திருப்பாவை- வங்கக்கடல்
30. வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்
வங்கக்கடல்- இது வங்காள விரிகுடாகடல் அன்று ! வங்க என்றால் அழகிய என்று பொருள். இது பாற்கடலைக் குறிக்கும்.
கடைந்த மாதவன்-தேவர்களுக்காக தானும் அவர்கள் பக்கம் நின்று கடைந்தான். அதனால் மாதவன், அதாவது திருமகள் கேள்வன் ஆனான்.
.யாமுனாச்சார்யர் ஸ்தோத்ரரத்னத்தில், பிராட்டிக்காக கடலுக்கு அணை கட்டினான். அவளை அடைவதற்குப் பாற்கடலை கடைந்தான் என்கிறார். ஆனால் எதற்கு அவளை அடைய விரும்பினான் என்றால் அவனுடைய ஹ்ருதயத்தில் அவளுக்கு இடம் கொடுத்து அவளுடைய தயை நம்மைக் காக்கும்படிச் செய்யவே.
அவன் பாற்கடலை மட்டுமா கடைந்தான்! தயிர் கடலையும் கோகுலத்தில் கடைந்து வெண்ணை உண்டான். இது பின்னர் பாரத யுத்தத்தில் கௌரவ சேனையாகிய கடலைக் கடையவே என்று தோன்றுகிறது.
கேசவன்- கேசவன் என்ற நாமம் மிக உயர்ந்தது. ஏனென்றால் அதன் பொருள் பிரம்மனையும் ஈசனையும் தன்னுள் கொண்டவன் என்பது. கஸ்ச ஈசஸ்ச கேசௌ, தௌ வச்யதயா ஸந்தி அஸ்ய இதி கேசவ: . க என்றால் பிரம்மா. ஈச என்றால் சிவன். இருவரையும் தன்னுள் கொண்டவன் ஆதலால் கேசவன் என்று கூறப்படுகிறான்.
கேசவன் என்னும் நாமம் நாராயணனின் பன்னிரண்டு நாமங்களில் மார்கழிமாதத்திற்கு உகந்த நாமம்.
பரமனடி பாடி என்று தொடங்கி கேசவனைப் பாடவும் என்று முடிகிறது. கேசவன் என்றால் அழகிய கேசம் உடையவன் என்றும் பொருள். 'சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான், ' என்பது பெரியாழ்வார் வாக்கு. ஆதலால் இந்த திருமொழி பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் ஆகிறது.
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்- பெரியாழ்வார் துளசியும் தாமரையும் கலந்த மாலை தரிப்பாராம். தாமரை ஸ்ரீதேவியையும் துளசி பெருமாளையும் குறிக்கிறது.
கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை- கோதை என்றால் தமிழில் மாலை. கோதா என்ற வடமொழிச்சொல்லுக்கு நல்ல வாக்குத் தந்தவள் என்று பொருள் . பெரியாழ்வார் வடமொழியிலும் தமிழிலும் தேர்ந்தவர் ஆகையால் இந்த்ப்பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.
சங்கத்தமிழ்மாலை – கோதையின் பாசுரங்கள் சங்கத்தமிழை ஒத்த சிறப்புடையன. சங்கம் என்றால் கூட்டம், பற்று, அழகு என்றும் பொருள். இது கூட்டமாக, உலகப்பற்றை விட்டு, அனுபவிக்கத் தகுந்த அழகான காவியம்.
இங்கிப்பரிசுரைப்பார்- இங்கு, இந்த உலகத்தில், பரிசு பகவத் கைங்கர்யம். அதுதான் இந்தப் பாசுரங்களின் நோக்கம்.
உரைப்பார்- இதைப் பாடுவோர்
ஈரிரண்டு மால்வரைத் தோள்- நான்கு மலை போன்ற புயங்கள் உடைய
செங்கண் திருமுகத்து- தாமரை போல் சிவந்த கண்களைக் கொண்ட முகம் உடைய
செல்வத்திருமால்- அனந்த கல்யாண குணங்களாகிய செல்வத்தோடு திருமகள் கேள்வனாகவும் உள்ளவன்.
எங்கும்----இன்புறுவர்- பெருமாள் பிராட்டி இருவரின் அருள் பெற்று இன்புறுவர்.
இத்துடன் திருப்பாவை முடிவடைகிறது. என் சக்திக்கேற்ப (யதா சக்தி, யதா புத்தி, யதா பக்தி) பெரியோர்கள் அறிஞர்கள் இவர்களின் விரிவுரைகளை அனுசரித்து இங்கு தந்துள்ளேன். குற்றம் களைந்து குணம் கொள்க.
பொங்கல் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment