திருப்பாவை- சிற்றம் சிறு காலே
29. சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
சிற்றம் சிறு காலே – காலே என்பது கோபியர் தயிர் கடையும் நேரம். சிறுகாலே என்பது அவர்கள் அதற்கு முன் எழும் நேரம்.சிற்றம் சிறு காலே என்பது ப்ரம்மமுஹுர்த்தம் . யோகிகள் எழும் நேரம்
இதை வேறு மாதிரியாகவும் பொருள் கூறுகிறார்கள்.
1.சிறு+அம்+ சிறுகால்- சிறு- சிறிதே வெளிப்பட்ட , சிறு- அழகிய , சிறுகால்- சிறிய பாதங்கள். பாலகிருஷ்ணனைக் குறிக்கிறது.
2.நாம் பகவானை தரிசிக்கக் கோவிலுக்குச்செல்லும் சமயம் சிறுகால். சிற்றம்சிறுகாலே என்பது நாம் சென்றாலும் அவன் தரிசிக்க முடிவது நம்முடைய மற்ற வேலைகளுடன் ஒப்பிட்டால் சிறிது நேரமே.
3. கண்ணன் கோகுலத்தில் இருப்பது மிகச் சிறிய காலம் ஏனென்றால் பொழுது விடிந்துவிட்டால் அவன் மாடு மேய்க்கச்சென்று விடுவானே.
4.. அவன் கோகுலத்தில் இருந்ததே கொஞ்ச காலம்தான். பிறகு மதுரைக்குச் சென்று விட்டான்,
5. எடுத்தபல ஜன்மங்களை கணக்கிட்டால் உன்னிடம் பக்தி வந்து உன்னுடன் சேர்ந்து இருக்கும் காலம் மிகக்குறைவு.
பகவானைப்பற்றி அறிவதுதான் நமக்கு விடியல். அவனைப்பற்றிய அறிவுதான் பகல். அதற்கு முன் இரவு. .பிரபன்னனுக்கு அடைக்கலம் புகுந்த காலத்தில் இருந்து தேகம் முடியும் வரை பிராதக்காலம். அதன்பின் எல்லாம் பகல். அதற்கு முன் இரவு.
வந்துன்னை சேவித்து- தண்டகாரண்யத்தில் ரிஷிகளைத்தேடிச் சென்றான். கஜேந்திரன் கூப்பிட்டவுடன் வந்தான். ஆனால் கோபியர் அவன் குழல் ஊதினவுடன் வந்து விட்டார்கள்.
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்- பொன்னும் செல்வமும் வேண்டாம் என்று அவன் பாத சேவையையே விரும்பி எல்லாவற்றையும் விட்டுவிட்டு, "என் மனைவி மக்களைத் துறந்து ராகவனை சரண் அடைகிறேன் என்று சொன்ன விபீஷணன் போல சரணாகதி செய்கிறோம் என்று பொருள்.
பெற்றம் மேய்த்துண்ணும் ----போகாது- ஆயர் குலத்தில் வந்து பிறந்தது லோக சம்ரக்ஷணத்துக்காக. அபப்டி இருக்கையில் நீ எங்களை ஆட்கொள்ளாமல் இருக்கலாகாது என்று பொருள்.
இற்றைப் பறை கொள்வான் அன்று- நாங்கள் நோன்புக்கு வேண்டிய உபகரணங்களைக் கேட்பதற்காக வரவில்லை.
எற்றைக்கும் -----ஆட்செய்வோம்- இதுதான் நாங்கள் கேட்கும் வரம்.
உற்றோமே ஆவோம்- பகவானே நமக்கு ஏழேழு ஜன்மங்களுக்கும் உற்ற உறவு ஆவான். மாதா மே லக்ஷ்மீ தேவி பிதா தேவோ ஜனார்தன: பாந்தவா: விஷ்ணுபக்தா; ச வசுதைவ குடும்பகம். இதுதான் பிரபன்னனுடைய மனோபாவம்.
ப்ருஹதாரண்ய உபனிஷத் சொல்கிறது. 'ந வா அரே பத்யு: காமாய பதி: பிரிய:, ஆத்மனஸ்து காமாய ,' என்று ஒவ்வொரு உறவையும் பற்றி எல்லாம் நம் சுயநலத்திற்காகவே என்று. (ப்ரஹதா.உப. 2.4-5).
உனக்கே நாம் ஆட்செய்வோம்-உன் சேவையே எல்லாப் பிறவிகளிலும் விரும்புவது .
மற்றை நம் காமங்கள் மாற்று-உன்னிடத்தில் அன்பு தவிர வேறு எண்ணங்கள் தோன்றாமல் இருக்கவும் நீதான் அருள் புரிய வேண்டும்.
ராமாயணத்தை சரணாகதி சாஸ்திரம் என்று கூறுவார்கள். திருப்பாவை முதலில் இருந்து கடைசி வரை சரணாகதியை பற்றித்தான் கூறுகிறது.
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று ஆரம்பித்து மற்றை நம் காமங்கள் மாற்று என்று பூரண சரணாகதியில் முடிகிறது.
குற்றேவல் என்றால் பகவத்கைங்கர்யம். இது ஆனுகூல்ய சங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜனம் இரண்டையும் குறிக்கும்
.
குற்றேவல்----போகாது- மஹாவிசுவாசம்
உற்றோமே ஆவோம்---ஆட்செய்வோம்- கோப்த்ருத்வ வாரணம்.
மற்றை நம் காமங்கள் மாற்று- கார்பண்யம் , பல சமர்ப்பணம்
No comments:
Post a Comment