Thursday, December 13, 2018

Narada bhakti sutram 31,32,33 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரதபக்தி சூத்ரம் -32, 33, 34

31.ராஜ க்ருஹ போஜனாதிஷு ததைவ த்ருஷ்டத்வாத் .

32. ந தேன ராஜபரிதோஷ: க்ஷுதா சாந்தி: வா 
அரண்மனையாலோ , வீட்டினாலோ உணவாலோ திருப்தி ஏற்படுவதில்லை.

அரசன் அரசனாக இருப்பதினால் தான் சந்தோஷமே தவிர அரண்மனையாலோ ராஜபோகங்களினாலோ அல்ல. அரண்மனையில் உள்ளவர் அனைவருக்கும் இது பொது. 
அதேபோல வீட்டிலிருந்து வெளியே சென்றாலும் வீடு அங்குதான் இருக்கிறது. பசிஎடுப்பதாலதான் உணவு திருப்தியைக் கொடுக்கிறது.

இதன் பொருள் என்னவென்றால், 'நான் அரசன்' என்ற எண்ணம் புதிதாக ஒரு ஆனந்தத்தைக் கொடுப்பதில்லை . அவன் என்றுமே அரசனாகத்தான் இருக்கிறான். 
காட்டில் வழி தவறிய அரசகுமாரன் தான் யார் என்பதையே உணராமல் இருக்கும்போது தான் ஒரு அரசகுமாரன் என்பது தெரிய வரும்போது அடையும் ஆனந்தம் என்பது அதை மறந்து நினைவூட்டப்பட்டதால் வந்ததே தவிர அது ஒரு புதிய மாறுதல் அல்ல.

அதே போல வீட்டைவிட்டுச் சென்றவன் திரும்ப வீட்டை அடையும்போது ஏற்படும் மகிழ்ச்சியும் புதியதல்ல. ஏற்கெனவே வீட்டில் உள்ளபோது அனுபவித்ததுதான். பசியுடன் உள்ள ஒருவன் உணவு உண்ணும்போது பசி எடுக்கும் முன்பு இருந்த திருப்தி நிலையை மறுபடி அடைகிறான்.

அதாவது ஆனந்தம்தான் நம் உண்மை நிலை. அதை அறியாது காட்டில் உள்ள ராஜகுமரனைப்போல் , வீட்டை விட்டுச்சென்ற யாத்திரிகனைப்போல் , பசி எடுத்தவன் போல் நம் இயற்கை ஆனந்தத்தை இந்த கர்ம வாசனைகள் மறைக்கின்றன. இந்த தடைகள் நீங்கினபின் இயற்கையான ஆனந்தம் அனுபவிக்கப்படுகிறது.

முன்னர் கூறிய சூத்திரங்களுக்கு மேலும் விளக்கம் அளிக்க முற்படுவது இந்த சூத்ரம்..

சூத்ரம் 25ல் பக்தியானது கர்மம், ஞானம், இவைகளை விட சிறந்தது என்று சொல்லப்பட்டது. பக்தி என்பது அரசன் என்று வைத்துக்கொண்டால் கர்மயோகம் வீடாகவும்,, ஞான யோகம் உணவு என்றும் உருவகம் செய்யப்பட்டுள்ளது,.

எப்படி அவன் வீடும் உணவும் அரசனுக்கடங்கியதோ அதுபோல பக்திக்கு அடங்கியதுதான ஞானமும் கர்மயோகமும். அரசனால் தான் வீட்டுக்கும் உணவுக்கும் பெருமை. அதேபோல பக்தியால்தான் ஞானத்திற்கும் கர்மத்திற்கும் பெருமை.

சூத்ரம் 28ல் ஞானமே பக்தியை அடைய வழி என்று சிலர் கூறுவதாக உளளது. இது எப்படி என்றால் உண்ணும் உணவினால்தான் அரசன் அரசனாக இருக்கிறான் என்பதைப்போல. . தன்னலமின்றி கர்மம் புரியும் பக்தன் ஞானத்துடன்தான் இருப்பான். அதாவது பராபக்தி என்பது ஞானமும் பக்தியும் சேர்ந்ததாகும்.ஆனால் ஞானத்திற்கு பக்தியுடன் சேர்ந்தால்தான் பெருமை.

இதைத்தான் சூத்ரம் 29ல் ஞானமும் பக்தியும் ஒருங்கிணைந்து துணை புரிகின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சூத்ரம் 33
தஸ்மாத் ஸ ஏவ க்ராஹ்யா முமுக்ஷுபி: 
ஆகையால் முக்தியை விரும்புபவர்கள் இந்த பராபக்தியை அடையவே முயலவேண்டும்.

பக்தன் ஓரடி வைத்தால் பகவான் பத்து அடிவைத்து அவனை நோக்கி வருகிறான். பக்தி மார்க்கம் மற்ற வழிகளை விட மிகவும் சுலபமானது. எல்லா செயல்களையும் பகவதர்ப்பணமாக் செய்தால் போதும்.

இதோடு பராபக்தியைப் பற்றிய விளக்கம் முடிவுறுகிறது. அடுத்து அதை அடையும் வழிகள் விளக்கப்படுகின்றன.


No comments:

Post a Comment