Monday, June 17, 2019

A sloka from Geeta govindam

கீத கோவிந்தம் J K SIVAN 
ஜெயதேவர்

ஒரு மனம் கவரும் அஷ்டபதி

yAramitA vanamAlina sakhi
anila taraLa kuvalaya nayanEna tapati na sA kisalaya shayanEna
vikasita sarasija lalita mukhEna sphuTati na sa manasija vishikhEna
amrta madhura mrdutara vacanEna jvalati na sA malayaja pavanEna
sthala jalaruha rucikara caranena luthati na sa hima kiranikarEna
sajala jalada samudaya rucirena dalati na sa hrdi viraha bharEna
shri jayadEva bhaNita vacanEna praviSatu harirapi hridaya manEna

அங்கு காலை இல்லை, மாலை இல்லை, பகல் இல்லை, இரவில்லை ,எந்நேரமும் எப்போதும் ஆனந்தம். சதானந்தம், பரமானந்தம். ஏனென்றால் பரமன் அங்கே பாமரனாக புல்லாங்குழலேந்தி அதில் புனித கீதம் இசைத்து மக்களை மாக்களை, மற்றவற்றையெல்லாம் தன்வசம் காந்தமென கவர்ந்து கொண்டி ருந்த காலம் அது.

சந்தோஷமாக, ஆனந்தமயமாக ஒரு இடம் இருந்தால் நாம் என்ன சொல்கிறோம் '' ஸார், இது பிருந்தாவனம் போல இருக்கு'' என்கிறோம். அப்படி என்றால் கிருஷ்ணன் அங்கே இருந்த போது
பிருந்தாவனம் எவ்வளவு ஆனந்தமயமாக இருந்திருக்கவேண்டும்.

ஒரு மேடையில் பூங்காற்றின் இன்சுகத்தில் ராதை தோழியிடம் என்னவோ சொல்கிறாளே, நமது காதில் விழுகிறதே.

'' தோழி, அங்கே தெரிகிறதே தாமரைக்குளத்தில் இதழ் விரிந்த தாமரை மலர். அதன் அழகு அதை எங்கோ பார்த்தது போல் தோன்றுகிறதே, எங்கே, எப்போது? மெல்லிய பச்சை நிற தண்டுகளால் தாங்கப்பட்டு , அந்த மலர்கள் காற்றில் அங்கும் அங்குமிங்கும் அசையும்போது, அவை கண்ணனின் அலைபாயும் கண்களை அல்லவோ நினைவுறுத்துகிறது. கண்ணனை தேடும் என் கண்கள்... அவன் மேல் கொண்ட அளவற்ற நேசத்தால், பாசத்தால் ஒளிவீசுகிறது. சூரியனின் ஒளி விரிந்த தாமரை மலர்களை ஒளி பெறச் செய்வது போல் அல்லவோ இருக்கிறது.

மலய மருதம்.... ஆம் மலைகளை அணைத்து குளிர்ச்சி பெற்று வீசும் தென்றல் என்னை மகிழ்விப்பதை விட அந்த மாயாவி கிருஷ்ணன், தேனினும் இனிய குரலில் என்னுடன் சம்பாஷிக்கும்போது நான் பெரும் சுகம் முற்றிலும் சுகம், இனிமையானது.

பகல் நகர்ந்து போய் இரவு நெருங்குகிறது. சூரியன் இருந்த இடத்தில் இப்போது சந்திரன். குளுமையை வாரி வீசுகிறான். நீரில் இப்போது அல்லி மலர்கிறது. அது அசைவது கிருஷ்ணன் மெதுவாக தாமரைப் பாதங்களை அடிமேல் அடிவைத்து எடுத்து அசைந்து வருவது போல் அல்லவோ இருக்கிறது.
கண்ணனைக் காணோம்...கண்கள் அவனை தேடுகிறது. சூல் கொண்ட கார் மேகம் எந்த நேரமும் ஜோ என்று மழையை பொழியலாம். அந்த மேகத்தை பார்த்தாலாவது கிருஷ்ணனை நேரில் கண்ட சமாதானம் ஏற்படுகிறது. அதே நிறம் அதே கம்பீரம், அதே அழகு அல்லவா அவனும்?

அவனை நினைக்கும்போது, அவனது மஞ்சள் பீதாம்பரம் தகதகவென்று சொக்கத்தங்கத்தை சூரிய ஒளியில் பார்த்தது போல் இருக்குமே, அந்த எண்ணம் தரும் சுகத்தில் நான் திளைத்திருக்கும்போது என்னை நீங்கள் எல்லோரும் கேலி செய்து பேசுவது கிட்டவே நெருங்கவில்லை. அவனைக் காணோமே என்ற ஏக்க பெருமூச்சு அதை அகற்றி விடுகிறது.

கண்ணனின் நினைவு தரும்,புத்துணர்ச்சி, என்னை மட்டுமா, இந்த அகில லோகத்தையும் மயக்கும் வேளையில், எனக்கு அவனைக் காணாத துக்கம், ,பிரிவு, என்ன செய்யும். ''

இது ஏதோ ஒருவர்ணனை அல்ல. ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் ஒரு அஷ்டபதி. இதை அழகாக ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடி தந்திருக்கிறார். அதை நானும் பாட முயற்சித்து சந்தோஷம் அடைகிறேன்.

No comments:

Post a Comment