Wednesday, May 22, 2019

Yatiraja

யதிராஜர்

யதி என்றால் சன்னியாசி என்று பொருள். வரதராஜரின் சந்நிதியில் துறவறம் மேற்கொண்டார். யதிராஜர் என்ற பெயர் பெற்றார். யதிகளுக்கு ராஜன் - யதிராஜர்.

ஸ்ரீரமானுஜர் யாதவப்பிரகாசருக்கு இடையே நடந்த மோதல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 
ஸ்ரீரமானுஜரின் மீது இருக்கும் அபிமானத்தால் யாதவப்பிரகாசரை ஏதோ வில்லன் மாதிரி நினைத்து அவன் இவன் என்று நாம் பேசுகிறோம், எழுதுகிறோம்.

யாதவபிரகாசர் ஸ்ரீ ராமானுஜரை ஆசர்யித்து 'கோவிந்த ஜீயர்' என்ற திருநாமத்துடன் ஸ்ரீ ராமானுஜரின் நியமனத்தால் சந்நியாசிகளின் தர்மங்களை விளக்கும் 'யதிதர்ம சமுச்சயம்' என்னும் நூலை இயற்றினார். யதிகளுக்குக் இன்றும் கையேடாக விளங்குகிறது. அதில் ஒரு விஷயம் யதிகள் அழக் கூடாது என்பது. அப்படி அழ வேண்டும் என்றால் யாரும் இல்லாத காட்டில் சென்று அழுதுவிட்டு வர வேண்டும் என்கிறது கையேடு.

ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வானின் மனம் கொஞ்சம் குழம்பியிருந்தது. பெரிய பெருமாள் அவரிடம் உமக்கு என்ன கலக்கம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஆழ்வான் "உடல் மிகவும் தளர்ந்து பகவானை முழுமையாக அனுபவிக்கக் கைங்கரியம் செய்ய முடியவில்லை, அதனால் என்னை விடுவித்து பரமபதத்தில் ஆத்மாவை நிலைக்க வைக்க வேண்டும் என்று வேண்டினார். பெருமாள் அவருக்கு மட்டும் அல்லாமல் அவரைச் சார்ந்த எல்லோருக்கும் பரமபதத்தை அளித்தார்.

இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீ இராமானுஜர் சந்தோஷமும் அதே சமயம் வருத்தமும் அடைந்தார். 
"எனக்கு முன் நீர் முந்திக்கொண்டீரே ? உம் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்வேன் ? " என்ற போது ஆழ்வான் திருவாய்மொழி "சூழ்விசும்பு" என்று தொடங்கும் பாசுரங்களில் ஸ்ரீ வைகுண்டத்தில் புகுகின்ற புதியவர்களுக்கு ( ஜீவாத்மாவிற்கு ) வரவேற்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. தாம் முன்னே சென்றால் தான் பரமபதத்துக்குப் பின்னே வருபவர்களுக்கு ( ஸ்ரீ ராமானுஜர் ) எதிர்கொண்டு மரியாதையுடன் எதிர்கொண்டு வரவேற்க முடியும். சீடரான தாம் முறைப்படி வரவேற்பு அளிப்பது தானே சரியாக இருக்கும் ?

இராமானுஜர் என்ன செய்திருப்பார் ? ஆழ்வானை தன் மார்புடன் அணைத்துக்கொண்டார்.

கூரத்தாழ்வான் பரமபதம் புறப்படும் சமயம், ஸ்ரீ இராமானுசர் ஆழ்வானின் காதுகளில் திருமந்திரத்தை ஓதினார். பிறகு மீண்டும் ஓதினார். பக்கத்திலிருந்த சீடர்கள் ஏன் மறுபடியும் ஓதினீர்கள் என்று கேட்க அதற்கு உடையவர் ஓர் அரசிலங்குமாரன் வாயில் கற்பூரத்தைப் போட்டுக் கொள்ளாமல் இருந்தால் அவன் நாக்கு உலர்ந்து போய்விடும். அதே போல ஆழ்வானுக்குத் திருமந்திரம் தான் கற்பூரம், கூரேசர் நாக்கு உலந்து போகாமல் இருக்க மீண்டும் திருமந்திரத்தை ஓதினேன் என்றார். என்ன மாதிரி ஆசாரியன், என்ன மாதிரி சிஷ்யன்

ஆழ்வான் பரமபதம் அடைந்த போது ஸ்ரீரமானுஜர்

ஒரு மகள் தன்னை உடையேன் 
உலகம் நிறைந்த புகழால் 
திருமகள் போல வளர்த்தேன் 
செங்கண்மால் தான் கொண்டு போனான்

ஆண்டாளைப் பிரிந்த பெரியாழ்வார் கூறிய வார்த்தை சொல்லி அழுதார் உடையவர்.

யதிகள் அழக்கூடாது என்று சொல்லியிருக்கிறதே என்று யோசிக்கலாம். ஆழ்வான் போலச் சிஷ்யரும் ஸ்ரீரமானுஜர் போல ஆசாரியனும் இருந்தால் exceptions இருக்கலாம் அதனால் தான் அவர் exceptional யதியாக, யதிராஜராக இருந்திருக்கிறார் !

- சுஜாதா தேசிகன் 
6.5.2019

No comments:

Post a Comment