு இணையுண்டா!! சங்கசக்ரகதா பத்மங்களைத் தாங்கும் ஸாக்ஷாத் ஶ்ரீமந்நாராயணன், பாண்டுரங்கனாக தன தாமரை போன்ற கரங்கள் நோகும் வண்ணம், ஒவ்வொரு செங்கற்களாக அடுக்கி சுவரெழுப்பிக் கொண்டிருந்தான்!!"

"பாண்டுரங்கா!! க்ருஷ்ணா!! கோவிந்தா!! ஜனார்த்தனா!! இதென்ன கோலம்!! பட்டு பீதாம்பரங்கள் சேற்றினால் பாழாகும்படி, ம்ருதுவான உன் கைகளும், கால்களும் வருந்தும்படி ஏன் கற்களைக் கொண்டு சுவர் எழுப்புகிறாய்!! இந்த்ரனும் பிரமனும் போற்றும் தூயோனே!! பண்டரிநாதா!! ஏன் இந்த லீலை!!" கண்களில் ஜலம் தளும்ப நாமதேவர் ஓடி வந்து பாண்டுரங்கனின் பாதத்தினை பிடித்துக்கொண்டார்!!

"நாமதேவா!! எழுந்திரு!! என் நாமத்தைத் தவிர வேறோன்றும் அறியா குழந்தை அல்லவா நீ!! அதனால் நானே வந்தேன்!! உன் வீட்டு சுவற்றை சரி செய்ய!!" பாண்டுரங்கன் தேனினும் இனிய குரலில் கூறினார்!!

வெளியிலே அரவம் கேட்டு நாமதேவர் குடும்பத்தில் அத்தனை பேரும் ஓடி வந்து ஆஸ்சர்யத்தில் மெய் மறந்து, கண்ணில் ஜலம் தளும்ப பாண்டுரங்கனுக்கு நமஸ்கரித்து ப்ரமிப்பில் நின்றனர். ஜனாபாய் வெளியிலே ஓடிவந்து பாண்டுரங்கனைக் கண்ட பரமானந்தத்தில் திளைத்து "விட்டல பாண்டுரங்க!! விட்டல பாண்டுரங்க!!" என்றபடியே நமஸ்கரித்தாள்!!

"விட்டலா!! இப்படி அழகிய உன் பீதாம்பரங்கள் பாழாகி விட்டதே!! இதைக் கொடு!! நான் துவைத்து மறுபடியும் தருகிறேன்!!" என்று கண்ணில் நீர்வழிய கேட்டாள்!!

ஸர்வலோகரக்ஷகனான விட்டலன் மறுநிமிடம் ஜனாபாயின் கந்தல் வஸ்த்ரத்தினை உடுத்திக்கொண்டு தான் போட்டுக்கொண்டிருந்து பட்டு பீதாம்பரத்தினை ஜனாபாயிடம் கொடுத்தான்!!

(எப்படிப்பட்ட கருணை!! பகவானின் பீதாம்பரத்தை உரிமையுடன் கேட்ட ஜனாபாயின் பக்தியை சொல்வதா!! அன்றி பக்தை கேட்டவுடன் முப்பத்துமுக்கோடி தேவதைகளுக்கும் கிடைக்காத பாக்யத்தை அருளி தன் வஸ்த்ரத்தினை அளித்த பாண்டுரங்கனின் கருணையைச் சொல்வதா!!)

ஜனாபாயின் கிழிந்த துணியை உடுத்திக்கொண்டே பாண்டுரங்கன் நாமதேவர் குடும்பத்தாருடன் உணவருந்தினார். நாமதேவர் தன் கையாலேயே பாண்டுரங்கனுக்கு அன்னத்தினை ஊட்டினார். புன்சிரிப்புடன் அவர் அளித்த ஆஹாரத்தினை ஏற்று மனங்குளிர்ந்தார் பகவான்.

நாமதேவர் குடும்பமே ஆனந்தத்தில் மூழ்கியிருந்தது. ஜனாபாய்க்கு மட்டும் சிறு வருத்தம். "ஸ்வாமிக்கு நாம் ஊட்டிவிடும் பாக்யம் இல்லையே!!" என்று மனதிற்குள் வருத்தப்பட்டு, தன்னுடைய போஜனத்தை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

"தாயே!!" என்றழைத்தப்படி பாண்டுரங்கன் அறைக்குள் நுழைந்தான். "அம்மா!! உங்கள் கையால் எனக்கு அன்னத்தை ஊட்டிவிடுங்கள்!!" என்ற பாண்டுரங்கனின் வார்த்தையைக் கேட்டு தன் பாக்யத்தை எண்ணி கண்களில் ஜலத்தாரை பொழிய் "விட்டலா!! விட்டலா!! உன் கருணையே கருணை!!" என்றபடி தன் கையினால் ஸாக்ஷாத் பரமாத்மாவிற்கு அன்னத்தை ஊட்டினாள் ஜனாபாய்.

எப்பேற்ப்பட்ட பாக்யம் யசோதையும், தேவகியும், கௌசல்யையும் அடைந்த பாக்யத்தை ஜனாபாய் அடைந்துவிட்டாள். மறுநாள் விடிவதற்கு முன்னேயே கோதுமை அறைக்க சென்றாள் ஜனாபாய்!! பாண்டுரங்கனோ சிறுவன் போல் வேஷம் போட்டுக்கொண்டு ஜனாபாயிடம் சென்றார்!!

"அம்மா!! தங்கள் பாடல்களை கோவிலில் கேட்டுள்ளேன்!! விடோபா என்பது என் பெயர்!! எனக்காக விட்டலன் மேல் கீர்த்தனைகளை பாடுங்களேன்!!" என்றான்.

சிறுவனிடம் வாத்ஸல்யம் கொண்ட ஜனாபாய் கோதுமை அறைப்பதை மறந்து "விட்டல பாண்டுரங்க!!" என்று தசாவதார கீர்த்தனைகளை பாடத் தொடங்கினாள். ஸாக்ஷாத் பாண்டுரங்கனும் அவளிடம் பேசிக்கொண்டே கோதுமையை அரவை இயந்திரத்தில் தானே அரைத்தான்.

முழுவதுமாக மாவு அறைபட்டவுடன் தான் ஜனாபாய்க்கு நினைவு வந்தது. தன் முன்னே நிற்கும் சிறுவன் மறைந்து ஸாக்ஷாத் ஶ்ரீபாண்டுரங்கன் இருகைகளையுள் இடுப்பில் வைத்துக்கொண்டு காக்ஷியளித்தான்.

"பாண்டுரங்கா!! விட்டலா!! இது என்னே லீலை!! எனக்காக தாங்கள் கோதுமையை அரைப்பதா!! மன்னியுங்கள்!!" என்றபடி விட்டலை கண்களில் கண்ணீருடன் நமஸ்கரித்தாள் ஜனாபாய்!!

"பெண்ணே!!உன் பக்தியானது அனைத்திலும் மேலானது!! அவற்றை உணர்த்தவே இவ்விதம் உன்னுடன் பல லீலைகள் புரிந்தோம்!! காலக்ரமத்தில் என் பாதத்தினை சேர்வாய்!!" என்றபடி ஶ்ரீவிட்டலன் அங்கேயே மறைந்தான்!!

ஜனாபாயை நினைக்குந்தோறும் அவள் பக்தியானது ஒரு கணமேனும் நமக்கு வராதா எனும் ஏக்கம் ஏற்படுகின்றது!! விட்டல பாண்டுரங்கா எனும் ஓசை பண்டரிபுரம் முழுதும் இன்றும் ஒலித்து ஜனாபாயின் உத்தமமான பக்தியை ப்ரகடனப்படுத்துகின்றது.

 *கிருஷ்ணார்பணம்*.

No comments:

Post a Comment