Wednesday, January 2, 2019

18th paasuram undumada thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை-உந்துமதகளிற்றன்

18. உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருமாலின் கருணையைப் பெற திருமகளின் அருள் வேண்டும். இந்தப்பசுரம் திருமகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. நப்பின்னை என்பது நந்தகோபரின் சகோதரிமகள் ஆதலால் மருமகள். நப்பின்னை கண்ணனின் தேவியாகவும் கருதப்படுகிறாள். ஆனால் இது ஸ்ரீதேவிக்கும் பொருந்தும் என்றது மரு+ மகள் என்ற அர்த்தத்தில். அவள் பகவானின் மார்பில் மருவாக இருக்கிறாள் அல்லவா?

இதற்கு இன்னொரு சான்றும் கூறப்படுகிறது. இந்தப் பாசுரம் உடையவருக்கு உகந்ததாகச் சொல்லப்படுகிறது. ராமானுஜர் பிக்ஷைக்குப் போகையில் திருப்பாவை பாசுரங்களைக் கூறியபடியே செல்வாராம். ஒருநாள் இந்தப் பாசுரம் சொல்கையில் பெரியநம்பியின் மாளிகைக்கு அருகே வந்தபோது அவருடைய மகளான அத்துழாய் கதவைத்திறந்து வெளியே வந்தாளாம் அதைக்கண்டு ஸ்ரீதேவியே வந்ததாக அவருக்குத் தோன்ற சாஷ்டாங்கமாக கீழே விழுது நமஸ்கரித்தாராம்.

வந்தெங்கும் கோழி ----- கூவின காண்- சேவல்களை எங்கும் காணலாம் ஆனால் குயில் மாதவிப்பந்தலில்தான் அமர்ந்து கூவும்.அதே மாதிரி பேச்சுக்கள் எங்கும் இருந்தாலும் மதுரமான பகவத்விஷ்யமான பேச்சுக்கள் அபூர்வம்.

பந்தார்விரலி- பகவானும் தாயாரும் பந்து விளையாடுகிறார்கள். அதாவது உலகத்தில் உள்ளது எல்லாம் அவர்களுக்கு பந்து விளையாட்டு மாதிரி., ஆனால் தாயார் நாமாகிய பந்தை பகவான் பக்கம் உருட்டி விடுகிறாள்.

கடை திறவாய், வந்து திறவாய் – தாயார் எழுந்தருளி நமக்கும் பகவானுக்கும் இடையூறாக இருக்கும் பாவங்களைப் போகும்படி வேண்டுகிறாள்.

இந்தப் பாசுரம் 18-வதாகும். இந்த எண் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள். மகாபாரதப்போர் நடந்தது 18 நாட்கள். பாகவத புராணத்தில் 18000 ஸ்லோகங்கள். 1+8 =9 . இது மாறாத எண்ணாகும். இதோடு எந்த எண்ணைக் கூட்டினாலும் கழித்தாலும் பெருக்கினாலும் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும். இந்த எண் என்றும் மாறாத கருணையும் பொலிவும் கொண்ட லக்ஷ்மியைக் குறிக்கிறது.

  

No comments:

Post a Comment