Friday, May 24, 2019

Story of Bikshadanar & Mohini - Spiritual story

பிக்ஷாடனர் - மோகினி கதை

முன்னொரு காலத்தில் ஒரு கற்பத்தில் தேவதாரு வனம் என்ற காடொன்று இருந்தது. அதில் வசித்து வந்த மகரிஷிகள் யாகமே எல்லா பயன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் யாகத்தைக் காட்டிலும் கடவுள் வேறு இல்லை என்றும் தீர்மானித்தார்கள். அவர்களது மனைவியரோ தங்கள் கற்பே சிறந்தது என்றிருந்தார்கள். 

சிவபெருமான் அவர்களது மயக்கத்தை அறிந்து அதை ஒழிக்கக் கருதி மகாவிஷ்ணுவை அழைத்து "நீ பெண் வடிவம் ஏற்று என்னுடன் வருவாயாக!" என்று பணிந்தார். 

உடனே திருமாலும் பொற்பதுமை போன்ற உடலழகும் முழுநிலாப் போன்ற முகமும் மன்மதனுடைய கரும்புவில்லைப் போல் வளைந்த புருவமும் உள்ள வேல் போன்ற கூர்மையான கருவிழிகளும் முல்லையரும்பு போன்ற அழகான பல்வரிசையும் கொவ்வைப் பழங்களைப் போன்ற சிவந்த உதடுகளும் பொற் கிண்ணங்கள் போன்ற ஸ்தனங்களும் சாணைக்கல் போன்ற கன்னமும் சங்கு போன்ற கழுத்தும் மூங்கில் போன்ற தோளும் உடுக்கைப் போன்ற இடையும் யானைத் துதிக்கைப் போன்ற தொடையும் பாம்பின் படம் போன்ற நிதம்பமும் செந்தாமரை மலர் போன்ற கைகளும் செம்பஞ்சுக் குழம்பூட்டிய பாதங்களுமுடைய சரவாபரண பூஷிதையான பூங்கொடியென ஒரு பெண்ணுருவம் எடுத்துக் கொண்டார். 

சிவபெருமானும் அந்த மங்கைக்கேற்ற ஆணழகராய் கோடி சூரியப்பிரகாசமான திவ்விய தேஜசையுடைய திருமேனியோடும் விளங்கினார். அவர் ஒரு கையில் டமருகமும் ஏந்தி, உள்ளாளப்பன் பாடிக் கொண்டு திகம்பரராய் (நிர்வாணமாய்) மதயானையை போல் நடந்து மாயனாகிய மோகினிப் பெண்ணுடன் தாருகாவனத்து முனிவர்களின் தவநிலையையும் அம்முனி பத்தினியரின் கற்பையும் சோதிக்கக் கருதி அந்த வனத்தை அடைந்து நிர்வாணமாய்த் திரிந்து அம்மங்கையர்கள் மையல் கொள்ளும்படி வீடுகள் தோறும் சென்று பிச்சைக் கேட்டார்.
 ரிஷிபத்தினிகள் பிட்சைப் பொருளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பிக்ஷாடனரைக் கண்டதும் காமப் பித்தேறியவர்களும் மதி மயங்கியவர்களும், தூரமாக ஓடியவர்களும் எவ்வாறு அப்படியே கட்டியணைப்பார்களோ, அதுபோல ஆசையோடு அவரை அழைக்கலானார்கள்.

மையல் அவஸ்தையால் அவரைத் தன்னோடு கூடி மகிழச் சேர வாரும் என்று கூப்பிட ஆரம்பித்தனர். சிலர் மோகத்தின் ஆவேசத்தோடு பின் தொடரலாயினர். பெருமூச்சு விட்டுக் கொண்டு காமத்தால் தாம் செய்வது எது வென்றே தெரியாமல் வளையல்களைச் சோரவிட்டும் ஆடைகளை நழுவ விட்டும் விழி தெரியாமல் வீழ்ந்தும், வார்த்தை குழறுவோர்களுமாக அலைந்தார்கள். 

நீலகண்டராகிய பிக்ஷாடனப் பெருமானோ வேத கீதங்களைப் பாடிக் கொண்டும் விநோத வித்தைகளைச் செய்து கொண்டும் வீதியில் திகம்பரராகவே(நிர்டாணமாகவே) உலாவிக் கொண்டிருந்தார்.
 மோகினி வடிவமேற்ற மஹாவிஷ்ணுவோ உடல் இளைக்கச் செய்யும் தவமே சிறந்தது என்றறிந்த முனிவர்களைக் கண்டு பெண்மையின் சாகஸங்களை எல்லாம் காட்டத் தொடங்கினார். 

நாணமுற்றதைப் போல் கவர்ச்சிகரமாக நெளிந்து ஒதுங்கியும் தன் கையில் ஏந்திய வீணையில் சுருதி சேர்த்து இனிமையாகப் பாடியும், கண்வீச்சு வலைகளால் பலரது மதியை மயக்கியும், பண்ணமைந்த பாடல்களினால் பலர் உள்ளத்தை வாட்டியும் புன்னகையால் பலரைத் துன்புறுத்தியும் இவ்வாறு பலவிதத்திலும் மோகினி மோக அக்னியை அவர்களுக்கு மூட்டி விட்டாள். 

அதனால் அம்முனிவர்கள் தங்கள் தவச்செயலை மறந்து போயினர். அவச்செயல் கொண்டு மதி மயங்கி மாயனாகிய மோகினியின் மலரடியில் விழுந்து "பெண்ணே! பேரழகியே, நீ என்ன காரணமாக இங்கே வந்தாய்? நீ இங்கே வந்தது எங்கள் தவப்பயனே!" என்று தங்கள் சடைகள் அவிழ்ந்து தரையில் விழவும் உத்தரீயமும் நழுவி விழவும் மோகினியைப் பார்த்தனர்.

அங்கே அந்த சமயத்தில் தங்கள் பத்தினிகள் கற்பையும், வளையல் முதலான ஆபரணங்களையும் ஆடைகளையும் நழுவவிட்டு ஏதோ ஒரு பிக்ஷாடனரைச் சூழ்ந்து வருவதைக் கண்டார்கள். உடனே கோபம் கொண்டு நிர்வாணமாகத் திரியும் அத்திகம்பரணையடைந்து பலவிதமாகச் சபித்தார்கள். 

ஆனால் அச்சாபங்கள் எதுவுமே சர்வலோக சரண்யனான சிவபெருமானை அடையவில்லை அதைக் கண்டதும் முனிவர்கள் பிக்ஷாடனரை நெருங்கி "ஐயரே! நீர் யார்! இந்த மோகினி யார்?" என்று கேட்டார்கள். அதற்குப் பெருமான் "நான் ஒருமுனிவன். இவள் என் மனைவி. இங்கே தவம் செய்ய வந்தோம்" என்றார். 

அதற்கு முனிவர்கள் "அப்படியானால் மயக்கும் வேசி போல் திரியும் இவளை நீக்கிவிட்டு நீர் தவம் செய்யும்!" என்றார்கள் அதற்கு பிக்ஷாடனர் "மனைவியோடு தவம் செய்வதே சிறந்த வானப்பிரஸ்த தர்மம். நீங்கள் உங்கள் மனைவியரோடு சேர்ந்து தவம் செய்யவில்லையா? நீங்கள் மற்றும் உங்கள் மனைவியரின் கற்பு மிகவும் அழகாக இருக்கிறதே! உங்கள் செயல் இப்படியிருக்க கற்பிற்சிறந்த என் மனைவியை விட்டுவிட்டு நானோ தனித்துத் தவம் செய்வேன்?" என்று சொல்லி கோபம் கொண்டவரைப் போல அவர்களை விட்டு நீங்கினார். 

மோகினியாகிய மாயவனோடு வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தையடைந்து வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் செய்த பூஜைகளை ஏற்று திருக்கைலையை அடைந்தார்.
 வேததாருவனத்தைச் சேர்ந்த முனிவர்கள் சிவபெருமானையும் விஷ்ணுவையும் இகழ்ந்து பேசிய பாவத்தால் ஜ்வரம் முதலிய வியாதிகளையும் பசி முதலான துன்பங்களையும் மனக் கவலையையும் அடைந்தனர்.

 உடல் நடுங்க வாய் குழற "சுவாமி! நோய்களாலும் எண்ணற்ற துன்பங்களாலும் நாங்கள் துன்புற்று வருந்துகிறோமே! இதற்குக் காரணம் என்ன? இதை ஒழிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள். 

அதற்குப் பிரம்மதேவர், "முனிவர்களே யாரானாலும் தன் வீட்டுக்கு வந்த அதிதியை பூஜிக்க வேண்டும் என்பது தர்மம், இதையுணர்ந்த நீங்கள் வேதங்களும் தேடியறியாத சிவபெருமானே பிக்ஷாடனராகவும் திருமாலே அவரது மனைவியாகவும் பிரத்யட்சமாகி உங்கள் இருப்பிடங்களுக்கு வந்த போது நீங்கள் அவர்களை அவமதித்தீர்கள். அதனாலேயே இத்தகைய துன்பங்களை அடைந்தீர்கள் பரமேஸ்வரனை அப்பெருமானின் மனமகிழ நாள் தோறும் சிவ லிங்க அர்ச்சனை செய்யுங்கள்!" என்றார். 

தவ முனிவர்களும் தாருகா வனத்தையடைந்து பிரம்மதேவர் சொல்லியபடி ருத்திராட்ச கண்டிகை அணிந்து விபூதி உத்தானனம் செய்து ஸ்ரீபஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவபக்தியை உடையவராய் மனைவியரோடு இரவும் பகலும் இடைவிடாது நல்லமலர்களால் அர்ச்சனை செய்து வந்தார்கள். 

அவ்வாறு இருக்கும் போது சிவபெருமான் முன்பு போலவே பிக்ஷாடனராக மோகினியுடன் தாருகா வனத்தை அடைந்து சிறிதுநேரம் குதித்தும் விளையாடிக் கொண்டும் சிறிது நேரம் வேத கீதம் பாடிக் கொண்டும் பிக்ஷை ஏற்பார் போல உலாவியும் யோகம் செய்தும் வீணே சிரித்தும் மோகினியோடு சேர்ந்து விளையாடிக்கொண்டும் இருந்தார்.

அவர்கள் அவ்வாறு விளையாடுவதைக் கண்டதும் தவ முனிவர்கள் தங்கள் பத்தினிகளோடு அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று அவர்களது திருவடிகளை மலர்களால் அர்ச்சனை செய்து பணிந்தார்கள். 

சிவபெருமான் அவர்கள் மீது தயையும் இரக்கமும் கொண்டு பல்லாயிரங்கோடி உதயசூரியனைப் போன்ற தமது மெய்வடிவைக்காட்டினார் முனிவர்கள் வேத வாக்கியங்களால் துதித்து உடல் சிலிர்க்க ஆனந்தக் கண்ணீர் சொரிய வணங்கி வழிபாடு இயற்றினார்கள். 

அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து "மகரிஷிகளே! நீங்கள் கடவுளே இல்லை என்று கருதியதால் இவ்வாறு நாம் உம்மைப் பரீட்சித்தோம்" என்று அவர்களுக்கு ஞான உபதேசம் செய்து "இச்சிவலிங்கத்தை எப்பொழுதும் பூஜை செய்யுங்கள்" என்று மோகினியுடன் மறைந்து ஆங்கோர் சிவலிங்க மூர்த்தமாய் எழுந்தருளினார். 

அந்த லிங்கமே நீங்கள் கேட்ட தாருகாவன நாகேஸ்வரலிங்கம் அது முதல் முனிவர்கள் அந்த லிங்க மூர்த்தியைக் காலந் தவறாமல் பூஜை செய்து தங்கள் இஷ்ட காமியங்களை அடைந்தார்கள்.

No comments:

Post a Comment