Thursday, January 3, 2019

19th paasuram kutthu vilakkeriya thiruppavai in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை-குத்து விளக்கெரிய

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

பகவானின் அருள் கிடைக்க தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்.ஏனென்றால் அவள் புருஷகார பூதை. அவள் சிபாரிசுடன் அவனை அண்டினால் வெற்றி நிச்சயம். தாயார் பகவானைக் கேட்காமலே நமக்கு அருள் புரிவாள் ஆனால் தண்டிப்பது மட்டும் தானே செய்ய மாட்டாள்.

சீதை ஹனுமானுக்கு தீ சுடாமல் இருக்க "சீதோ பவ ஹனூமத: " ஹனுமானுக்கு குளிர்ச்சியாக இரு, என்று அக்னிதேவனுக்கு கட்டளை இட்டாள். ராக்ஷசிகளை ஹனுமானின் கோபத்தில் இருந்து " ந கச்சித் நாபராத்யதி," குற்றம் செய்யாதவர் எவர் , என்று சொல்லிக் காப்பாற்றினாள். ஆனால் ராவணனை தண்டிக்கவில்லை "ராமனின் அனுமதி இல்லாததால் உன்னை பஸ்மமாக்காமல் விடுகிறேன் ." என்றாள்.

இதை த்யாகராஜர் 'மா ஜானகி சட்டபெட்டகா ,' என்ற கிருதியில் அழகாகச் சொல்லுகிறார். " என் அன்னை ஜானகிக்கு ராவணனை அழிப்பது ஒரு பொருட்டே இல்லை ஆனால் , ராமா, அவள் ஏன் அப்படிச் செய்யவில்லை தெரியுமா? அந்தப் புகழை உனக்களிக்கவேண்டும் என்றுதான். " என்கிறார்.

குத்துவிளக்கெரிய –விளக்கு தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவைகளையும் பிரகாசப்படுத்தும். அவ்வாறே தாயாரும் தன் கருணை என்கிற வெளிச்சத்தால் பக்தர்களை பகவானுக்கும் பகவானை பக்தர்களுக்கும் காட்டுகிறாள்.

கோட்டுக்கால் – கண்ணன் உறங்கும் மஞ்சத்தின் கால்கள் யானை தந்தத்தினால் ஆனவை. 
பஞ்ச சயனம் – ஒரு நல்ல படுக்கை என்பது ஐந்து குணங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அவையாவன, மிருதுத்தன்மை, வெண்மை, மணம், குளிர்ச்சி , அழகு. அதனால் அது பஞ்ச சயனம் என்று கூறப் படுகிறது.

எத்தனை போதும் துயிலெழவொட்டாய் காண்.-திருமகள் பகவானின் பாதங்களை மிருதுவாகப் பிடித்துக்கொண்டே இருப்பதால் அவன் சௌக்கியமாகத் துயில்கிறான்.

சீதை காகாசுரன் துன்புறுத்தியபோது தன் மடியில் தலை வைத்து தூங்கின ராமன் தூக்கம் கலையக் கூடாதென்று பொறுத்துக்கொண்டு இருந்தாளாம்.

எத்தனை ஆகிலும் பிரிவாற்றகில்லாயால் .-ஸ்ரீதேவி பகவானை விட்டுப் பிரிவதே இல்லை. 'அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பன். '

தத்துவம் அன்று தகவேல் –தத்துவம் என்பது ஸ்வரூபம், இயற்கை. தகவு என்பது ஸ்வபாவம், குணம். பக்தர்களுக்கு அருளாமல் இருப்பது என்பது தாயாரின் இயற்கையும் அன்று. குணமும் அன்று .

அம்பரமே என்ற பாசுரம் அகாரத்தில் ஆரம்பிக்கிறது. .உந்து மத களிற்றன் என்ற பாசுரம் உகாரத்தில் ஆரம்பிக்கிறது. அடுத்த பாசுரம் முப்பத்துமூவர் என்று மகாரத்தில் ஆரம்பிக்கிறது. நடுவில் இந்தப் பாசுரம் இருப்பதன் காரணம் பிரணவத்தை (அ, உ, ம) வேதம் அறிந்தவர் தவிர மற்றவர் நேராக சொல்லக் கூடாது என்றதனால் இருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

குத்து விளக்கு ஞானத்தின் பிரகாசம். அது வெளி இருட்டோடு மன இருட்டையும் அழிக்கிறது.குத்து விளக்கு ஐந்து முகம் கொண்டது. இது, பகவானின் ஐந்து நிலைகளான பர, வ்யூஹ, விபவ, அர்ச்சா , அந்தர்யாமி இவைகளைக் குறிக்கும்.

கட்டிலின் நான்கு கால்கள் சம்சாரத்தின் நான்கு அம்சங்கள். 
1.தர்மம், அர்த்தம், காமம் , மோக்ஷம் என்ற நான்கு புருஷார்த்தங்கள்
2.பிரம்மச்சர்ய , க்ருஹஸ்தாச்ரமம், வானபிரஸ்தம் , சன்யாசம் என்ற நான்கு ஆஸ்ரமங்கள்.
3. பிரம்ம க்ஷத்ரிய வைச்ய சூத்ர எனற நான்கு வர்ணங்கள்
4. நான்கு யுகங்கள்.

பஞ்ச சயனம் தேவ , மனுஷ்ய , திர்யங் , (ANIMAL) ஸ்தாவர, (PLANT) அப்ராணி ( ஜடப்பொருள்கள்) பகவான் பஞ்ச சயனத்தின் மேல் இருக்கிறான் . அதாவது இவைகளை கடந்த என்று பொருள்.

  

No comments:

Post a Comment