நாரத பக்தி சூத்ரம் - 25/26
சூத்ரம் 25
இதுவரை பராபக்திச்வரூபத்தைப்ப பற்றி கூறினார். இனி வரும் ஒன்பது சூத்ரங்கள் பராபக்தியின் மேன்மையைக் கூறுகின்றன.
ஸா து கர்மஞான யோகேப்ய: அபி அதிகதரா
பராபக்தி என்பது கர்ம, ஞான, த்யான யோகங்களை விட சிறந்தது.
கர்மயோகம் என்பது பலனை எதிர்பாராமல் செயலாற்றுவது. ஞான யோகம் என்பது புத்திபூர்வமான யோகம் .
அதாவது எதுஉண்மை எது உண்மை அல்ல என்று தெரிந்துகொண்டு மனம் நிரந்தரமான நிலை அடைவது.
த்யான யோகம் என்பது சித்தத்தை ஒடுக்கி இந்த்ரியநிக்ரஹத்தின் மூலம் பரம்பொருளை த்யானிப்பது.
பராபக்தி என்பது உடல் மனம் புத்தி இவைகளை கடந்த நிலை. உலக விஷயங்களிலோ அல்லது மனிதர்களிடமோ அளவுகடந்த தன்னலமற்ற அன்பு இருந்தால் அது பயனை எதிரபார்க்காத, வேறெதிலும் மனம் செலுத்தாத நிலையை அடைகிறது அல்லவா?
அப்போது ஒரு தன்னை மறந்த நிலை ஏற்படுகிறது. இந்த்ரியங்கள் செயலற்று விடுகின்றன. இது எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் எப்போதாவது வரும் நிலைதான்.
அது டிவி சீரியலாக இருந்தாலும் சரி, முகநூலாக இருந்தாலும் சரி. இந்த ஆழ்ந்த மன நிலை பகவான் மீது தோன்றுமானால் அதுதான் பராபக்தி.
பாகவதத்தில் கிருஷ்ணர் உத்தவ கீதையில் சொல்கிறார்.
யோகத்ரயோ மயாப்ரோக்தோ ந்ரூணாம் ச்ரேயோ விதித்ஸயா
ஞானம் கர்ம ச பக்தி: ச ந உபாயோ அன்ய; அஸ்தி குத்ரசித் (பா. 11.2௦.6௦)
மனிதர்களின் முக்திக்காக என்னால் மூன்று வழிகள் கூறப்பட்டுள்ளன. அவை ஞான யோகம், கர்ம யோகம் பக்தி யோகம் என்பவை ஆகும்.
மேலும் இந்த மூன்று வழிகளும் யார் யாருக்கு என்று கூறுகிறார்.
பற்றை விட்டவருக்கு ஞான யோகம்., மற்றவர்க்கு கர்ம யோகம். பகவத் கதைகளில் ருசியும் பகவானிடத்தில் அன்பும் உள்ளவருக்கு பக்தியோகம்.
இந்த மூன்றுமே வழிகள் தான் இலக்கை அடைய. இலக்கு என்னவென்றால் அதுதான் பராபக்தி. இதை அடுத்த சூத்ரம் விளக்குகிறது.
சூத்ரம் 26.
பலரூபத்வாத்
ஏனென்றால் அதுதான் அடையவேண்டிய லட்சியம்
மற்றவை எல்லாம் அதை அடைய வேண்டிய முயற்சிகள்.
பராபக்தி வந்து விட்டால் அதன் பின் எந்த வரைமுறைகளும் தேவை இல்லை. ஏன் என்பதற்கு விடை மஹாபாரதத்தில் உள்ளது.
அன்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அன்யத் பாதாவநேஜநாத்
அன்யத் குசலசம்ப்ரச்நாத் ன ச இச்சதி ஜனார்தன:
பூர்ண ஜல கும்பம் கொண்டு அவன் பாதத்தை அலம்புவதும், இன்சொற்களும் அன்றி வேறு எதுவும் ஜனார்தனன் எதிர்பார்க்க மாட்டான். அதாவது அன்பு மட்டுமே அவன் எதிர்பார்ப்பது.
'பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்னாமி ப்ரயதாத்மன:' இலையோ பூவோ பழமோ எதுவானாலும் பக்தியுடன் கொடுப்பதை நான் ஏற்கிறேன் என்று அவன் கீதையில் சொல்லவில்லையா..
அதுமட்டும் அல்ல பிறப்பு, இனம், ஆண் பெண் பேதமின்றி அனந்யபக்தியால் யார் வேண்டுமானாலும் என்னை அடையலாம் என்று கூறுகிறான்.
பக்தனின் லக்ஷணம் என்ன என்பதை அடுத்த சூத்ரம் கூறுகிறது.
No comments:
Post a Comment