Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
நாரத பக்தி சூத்ரம்
61.லோகஹாநௌ சிந்தா ந கார்யா
நிவேதிதாத்மலோக வேதத்வாத்
.பக்தன் தன்னையும் உலகத்தையும் வேதத்தையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்த பின் உலக விஷயமான கஷ்டங்களைப் பற்றி கவலையுற வேண்டுவதில்லை .
இது 'ஸர்வதர்மான் பரித்யஜ மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் சர்வபாபேப்ய: மோக்ஷயிஷ்யாமி மா சுச:,' எல்லா தர்மங்களையும் விட்டு ( அதாவது லௌகிக அலௌகிக கர்மங்கள் ) விட்டு விட்டு என்னிடம் சரணம் அடைந்து விடு. நான் உன்னை எல்லா பாபங்களில் ( கர்ம பலன்கள்) இருந்து காப்பாற்றுவேன். கவலைப் படாதே என்ற கீதாசார்யனின் வாக்கை நினைவூட்டுகிறது.
எதனால் அப்படி என்றால் அப்படிப்பட்ட பக்தனின் யோகக்ஷேமத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் ( யோகக்ஷேமம் வஹாம்யஹம்) என்று கூறினான் அல்லவா?
62.ந தத் ஸித்தௌ லோகவ்யவஹாரோ ஹேய: கிம்து பலத்யாக: தத் சாதனம் ச
செய்ய வேண்டிய உலக வ்யவஹாரங்களை விட்டு விடக் கூடாது. அவைகளின் பலனில் ஆசையை மட்டும் விட்டு விடுவதே பக்திக்கு சாதனம்.
அதாவது செய்கைகளை எல்லாம் நாம் பகவானின் கருவியே எல்லாம் அவன் செயல் என்று எண்ணி செயல் புரிதல் வேண்டும். அப்போது நான் செய்கிறேன் என்ற எண்ணம் போய் விடுவதால் பலனைப் பற்றி கவலை இருக்காது. எல்லாம் அவன் திருவுள்ளம் என்ற நிலை ஏற்படும். பின் பக்தி நிலை முற்றியபின் செயலற்று இருக்கும் நிலை எய்தி விடும்.
63.ஸ்திரீ தன நாஸ்திக சரிதம் ந ச்ரவணீயம்
ஸ்திரீகள் பொருள் நாஸ்திகம் இவைகளைப் பற்றி கேட்கவும் கூடாது.
இது காமத்தை வளர்க்கும் ஸ்திரீகள், பேராசையை உண்டாக்கும் செல்வம், இவைகளைப் பற்றியது. மீரா, ஆண்டாள் , கார்கி, சாவித்திரி போன்ற பக்தைகள் ஞானிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் இவர்களைக் குறிப்பதல்ல.
நாஸ்திகரகளைப் பற்றி கேட்பது பக்தி முழு நிலை அடையாதவர்கள் மனதைக் குழப்பக்கூடியது. நாஸ்திகக் கொள்கையுள்ள சிலர் வாதத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பின் .கடவுள் நம்பிக்கையுடையவர் மனத்தையும் குழப்பி விடுவர்.
அதனால் நாரதர் இம்மூன்றும் விலக்கத்தக்கவை என்கிறார்.
64.அபிமானதம்பாதிகம் த்யாஜ்யம்
தற்பெருமை, ஆடம்பரம் முதலியவைகள் விடத்தக்கவை.
இது பொருள் உடமைகள் பற்றியது மட்டும் அல்ல. ஒருவர் தன் பக்தியைபற்றியும் தன் மன அடக்கத்தைப்பற்றியும் கூட பெருமை கொள்ளக்கூடும். அப்போது இந்த்ரியங்கள் ஒரு பலஹீனமான தருணத்தில் மனத்தை வென்று விடும்.,
65. ததர்பித அகில ஆசார: ஸன் காமக்ரோதாபிமானாதிகம் தஸ்மின் ஏவ கரணீயம்
.
எல்லாவற்றையும் பகவானுக்கே அர்ப்பணித்த ஒருவனுக்கு காமக்ரோதாதிகள் அவனைக் குறித்தே இருக்க வேண்டும்.
அவனை நினைத்து உருகுவது காமம் , கருணை இல்லையா என்பது கோபம், அவன் பெருமை நினைந்து கர்வம் முதலியன.
.
66.த்ரி ரூப பங்க பூர்வகம் நித்ய தாஸ்ய காந்தா பஜனாத்மகம் வா ப்ரேமைவ கார்யம் ப்ரேமைவகார்யம்.
கீழ் நிலையான மூன்றுவித பக்தியையும் தாண்டி ஓர் அடிமையாகவோ அல்லது காதலியாகவோ பிரேமை செய்ய வேண்டும். பிரேமையே பக்தியாகும்.
சூத்ரம் 56ல் சாத்விக ராஜச தாமச பக்தியானது விவரிக்கப்பட்டது. உண்மையான பக்தி என்பது இந்த மூன்றையும் கடந்தது. தாஸ்யம் , அவனுக்கே அடிமையாவது, ஆஞ்சநேயர் , ஆதிசேஷன் போல. காதலனாக பாவிப்பது, கோபியரும் ஆழ்வார்களும் உணர்ந்த மாதிரி. அதாவது எண்ணம் முழவதும் அவனாகவே இருத்தல்.
இதுவரை பக்தியைப் பற்றிய விவரணம் கூறப்பட்டது. இனி வரும் சூத்ரங்கள் பகதர்களின் பெருமையைக் கூறுகின்றன.
No comments:
Post a Comment