Tuesday, December 4, 2018

Where is HE asked Hiranyaksasipu ?

'' நரசிம்மா ... ஆ ஆ ஆ '' -- 3 J.K. SIVAN

'' கேட்ட வரம் நிறைவேறியது.''

இந்த உலகத்திலேயே தனது ஒரே பிள்ளையை பிடிக்காத அப்பா யார் என்று தேடினால் நிறைய பேர் அகப்படுவார்கள். ஆனால் அதில் தனது பிள்ளையை நேரடியாகவே கொல்ல முயற்சி எடுத்தவர்கள் யார் யார் என்று தேடினால் ஒரு சிலர் கிடைக்கலாம். ஆனால் அதில் அத்தனையிலும் தோற்றுப்போன அப்பா ஒருவர் தான் இருக்க முடியும். அது தான் ஹிரண்ய கசிபு.

கோபமாக மகனை அழைத்து இன்னொருமுறை பல விதமாக அவனை தன் வசம் மாற்ற முயன்றும் தோற்று கடைசியில் தனது மகனை அப்படி வசியப்படுத்திய அந்த நாராயணனனையே கொன்றால் தான் இதற்கு முடிவு என்று தெரிந்து, ''எங்கேடா இருக்கிறான் நீ போற்றும் அந்த நாராயணன்? காட்டு அவனை இப்போது '' என்கிறான் இரணியன்.

''நாராயணன் எங்கும் இருப்பவர். பரம்பொருள். எங்கே என்று அப்பா, நான் சொல்ல?''

ஹிரண்யன் கோபாவேசமாக பார்க்கிறான் அவன் எதிரே ஒரு தூண் கண்ணில் படுகிறது. ''ஓஹோ. எங்குமே இருக்கிறானா அவன்? அப்படியென்றால் இதோ இந்த தூணிலும் இருக்க்கவேண்டுமே. இருக்கிறானா? என அந்த தூணை காட்டி நெருங்குகிறான்.

இதுவரை நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.

நாராயணன் முதன் முறையாக பதற்றத்தில் வியர்த்து நிற்கிறான். சிறு குழந்தை பிரஹலாதன் என்ன சொல்லப் போகிறானோ? எங்கே இருக்கிறான் உன் நாராயணன் காட்டு? என்று சொல்லும்போது எதை காட்டப்போகிறான். நான் அங்கே எனது புது வேடத்தில் அல்லவோ தயாராக இருக்கவேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லாம் முடிந்தாகவேண்டும். இரவும் இல்லை பகலுமில்லை என்ற அந்த அந்தி நேரம் தவறக்கூடாதே ..... மற்றதெல்லாம் ரெடி பண்ணியாகி விட்டதே ''

''இரணியன் கேட்ட கேள்விக்கு பிரஹலாதன் என்ன பதில் சொன்னான் என்பதை அவனை விட அதைக் கேட்ட கம்பர் அழகாக சொல்கிறார்.

''சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், 
இன்னின்ற தூணிலும் உளன், நீ
சொன்ன சொல்லிலும் உளன்…' என்கிறார்.

''உன் நாராயணன் இங்கே இந்த தூணிலும் இருக்கிறானா? என்ற இரணியனுக்கு இந்த தூண் மட்டுமல்ல அப்பா, ஒவ்வொரு ,சாணிலும் உளன், இல்லை இல்லை. சாணுக்காவது ஒரு அளவு உண்டு. குறிப்பிட்ட எல்லை உண்டு. அதைவிட மிகச் சிறிய அணு இருக்கிறதே. அதிலும் இருக்கிறான், அந்த அணுவை நூறு துண்டாக பிளந்தாலும், பிளக்க முடியாத அந்த அணுவை பிளந்து நூறு கூறாக்கினால் அந்த ஒவ்வொரு கோணிலும் இருக்கிறான் நாராயணன். ஒருவேளை ரொம்ப சின்னதாக இருக்கிறதே கண்ணுக்கு தெரியாதே, நீ நம்ப மாட்டாயே. என்றால் மிகப்பெரிய மஹா மேரு மலையிலும் இருக்கிறான். அவ்வளவு தூரம் நீ சென்று மஹா மேரு மலையை பார்க்க நேரம் ஆகுமே. ஆகவே தான் நீயே பார்த்து பார்த்து அழகாக கட்டிய இந்த தூணிலும் இருக்கிறான், தூணில் மட்டுமா அப்பா, நீ சொல்கிற ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த நாராயணன் இருக்கிறான் '' --

இப்படி பிரஹலாதன் சொல்லியதாக கம்பர் நமக்கு இரணியன் வதைப் படலத்தில் நமக்கு தெரிவிக்கிறார்.

''இது நான் கட்டிய தூண். இதில் அந்த நாராயணன் எப்படி எனக்குத் தெரியாமல் அவன் உள்ளே புகுந்து இருக்க முடியும் என்று இரணியன் தனது வாளால் பலம் கொண்ட மட்டும் வீசி அந்த தூண் பிளக்கிறது. அதன் உள்ளிருந்து ஒரு அண்டம் தவிடு பொடியாகும் சப்தம் வெளிப்படுகிறது. கண்ணைப்பறிக்கும் மகா பெரிய பயம் தரும் ஒரு உருவம் கோபமாக வெளியே வருகிறது. இதை எல்லாம் எதிர்பாராத பிரஹலாதன் சிறுவன், நடுங்கி ஒரு ஓரமாக சுவற்றைப் இடித்துக்கொண்டு நிற்கிறான்.

கண்களில் அக்னி. பிளந்த வாய். கூறிய பற்கள்.. மிகப்பெரிய சிங்கம் ஒன்று. ஆனால் மனித உடல். கை கால்கள். இடுப்பில் பட்டு பீதாம்பரம், கூறிய நகங்கள் கொண்டு இரணியனை அப்படியே இரு கரங்களாலும் அலாக்காக ஒரு சிறு பூச்சியை பிடிப்பது போல் தூக்குகிறது. எதிரே அந்த அரண்மனையின் வாசல் படி தெரிகிறது. அவன் திணறுகிறான். அந்த இரும்புப் பிடியில் இருந்து அவன் அசையமுடியவில்லை. அவனைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாத நடுவாந்திர நிலையில் அந்த அரண்மனையின் வாசல் படியருகே சென்று அதன் மீது அமர்கிறது. இரணியனை மடியில் ஒரு சிறு குழந்தை போல் கிடத்திக் கொள்கிறது. அவன் உடலை தனது இரு கைகளின் கூறிய நகங்களால் கீறி துண்டாக்கி ஒரு சொட்டு ரத்தமும் வெளியேறாமல் உறிஞ்சுகிறது. இன்னுமா இரணியன் உயிரோடு இருப்பான்? கணநேரத்தில் இரணியன் மாள்கிறான்.

அவன் கேட்டபடியே அவன் மரணம் நடைபெற்றது. இரவும் இல்லை பகலும் இல்லை, அந்திநேரம். மனிதனும் இல்லை மிருகமும் இல்லை, தேவனும் இல்லை ராக்ஷஸனும் இல்லை. நர - சிங்கம். எந்த ஆயுதமும் இல்லை. கூரிய நகங்கள். வீட்டிலும் வெளியிலும் இல்லை வாசற்படியில். என்ன தந்திரம் நாராயணனுக்கு.

No comments:

Post a Comment