Wednesday, January 16, 2019

Guru & sishya - Vivekananda

குரு சிஷ்ய விவகாரம் - J.K. SIVAN

எல்லோருக்கும் தெரிந்ததையே சொல்வத
னால் ஒரு வசதி என்னவென்றால். படிக்க யாரும் கஷ்டப்படவேண்டாம். எழுதும் எனக்கும் ஏதோ தெரியாததை எழுதி விட்டோமோ என்ற கவலையோ, பயமோ, துளியும் இருக்காது.

அப்படி எதைப்பற்றி இன்று எழுதலாம் என்று யோசிக்கும்போது தான் ' குரு -சிஷ்யன்' விவகாரம் மனதில் பட்டது. தற்போது எல்லோரும் அறிந்த விவரம் தான் இது. உபதேசங்கள், அறிவுரைகள், நல்வழிப்படுத்தல், ஆகியவை எந்தப்பக்கம் திரும்பினாலும் நம்மை வந்து அடைகிறதே என்று ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது. எங்கெங்கோ இருந்தெல்லாம் உபதேசங்கள், இதை செய், இதை செய்யாதே, அவர்கள் எதை செய்யாதே என்கிறார்களா அதை நன்றாக செய் என்று இன்னொரு பக்கமிருந்து அட்வைஸ் (advice ). தெரியாதது எதை சொல்லிக்கொடுத்தாலும் அவர் குரு தானே.

யார் குருவாக இருக்க வேண்டும் என்றால் நாம் தேடி அலைந்து கண்டுபிடித்தவராக இருக்கவேண்டும் என்பது பண்டைய முறை. அதிலும் எப்படி ஒரு காய் கனிந்து பழமாகும்போது அதை பறவைகள் நாடுமோ அது போல் பக்குவப்பட்ட மனத்தை உடைய சீடனை குரு என்பவர் தானாகவே காத்திருந்து அவனை அழைத்தோ நேரில் வந்தோ, ஏற்றுக்கொள்வார். இது விவேகானந்தர் பரமஹம்சர் விஷயத்தில் சாலப் பொருந்தும்.

இப்போது சில குருமார்களை பார்க்கும்போது அவர்களைப் பற்றி நமக்குள் சில அபிப்ராயங்கள் ஏற்படுகிறதல்லவா? விவேகானந்தருக்கும் முதல் முதலில் பரம ஹம்சரைப் பார்க்கும்போது என்ன தோன்றியது தெரியுமா?

''இந்த ஆள் ஏதோ சாதாரணமாகத்தானே இருக்கிறார். ஒன்றும் விசேஷமாக தென்படவில்லையே. பேசுவது கூட ரொம்ப சாதாரணமாகவே இருக்கிறது. இவரைப்பற்றி உயர்வாக ஒன்றும் தோன்றவே இல்லையே. இவர் ஒரு ஆசானாக இருக்க முடியுமா?'' அரை மனசோடு அவரை நெருங்கினேன், மனதில் பக்தியோ உயர்வாக அபிப்ராயம் எதுவும் இன்றி. நான் யாரையாவது குருவாக ஏற்குமுன் பலரை இதற்கு முன் கேட்கும் வழக்கமான கேள்வியைத் தயாராக வைத்திருந்தேன் . என் கேள்வியைக் கேட்டதும் அவர்கள் நெளிந்ததைக் கண்டிருக்கிறேன்.

''ஐயா. உங்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை உண்டா? ''
''ஒ, தாரளமாக.''
''அப்படியென்றால் உங்களால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியுமா?''
''ஒ முடியுமே''
'' எப்படிச் சொல்கிறீர்கள்?''
''அதுவா, இதோ பார் இப்போ நான் உன்னை எப்படி பார்க்கிறேனோ அப்படி தான் கடவுளையும் பார்க்கலாம் . ஆனால் அதற்கு கொஞ்சம் பிரயாசை வேண்டும் ''
இந்த பதிலை நான் எதிர்பார்க்காததால், முதன் முறையாக, ''கடவுளைப் பார்த்தேன்'' என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன ஒருவரைக் கண்டு வியந்தேன். அவர் மேல் இனம் புரியாத மதிப்பு உடனே தோன்றியது. உலகை நாம் நோக்கும் விதத்திலிருந்து சற்று மாறுபட்டு, ஆழமாக உள் சென்று நோக்கினால் கடவுளைக் காணலாம் என்பது புரிந்தது. அடிக்கடி, முடிந்த போதெல்லாம் தினம் தினம், அவரைச் சந்திக்க மனதில் ஆர்வம் மிகுந்தது. அவரைத் தேட ஆரம்பித்தேன்.

ஒரு தொடுதல், ஒரு பார்வை, வாழ்க்கையையே புரட்டி விட முடியும் என்பது உணர்ந்தேன். அவர் என் குருவானார்.

இந்த உடலிலிருக்கும்போதே ஒருவன் பரிசுத்தனாக, பரிபூர்ண கடாக்ஷம் பெற முடியும் என்பது என் ஆசானைப் பார்க்கையில் எனக்கு தெளிவாகியது. அந்த உதடுகள் எவரையும் கடிந்ததில்லை. யாரைப்பற்றியும் குறை சொல்ல வில்லை. அந்த நிர்மலமான கண்களில் தீயவை தென்படவில்லை. அன்பு, ஆதரவு, பாசம் தான் பொங்கி வழிந்தது. அவருள் இருந்த மனம் தீயவை என்றால் என்ன என்றே அறியாதது. எதையுமே நல்லதாகவே கண்டது மட்டுமில்லை அப்படியே ஏற்றுக்கொண்டது.

தெய்வீகம் என்றால் என்ன என்பதை அவரிடம் காணப்பட்ட எளிமை, பரிசுத்தம், தூய்மை, சர்வ சங்க பரித்யாக குணம் பறை சாற்றியது.

(விவேகானந்தர் ''என் குரு'' என்று ஒரு சிறந்த கட்டுரை எழுதியிருக்கிறார். அதை ஒரு நாள் சுருக்கமாக முக்யமான அமுத வாக்யங்களை மட்டும் எடுத்து எழுத எனக்குள் ஒரு ஆசை, உத்வேகம் இருக்கிறது. செய்கிறேன். )

இதிலிருந்து என்ன புரிகிறது. படிப்பு, பணம், படாடோபம், வயது, தாடி, காவி, இதெல்லாம் ஒருவரது ''உள் வளர்ச்சி''க்கு சம்பந்தமில்லாதது. எல்லையற்ற தூய சமநோக்கு, அன்பு, ஒவ்வொரு மனிதன் உள்ளேயும் ஒளிந்து கொண்டிருக்கிறதே. அதை தூசி தட்டி மேலே கிளப்பவேண்டும். அப்போது தான் அவனது ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும், எண்ணத்திலும் நிரம்பி வெளிவரும். இது தான் உண்மையிலேயே ஞானம். இதை தானும் அனுபவித்து மற்றவனுக்கும் உதவுபவர் தான் குரு.

ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள, அறிந்துகொள்ள சத் சங்கம் அவசியம். மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் தெரியுமா?

''இந்த மாயா உலகில் சிக்கி, நசுங்கி, உருண்டு உழலும் என்னை எப்படியாவது உன தடியார் கூட்டத்தில் கொண்டு சேர்த்துவிடு. இல்லாவிட்டால், ஒரு நாள் இறந்து போய்விடுவேன். என்ன மனிதன் இவன் என்று எல்லோரும் நான் வாழ்ந்த வாழ்க்கையைப்பற்றி கை கொட்டி சிரிக்கமாட்டார்களா? ப்ளீஸ் என்னை சத்சங்கத்தில் சேர்த்து விடுங்களேன்''

''மருளார் மனத்தோடு உனைப் பிரிந்து 
வருந்து வேனை வா வென்றுன் 
தெருளார் கூடம் காட்டாயேல் 
செத்தே போனால் சிரியாரோ?

மாணிக்க வாசகர் ஏக்கம் புரிகிறதல்லவா. ஞாயமானது தானே? இப்போது குரு எப்படிப்பட்டவராக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் மிக எளிய தமிழில் விளக்குகிறார். எல்லா சிஷ்யனும் விவேகா
னந் தராகவோ அவனுக்கு கிடைத்த குரு ராமகிருஷ்ண பரமஹம்ச ராகவோ இருக்க முடியாதே.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே

திருமூலர் எப்போதுமே பளிச்சென்று எதையும் சொல்பவர். அஞ்ஞானத்தில் தான் உழன்றுகொண்டு, அதுவே புரியாமல் அடுத்தவனுக்கு அஞ்ஞானத்தை போக்க முயலும் ஒருவன் குருவா? இப்படிப்பட்ட குருவை ஒருவன் அடைவது எதுபோலவாம்?

ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டிக் கொண்டு போய் ரெண்டு குருடும் சேர்ந்து வழியில், ஒரு குழியில் விழுந்தது மாதிரி.

  

No comments:

Post a Comment