Tuesday, April 9, 2019

Vishnu Sahasranama 192 to 200 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - 22

192. மரீசி: - மரீசி என்றால் ஒளிக்கதிர் என்று பொருள். பகவான் ஒளிஸ்வரூபம். ஜனுஷா அந்தேப்ய: அபி பிரகாசித நிர்மலரூப: பிறவியிலேயே கண்ணில்லாதவர்க்கும் பிரகாசிக்கும் நிர்மல ரூபத்தை உடையவர். ஏனென்றால் அவர் அதீந்த்ரியர் ஆதலால் அவரைக் காண இந்த்ரியங்கள் தேவை இல்லை. சூர்தாசருக்கு காட்சி அளிக்கவில்லையா? இந்த்ரியங்கள் நமக்கெல்லாம் இறைவனைக் காண்பதில் உள்ள தடைகள். நம்மை வெளியுலகத்திற்கு இழுத்துச்செல்வதால்.

193. தமன: - பக்தர்களின் சம்சாரத்தினால் உண்டாகும் வெப்பத்தைத் தணிப்பவர். அவர்களுக்கு கெடுதல் நினைப்போரை தண்டிப்பவர். 'தண்டோ தமயதாம் அஸ்மி. ' (கீதை.1௦.38) 'தண்டிப்பவர்களில் நான் தண்டனை.' யமன் முதலிய வடிவில் தண்டிப்பவர்.

194.ஹம்ஸ:- 'ஹம்ஸஸ்ஸோஹம், ஸோ அஹம் ஹம்ஸ:,' அஹம் அல்லது நான் என்பது அந்தர்யாமியாகிய நாராயணன்.ஹம்ஸ: என்பது சுத்தசத்வ ஸ்வரூபமான பிரம்மத்தைக் குறிக்கிறது.
பகவான் ஹம்ஸ ரூபத்தில் தோன்றி ஸனகாதியருக்கு உபதேசித்தார்.

ஹந்தா என்ற சொல்லிலிருந்து ஹம்ஸ என்ற சொல் தோன்றியது என்று சொல்லலாம் ஹந்தா என்றால் செல்வது என்று பொருள்.மனோஹரம் ஹந்தி, கச்சதி இதி ஹம்ஸ:. அழகான நடையை உடையவன். இந்த அர்த்தம் அன்னத்திற்கும் பொருந்தும்.

( ஹந்தா என்றால் கொல்பவன் என்றும் பொருள் ஆனால் இங்கு அதுவல்ல . இதுதான் வடமொழியின் சிறப்பு .ஒரே சொல்லிற்கு வெவ்வேறு அர்த்தங்கள். சூழலுக்கேற்ப பொருள் கொள்ள வேண்டும். உதாரணமாக சைந்தவம் என்றால் குதிரைக்கும் உப்பிற்கும் பொதுவான பெயர். சாப்பிட உட்கார்ந்து இருக்கும்போது சைந்தவம் ஆனய (கொண்டுவா ) என்று சொன்னால் உப்பைத்தானே எடுத்து வருவர். குதிரையை அல்லவே?)

195.ஸுபர்ண: - சோபனம் பர்ணம் யஸ்ய ஸ: ஸுபர்ண: - அழகிய சிறகுகளை உடைய என்று பொருள் கொண்டால் இது ஹம்ஸாவதாரத்தைக் குறிக்கிறது.

ஸுபர்ணன் என்பது சாதாரணமாக கருடனைக் குறிக்கும்.கருடனும் பகவானும் ஒருவரே. 'ஸ்வார்த்தாபிரூட: பஹி: அபஹி: அபிவ்யக்தம் அப்யேதி,' -தேசிகரின் கருடபஞ்சாசத். வேதஸ்வரூபமான கருடன் உள்ளும் வெளியும் பகவானே.

பாரம் நயதி இதி பர்ண: கரை சேர்ப்பவன். பகவான் சம்சார சாகரத்தில் இருந்து நம்மை கரை சேர்ப்பதால் ஸுபர்ண: எனப்படுகிறான்.,\

ஸுபர்ண என்ற சொல் உபநிஷத்தில் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கப் படுகிறது.
'த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா—' (முண். உப. 3.1.1)என்ற உபநிஷத் வாக்கியம் இரு பறவைகள் ( ஸுபர்ணா) ஒன்றாகத் தோன்றி ஒன்றாக இருப்பவை ( ஜீவாத்மா பரமாத்மா – மரம் என்பது உலகம்அல்லது சம்சாரம்) ஒரே மரத்தில் அமர்ந்துள்ளன. அவைகளில் ஒன்று புளிப்பும் இனிப்புமான பழங்களை உட்கொள்கிறது ( ஜீவாதமா சுகம் துக்கம் என்னும் பழங்களை உண்ணுகிறது.) இன்னொன்று எதுவுமே உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது( சாக்ஷிபூதமான பரமாத்மா. ) அதனால் பகவான் ஸுபர்ண: என்று குறிப்பிடப்படுகிறான்.

196.புஜகோத்தம: -உத்தமமான சர்ப்ப வடிவினர். 'ஸர்பாணாம் அஸ்மி வாஸுகி: ." ப.கீ. 1௦.26 , நான் சர்பங்களில் வாசுகியாக இருக்கிறேன். இது முதல் வ்யூஹ ரூபமான சங்கர்ஷணனையும் குறிக்கிறது. புஜகம் ஆதிசேஷ ஸ்வரூபம். அதன் மேல் பள்ளி கொண்டவன் புஜகோத்தமன்.

197.ஹிரண்ய நாப:-பொன் மயமான தாமரையை நாபியில் கொண்டவர். நாபி என்றால் சக்கரத்தின் அச்சையும் குறிக்கும். கால சக்கரம் உழலும் அச்சாக இருப்பவன் ஹிரண்ய என்றால் அழகிய என்று பொருள். அழகிய மேனி கொண்டவன்.

198.ஸுதபா: - தபஸ் என்பது ஞானத்தையும் குறிக்கும். பரம ஞானஸ்வரூபன். தபஸ் ஏன்ற சொல்லின் சாதாரண அர்த்தத்தில் நரனாகவும் நாராயணனாகவும் பத்ரியில் தவம் செய்ததைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

199..-பத்மநாப:- தாமரையை நாபியில் கொண்டவன். பத்மம் என்றால் ஞானம் என்றும் பொருள்.ஹ்ருதய மாகிற தாமரையின் நாபியில் அதாவது நடுவில் பிரகாசிக்கிறவன்.

2௦௦. பிரஜாபதி:-சிருஷ்டி கர்த்தா. அவர் பிரஜைகளாகிற உயிர்களின் தலைவர்.


No comments:

Post a Comment