Monday, December 24, 2018

Narada bhakti sutram 47 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்திரம்

47.யோ விவிக்தஸ்தானம் சேவதே , யோ லோகபந்தனம் உன்மூலயதி, நிஸ்த்ரைகுண்யோ பவதி, யோகக்ஷேமம் த்யஜதி.

மாயையை கடப்பவன் தனிமையில் இருந்து, உலகப்பற்றை ஒழித்து, முக்குணங்களைக் கடந்து யோகக்ஷேமத்தை விடுகிறான்.

மாயையைக் கடக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கு நாரதர் சொல்கிறார்.

1. விவிக்தஸ்தானம் சேவதே – தனிமையை நாடிச் செல்லுதல். இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பலர் மத்தியிலும் தனிமையாக இருக்கலாம். ஒருவரும் இல்லாத இடத்திலும் நம் எண்ணங்களும் ஆசைகளும் நம்முடன் வரும். அதனால் இதன் பொருள் என்னவென்றால் மனத்தை ஆத்மாவிடம் செலுத்தி அமைதியாக இருப்பது என்பதேயாகும்.,

2. லோக பந்தனம் உன்மூலயதி- உலகப்பற்றை ஒழித்தல். தேக சம்பந்தம் உலகப் பற்றுக்கு காரணம் . நான் ஆத்மா என்பதை உணர்பவனுக்கு தேக சம்பந்தம் போய் விடுகிறது.

3. நிஸ்த்ரைகுண்யோ பவதி- முக்குணங்களை கடத்தல். இவ்வுலகம் முக்குணங்களால் ஆனது. நம் தேகம், மனம், புத்தி இவை பிரக்ருதியின் விளைபொருள்கள். பிரகிருதி மூன்று குணங்களால் ஆனது. இவைகளோடு ஒன்று படுவதை விட்டு ஆத்மாவில் லயித்தால் முக்குணங்களை கடக்கலாம்.

4. யோகக்ஷேமத்தைப் பற்றி கவலையில்லாமை. யோகம் என்பது பொருளீட்டுதல் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அடைதல். க்ஷேமம் என்பது அடைந்ததைக் காப்பாற்றுதல். பகவானிடம் சரண் புகுந்தால் அவனே யோகக்ஷேமத்தை கவனித்துக் கொள்கிறான். பக்தர்களின் சரித்திரமே இதற்கு உதாரணம்.

அனன்யா: சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்.(ப.கீ. 9.22)

,"வேறு எந்த சிந்தனையும் இன்றி என்னையே நினைத்துக்கொண்டு எப்போதும் என்னை யார் உபாஸிக்கிறானோ அவனுடைய யோகக்ஷேமத்தை நான் கவனித்துக்கொள்கிறேன் "

இந்த சூத்திரம் த்யான யோகத்தைக் குறிப்பிடுகிறது. அடுத்த இரு சூத்திரங்களும் முறையே ஞான யோகம் பக்தியோகம் இவற்றைப் பற்றி கூறுகின்றன.

  


No comments:

Post a Comment