Friday, May 31, 2019

Godha stuti

கோதைத் துதி-21
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 07.05.2019)

பங்குனி உத்திரத் திருநாள்..!

அயராத, தளராத விடாமுயற்சியின் வெற்றி..!

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6

கனவு நிஜமானது..! 

"ஆழி வல்லனை ஆதரிப்பும்
ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்
தோழியர்காள்.! நம் உடையமேதான்.." என்கின்றாள் பராங்குசநாயகி..! 

அவனை நாம் அடைவது நம் அளவில் நடக்கின்றா ஒன்றா.. என்ன..? என்கின்றாள்..! ஆனால் ஆண்டாள் விஷயத்தில் அது நடந்தது..! 

அவனை அடைந்தது மட்டுமின்றி அவனோடு அந்தரங்கமாய் கலந்தாள்..!

பெரியாழ்வார் அரற்றுகின்றார்..!

"ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்,
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
மணாட்டுப்பு றம்செய்யுங் கொல்லோ. 4"

பெரியபிராட்டியாரைப் போன்று வளர்த்தேன்..! செங்கண்மால்தான் கொ்ண்டு போனான், என்று அழுகின்றார்..! 

(பெரியபிராட்டியார் போன்று வளர்த்தார - பெரிய பெருமாள் கொண்டு போனார்..!)

ஆழ்வார் அரங்கனுடன் கலநத ஆண்டாளை மீட்டுத்தர வேண்டுகின்றார்..!

பெற்ற மகளல்லவே..!   பெற்றமகளைக் காட்டிலும் பாசம் கொட்டி வளர்த்த மகள்தான்..! இருப்பினும் ஊரார் ஏதும் அவதுாறு சொல்லமாட்டார்களோ..? 

பயந்தார்..! அழுதார்..! கெஞ்சுகின்றார்..!

"ஆழ்வீர...!"
அரங்கன் குரல்...!

உம் திருமகளைக் கொண்டு போம்..! யாம் அங்கு பங்குனி உத்திரத்தன்று வந்து முறைப்படி திருமணம் செய்து கொள்கிறோம்..!" 

ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் , அரங்கனுடன் கலப்பதற்கு முன்னமேயே

"நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
நாராயணா! நரனே! உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால் 
எமக்கு வாதை தவிருமே; - 

காமன் போதரு காலம் என்று 
பங்குனி நாள் கடை பாரித்தோம்;
தீமை செய்யும் சிரீதரா! எங்கள்
சிற்றில் வந்து சிதையலே "-.

"பங்குனி நாள் கடை பாரித்தோம்" என்று பாடுகின்றாள்..! அந்த பங்குனி மாதத்திலேயே, பெரியபிராட்டியாரின் அவதார தினத்திலேயே,  ஆண்டாளோடுத் திருக்கல்யாணம்..!

பங்குனி உத்திரத்தன்று, நம்பெருமாள் கருடாரூடராய் வில்லிபுத்துார் வந்தடைந்தார்..!

திருவீதிகள், மாடவீதிகள் அனைத்தும் விழாக்கோலம் கொண்டது..!

கல்யாண உற்சவம் ஆரம்பமாகின்றது..!

காசி யாத்திரைக்கு ரங்கன் கச்சம் கட்டிக்கொண்டு, மஞ்சள் தடவிய பூணுால், வலது கையில் செங்கோல், இடது கையில் பந்துக்கோல் (சாட்டை) வலது தோளில் மஞ்சள் தடவிய தேங்காய், அக்ஷதை மூட்டைகளுடன், கிளம்புகின்றார்..! 

மேளதாளங்களுடன் மாடவீதிகள் பிரதக்ஷிணம் பண்ணுவார்..! 

பெரியாழ்வார் தம் ஸந்நிதியிலிருநது புறப்பட்டு பெரியாழ்வார் திருமாளிகை வந்தடைவார்..!

திருமாளிகையிலிருந்து, இரண்டு பூரணகும்பம், இரண்டு தட்டு வெற்றிலை, பாக்கு இரண்டிரண்டு மஞ்சள் தடவிய தேங்காய்கள் முதலானற்றவுடன் ஆண்டாள் ஸந்நிதி வாசலுக்கு, ரங்கமன்னார், பெரியாழ்வார், மற்றும் திருமாளிகையிலிருந்து கொண்டு வரப்படட மங்கலப் பொருட்களுடன் ஒரே நேரத்தில் வந்து சேருவா்..!

ரெங்கமன்னார் காசி யாத்ரை வேண்டாமென்று தடுத்து நிறுத்தப்படுவார்..!

"தத்விஷ்ணோ..."   "க்ருணாஹி.."  ஆகிய இரண்டு வேத பத்ததிகள்  சேவிக்கப்படும்..!

"செண்டலங்கார தாஸராகிய 
அழகிய மணவாளப் பெருமாளான தேவரீர்க்கு
பெரியாழ்வாருடைய திருக்குமாரத்தியாகிய 
கோதை சூடிக்கொடுத்த நாச்சியாரை
கன்னிகாதானம் செய்து கொடுக்கிறோ....ம்"

என்று அர்ச்சகர் பெருமாளிடத்து விண்ணப்பம் செய்ய..., 

ரங்கமன்னார் எழுந்தருளியிருக்கும் பல்லக்கானது சற்று சந்தோஷத்தில் குலுங்கி அசைந்தாடும்..!

தொடரும்... !
 
தாஸன் - முரளீ பட்டர்
#கோதைத்துதி

No comments:

Post a Comment