Thursday, May 23, 2019

Narada bhakti sutram 67,68 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்ரம்

சூத்திரம் 67.
பக்தா ஏகாந்தினோ முக்யா:

பகவானை அவனுக்காகவே ஒருமுகப்பட்ட பக்தியோடு நேசிப்பவர்கள் முதல் தரமானவர்கள். இது முக்யபக்தி எனப்படுவது. சாத்விக ராஜச தாமஸ் பக்தியின் வகைகளை முன்னம் பார்த்தோம். இது கௌண பக்தி.முக்ய பக்தி என்பது குணங்களுக்கு அப்பாற்பட்டது. அதில் சுயநலத்திற்கே இடமில்லை.

மோட்சம் வேண்டும் என்ற ஆசை கூட இல்லை. தொண்டரடிப்பொடி ஆழ்வார் 'அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் ,' என்கிறார். ஹனுமான் ராமநாமம் இல்லாத வைகுண்டம் தனக்கு வேண்டாம் என்றார். பிரஹ்லாதன் , நாரதர் முதலியோர் இந்த முக்ய பக்திக்கு உதாரணம் ஆவர்.

சூத்திரம் 68
கண்டாவரோத ரோமாஞ்ச அச்ருபி: பரஸ்பரம் லபமானா: பாவயந்தி குலானி ப்ருதிவீம் ச

தழுதழுத்த குரலோடும், புளகாங்கிதத்தோடும் , நீர் வழியும் கண்களோடும் ஒருவருக்கொருவர் பகவானைப் பற்றி உரையாடுகின்றவராய் அவர்கள் குலத்தையும் இந்த பூமியையும் புனிதப்படுத்துகின்றனர்.

கீதையில் கண்ணன் சொல்கிறான், 
மச்சித்தா மத்கதப்ராணா: போதயந்த: பரஸ்பரம் 
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச.

என் பக்தர்கள் என்னிடமே வைத்த சித்தத்துடனும் , என்னிடம் ப்ராணனையே வைத்து ஒருவருக்கொருவர் எப்போதும் என்னைப்பற்றி கூறுகின்றவர்களாய் மகிழ்ச்சியுடன் ரமிக்கின்றனர்.

முகுந்த மாலையில் குலசேகரர் கூறுகிறார். 
பத்தேநாஞ்சலினா நதேன சிரஸா காத்ரை:ஸரோமோத்கமை: 
கண்டேன ஸ்வரகத்கதேன நயனேன உத்கீர்ணபாஷ்பாம்புனா
நித்யம் த்வத்ச்சரணாரவிந்தயுகள த்யானாம்ருதாஸ்வாதினாம்
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸமப்த்யதாம் ஜீவிதம்

ஸரஸீருஹாக்ஷ- தாமரைக்கண்ணனே, . பத்தேநாஞ்சலினா- கூப்பின கையோடும் , நதேன சிரஸா, வணங்கிய தலையுடனும், காத்ரை:ஸரோமோத்கமை:- மயிர்கூச்சத்துடன் கூடிய அங்கங்களோடும் , 
கண்டேன ஸ்வரகத்கதேன- தழுதழுத்த குரலோடும் , நயனேன உத்கீர்ணபாஷ்பாம்புனா- வழிந்தோடும் கண்ணீருடன் கூடிய கண்களோடும், நித்யம் – எப்போதும், 
த்வத்ச்சரணாரவிந்தயுகள த்யானாம்ருதாஸ்வாதினாம்- உன் திருவடித்தாமரையை தியானம் செய்வது என்ற அம்ருத ரசத்தை பருகுகின்ற, அஸ்மாகம்- எங்களுக்கு, ஸததம் – எப்பொழுதும், ஜீவிதம்- வாழ்க்கையானது ஸம்பத்யதாம் – நிறைவுள்ளதாக ஆகட்டும்.

எப்போதும் கண்ணனையே நினைத்து அவனைப்பற்றியே பேசிக்கொண்டு அதிலேயே இன்பம் கண்ட கோபியர் இதற்கு சிறந்த உதாரணம்.

  

No comments:

Post a Comment