Wednesday, June 26, 2019

About punyam

பூர்வ புண்ணியம் இருந்தால்....

எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார் பகவான்;ஆனால், எல்லாருமே சுகமாக இருக்க முடிவதில்லை.காரணம்,அவரவர் கர்மவினைகளுக்குத் தகுந்தபடி தான், வாழ்க்கை அமைகிறது.பூர்வ புண்ணியம் இருந்தால், செல்வம், சுக போகங்களை இந்த ஜென்மாவில் அனுபவிக்கலாம்.புண்ணியம் இல்லாவிடில், சிரமப்பட வேண்டியது தான்; பணக்காரனை பார்த்து, பெருமூச்சு விட வேண்டியது தான்.

ஆயிரம் பேருக்கு, இலவசமாக சாப்பாடு போடுவதை, "சகஸ்ர போஜனம்' என்பர்.ஆயிரத்துக்கும் அதிகமானால் பரவாயில்லை; குறையக் கூடாது.சாப்பாடு என்றால் ஏதோ,"போட்டதை சாப்பிட்டு விட்டு போ...' என்பது மாதிரியல்ல;வயிறு நிறைய சாப்பாடு. பல வித பதார்த்தங்கள், லட்டு, ஜிலேபி, பாயசம், அக்காரவடிசல்... இப்படி ஏகப்பட்ட அயிட்டம், சகஸ்ர போஜனத்தில் உண்டு.எல்லாரும் சந்தோஷமாக சாப்பிட வருகின்றனர்.அதில், ஒருவனுக்கு வயிற்று வலி.ஒரு உருண்டை சாம்பார் சாதம் உள்ளே போனாலே, வயிற்று வலி வந்து விடும். இவனால் எப்படி நன்றாக சாப்பிட முடியும்?மற்றொருவனுக்கு சர்க்கரை வியாதி. இவனால் லட்டு, ஜிலேபி, பாயசம் எதையும் சாப்பிட முடியாது. இவனாலும் ஆசை தீர, வயிறு நிறைய சாப்பிட முடியாது.

அடுத்தவன், உடல் நலமில்லாதவன். நாட்டு மருந்து சாப்பிடுகிறான். பூசணிக்காய், பாகற்காய், மாங்காய், வாயு பதார்த்தங்களை, சாப்பிடக் கூடாது என்பது, வைத்தியரின் உத்தரவு. இவனாலும், திருப்தியாக சாப்பிட முடியாது."எல்லாரும், வேண்டியதைக் கேட்டு, திருப்தியாக சாப்பிடுங்கள்' என்றார் சாப்பாடு போடும் அன்பர்.ஆனால், அப்படி சாப்பிட முடியாதவர்களும் இருக்கின்றனரல்லவா...இதைப் போலத் தான் பகவான், எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், இவர்களுடைய தீவினை காரணமாக, சுகத்தைப் பெற முடிவதில்லை.இதற்கு, பகவான் என்ன செய்ய முடியும்?

போனது போகட்டும்...இந்த ஜென்மாவிலாவது, நல்ல காரியங்களை செய்து, புண்ணியத்தை தேடிக் கொள். அடுத்த பிறவியிலாவது செல்வச் செழிப்புடன் சுகமாக இருக்கலாம், என்கின்றனர் தவசீலர்கள்.ஆனால், நம்மில் பலருக்கு, பணம் தான் கண்ணுக்குத் தெரிகிறது; புண்ணியம் தெரிவதில்லை. அதனால், கண்ணுக்குத் தெரிந்த பணத்தின் மீது ஆசை!சேர்த்து சேர்த்து வைத்து, எண்ணி எண்ணி பார்த்து, சந்தோஷப்படுகிறான். புண்ணித்தை தேடிக் கொள் என்றால்,"போங்க சார்... புண்ணியத்தை எவன் கண்டான்...' என்கின்றனர். ஆனால், கண்ணுக்குத் தெரியாத புண்ணியம் தான் பரலோகத்திலும்,அடுத்த பிறவியிலும், கை தூக்கி விடும் என்பதை, புரிந்து கொள்வதில்லை.
Attachments area

No comments:

Post a Comment