Wednesday, December 26, 2018

11th paasuram kattru karavai - thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை - கற்றுக்கறவை

11. கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும் 
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே 
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ 
எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்

சாதாரணமாக கன்றுடன் இருக்கும் பசுவைத்தான் கறக்கவேண்டும்.அதுவும் கன்றுக்கு பாலை விட்டபிறகு. பரதன் தன் குற்றமின்மையை ருசுப்படுத்த, பல பாவங்கள் செய்தவர்கள் அடையும் கதியை நான் அடைவேன், என் மீது குற்றம் இருந்தால் என்று கூறுகையில், கன்றுக்குப் பாலை விடாமல் கறந்தவன் என்பதையும் அந்தக் கொடிய பாவங்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறான்.

கற்றுகறவை என்பது , ஒரு கன்றை ஈன்றபின் மற்றோர் கன்றை கர்பத்தில் உடைய பசு. அதாவது எப்போதும் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பசு. 
கணங்கள் பல கறந்து- ஆயர்பாடியில் எண்ணற்ற பசுக்கள். பால் தேவைக்குமேல் உள்ளபடியால் செலவேயில்லை. ஆனாலும் பசுக்களின் மடிக்கனம் குறைக்க பாலைக் கறக்கிறார்கள். எதிரிகளை வெல்லதத்தக்க பலப்பயிற்சியாகவும் கறக்கிறார்கள்.

முன்பு எருமைச்சிறு வீடு என்றாள். இப்போது பசுக்களையும் கறந்தாகிவிட்டது என்கிறாள்.
செற்றார் – பகைவர்கள் . ஆயர்களுக்கு யார் பகைவர்கள்? கண்ணனுக்கு தீங்கு செய்ய நினைப்பவர்கள். அவன் குணங்களில் குற்றம் காண்பவர் பக்தர்களுக்குப் பகைவர். 
திறலழிய- பகைவர்களை அடியோடு அழிப்பது நோக்கம் இல்லை.அவர் திறன் அதாவது பலம் கர்வம் இவற்றை அழிப்பதே.

சென்றுச்செருச்செய்யும்- பகைவர்கள் இருக்கும் இடம் சென்று சண்டை செய்வது. தர்ம யுத்தம் என்றால் பெண்கள் குழந்தைகள் இவர்களுக்கு ஊறு விளைவிக்காமல் நாட்டிற்கு வெளியே யுத்தம் செய்வது. இதனால் தான் பாரதப்போர் குருக்ஷேத்திரத்தில் நடந்தது.

ஜராசந்தன் மதுரை மேல் படை எடுத்தான் அது அதர்மம்.அதனால்தான் கண்ணன ஜனங்கள் கஷ்டப்படக்கூடாதென்று இரவோடிரவாக த்வாரகைக்கு எல்லோரையும் மாற்றினான். ஏனென்றால் ஜராசந்தனுக்கு பீமன் கையால்தான் மரணம் என்பது விதி. அதனால் அவனைக் கொல்லவில்லை.

குற்றமொன்றில்லாத கோவலர்- அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் என்று கூறினாலும் குற்றம் இல்லாதவர்.

புற்றரவல்குல்-புற்றில் இருக்கும் பாம்பு பயமின்றி படம் விரிப்பதுபோல இவள் கூந்தல் விரிந்துள்ளது. 
புனமயிலே- மயில் தோகை போன்ற கூந்தல் என்கிறாள். இங்கு ஒன்றுக்கொன்று பகையான பாம்பையும் மயிலையும் உவமை காட்டுவது அருமை. 
போதராய்- மயிலைப்போல அழகு நடை நடந்து வரவேண்டும்

சுற்றத்துத் -----முகில் வண்ணன பேர் பாட- வாயில்கதவு திறந்து இருந்தபடியால் .முற்றத்தில் வந்து நின்று நாமசங்கீர்த்தனம் செய்கின்றனராம்.
கற்றுக்கறவை கணங்கள் என்பது உபநிஷத்துக்கள். பல கறந்து- அவைகளின் சாராம்சத்தை எடுத்து என்று பொருள்.

ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன: 
பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்
உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.

உபநிஷத்துக்கள் பசு என்றால் அதை கறப்பவன் கை தேர்ந்த பால்காரனாக இருக்கவேண்டும் அல்லவா? கோபாலனாகிய கிருஷ்ணனை விட வேறு யார் இதை செய்ய முடியும்?

வேதமார்க்கத்தில் தாமும் நடந்து பிறரையும் நடக்கச்செய்பவர்களே ஆசார்யர்களாகிய கோபாலர்கள். அவர்களிடத்தில் சரணாகதி செய்துகொண்டவனே சிஷ்யனாகிய பொற்கொடி. . கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடும் மனம் என்பது போல ஆசார்யனாகிய கொம்பைப் பிடித்திருப்பவன்.

புற்றரவல்குல் என்பதால் பாதிவ்ரத்யம் சொல்லப்படுகிறது. விவாக காலத்தில் பர்த்தாவின் கையைப் பிடிப்பது போல் நாம் பகவானின் கரத்தைப் பிடித்திருக்கிறோம். தந்தை பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பது போல் ஆசார்யன் நம்மை எம்பெருமானோடு சேர்த்து வைக்கிறார் .

புற்றரவல்குல் புனமயில் என்பது பரமைகாந்தி. புற்றிலிருக்கும் பாம்பு போல் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதால். மயில் மழை மேகத்தைப்பார்த்து ஆடுவதைப் போன்று பகவானைப் பார்த்து சந்தோஷம் கொண்டு ஆடுவதாலும்.

சிற்றாதே பேசாதே –சிற்றுதல் என்பது சஞ்சலம் கொள்வது. பேசாதே என்றால் பகவானைத்தவிர மற்ற பேச்சுக்களை பேசாதிருத்தல்.
செல்வப் பெண்டாட்டி- ஸ மகாத்மா ஸுதுர்லப: என்று கீதையில் சொன்னவாறு இவன் பகவானுக்கு மிகவும் வேண்டியவன் ஆகிறான்.

இந்தப் பாசுரம் பூதத்தாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஏனென்றால் அவர் தன்னை கொடியாக பாவிக்கிறார் . ( கோல் தேடி ஓடும் கொழுந்தேபோல மால் தேடி ஓடும் மனம்- இரண்டாம் திருவந்தாதி பாசுரம் 27)

குற்றமொன்றிலாத என்பது முதலாழ்வார்கள் மூவரையும் குறிக்கும் அவர்கள் பிறக்காமல் கண்டெடுக்கப்பட்டதால். கோவலர் என்பது பூத்தாழ்வாரின் தலமாகிய திருக்கோவலூர் என்று சொல்லலாம். மற்ற இருவரும் சுற்றத்து தோழிமார் ஆவர்.

  

No comments:

Post a Comment