Friday, December 28, 2018

13th paasuram pullin vi- thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- புள்ளின் வாய் கீண்டானை

13.புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
.
புள்ளின் வாய் கீண்டானை –கொக்கு ரூபத்தில் வந்த பகாசுரனை வதம் செய்தது , கிருஷ்ணாவதாரம்'.
பொல்லாவரக்கனை கிள்ளிக்களைந்தானை –ராவண வதம் ராமாவதாரம்.

கிள்ளிக்களைந்தானை என்று பார்த்தால் அது நரசிம்ஹாவதாரத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.ஏனென்றால் ஹிரண்யகசிபுவை நகத்தாலேயே சம்ஹாரம் செய்ததால். ஆயினும், அரக்கன் என்ற சொல் ராக்ஷசனைக் குறிக்கும். ஹிரண்யகசிபு அரக்கனல்ல. அசுரன். அசுரர்கள் சுரர்கள் என்னும் தேவர்களின் தாயாதிகள். இராவணன் அரக்கன்.

இருந்தாலும் கம்பன் சொற்படி, 'இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினார், அரக்கர் என்று உளர் சிலர் , அறத்தின் நீங்கினார் ,' என்று பார்த்தால், அரக்கன் என்ற சொல் ஹிரண்ய கசிபுவையும் குறிக்கலாம்.மேலும் பொல்லாவரக்கன் என்பதை பொல்லா+ வரக்கன் என்று பிரித்தால் ஹிரண்யகசிபு வரக்கன் அதாவது வரங்கள் வாங்கியவன் அதனால் பொல்லாதவனாக இருந்தான் எனக்கொள்ளலாம்.

அப்படி என்றால் இந்தப்பாசுரம் மூன்று அவதாரங்களைக் குறிப்பிடுகிறது.

இந்த வரியை வேறு மாதிரி கூட விளக்கம் சொல்வதுண்டு.புள்ளின் வாய் கீண்டானை ------கிள்ளிக்களைந்தானை என்பதை ஒரே அடைமொழியாகக் கொண்டால் அது ராமனுக்கும் பொருந்தும்.
புள் என்பது ஜடாயு. அதைக் கொன்றவன் ராவணனாகிய பொல்லாவரக்கன். அவனைக் கொன்றவன் என்பது ராமன.

போதரிக்கண்- போது + அரி-மலரின் உள்ளிருக்கும் வண்டு போன்ற கண்கள்.

குள்ளக்குளிர------பாவை நீ நன்னாளால்- இந்தப் புனிதமான மார்கழிமாதத்தில் விடியும்போது எழுந்து நீராடி கண்ணனை உதிக்க வேண்டும். இப்படி பள்ளிகொண்டிருக்கலாமா என்று பொருள். 
உறங்கலாமா என்று கேட்காமல் பள்ளி கிடத்தியோ என்பதன் பொருள் அவள் உறங்கவில்லை உறங்குவது போன்ற பாவனையில் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் இருக்கிறாள் என்பது.

அதனால்தான் கள்ளம் தவிர்ந்து , பாசாங்கை விட்டு எங்களுடன் கலந்துகொள் என்று சொல்கிறாள்.
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று.-அஞ்ஞானம் போய் ஞானம் உதிப்பது.

குள்ளக்குளிர குடைந்து நீராட்டம் என்பது பின்வருமாறு விளக்கப்படுகிறது.

நீராட்டம் என்பது பகவானைப் பற்றிய நினைவு. குடைந்து நீராடுவது, அவனை அர்ச்சாவதாரத்தில் ஆராதிப்பது. குளிர நீராட்டம் அவனுடைய விபவரூபங்களை ( அவதாரங்கள்)துதிப்பது. குள்ளக்குளிர நீராட்டம் என்பது அவனை வைகுண்டத்தில் காண்பது.

இந்தப்பாசுரம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை குறிப்பதாகக் கருதப்படுகிறது. அவர் மார்கழியில் இந்த தினத்தில் பிறந்தவர். கள்ளம் தவிர்ந்து கலந்து , குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ என்பது அவர் பகவானை மறந்து இருந்ததையும் பிறகு அவனருளால் விழிப்படைந்ததையும் குறிக்கும்.

No comments:

Post a Comment