Thursday, November 15, 2018

Srimad Bhagavatam skanda 5 adhyaya 2,3,4 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 5 அத்தியாயம் 2, 3, 4

அத்தியாயம் 2

ஜம்புத்வீபத்தை பிதாவின் கட்டளைப்படி ஆண்ட ஆக்நீத்ரர் பிரஜைகளைத் தன் குழந்தைகள் போல் தர்மத்துடன் ரட்சித்தார். பிரம்மா அவருக்குப் பத்தினியாக இருக்க பூர்வசித்தி என்னும் அப்ஸர ஸ்திரீயை அனுப்பி வைத்தார். அவளிடம் ஆக்நீத்ரர் , நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இலாவ்ருதன், ரம்யகன், ஹிரண்மயன், குரு, பத்ராச்வன், கேதுமாலன் என்ற ஒன்பது புத்திரர்களைப் பெற்றார்.

அவர்கள் தாயின் அனுக்ரஹத்தால் பிறவியிலேயே அழகும் வலிமையையும் உடையவர்களாக இருந்தனர். பிதாவால் பங்கிட்டுக் கொடுக்கப்பட்ட தங்கள் பெயராலேயே அமைந்த ஒன்பது வர்ஷங்களை ஆண்டனர். ( இது பற்றிய விவரத்தை பின்னொரு அத்தியாயத்தில் காணலாம். (இவற்றுள் நாபி ஆண்ட வர்ஷமே பின்னர் பாரத வர்ஷம் எனப் பெயர் கொண்டது.)

அத்தியாயம் 3

நாபிதேவர் புத்திரனை விரும்பி அவர் மனைவியான மேருதேவியுடன் யக்ஞபுருஷனான ஹரியை ஒருமைப்பட்ட மனதுடன் பூஜித்தார். ப்பட்ட அந்த சிரத்தையுடனும் பரிசுத்தமான மனதுடனும் செய்யப்பட்ட அந்த யாகத்தில் ப்ரவர்க்கியம் எனும் கிரியை நிகழும்போது பக்தவத்சலனாகிய பகவான் ஆவிர்பவித்தார்.

ருத்விக்குகள் அவரைத் துதித்து அவரைப்போல் ஒரு புத்திரனை அடையவேண்டும் என்ற நாபியின் மனோபீஷ்டத்தைக் கூறினர். அதற்கு பகவான் தன்னைப்போல்.,வேறொருவர் இன்மையால் தானே நாபியின் புத்திரனாக அவதரிப்பதாக்க் கூறினார். பிறகு மேருதேவியினிடத்தில் சுத்த சத்வஸ்வரூபியான ரிஷபதேவராக அவதரித்தார் .

அத்தியாயம் 4.

ரிஷபதேவர் பாதத்தில் வஜ்ரம் அங்குசம் முதலிய விஷ்ணுவின் அடையாளங்களோடு தோன்றினார். ஸமசித்தம், சாந்தம், பற்றின்மை, தேஜஸ் இவற்றோடு கூடிய அவரை அரசராக வரித்தனர். நாபி தன் மனைவியுடன் பதரிகாச்ரமம் சென்று பகவானை வழிபாட்டு முக்தியடைந்தார்.

இங்கு சுகர் நாபியைப் புகழ்ந்து கூறுகிறார்.

கோ நு தத் கர்ம ராஜர்ஷே: நாபே: அன்வாசரேத் புமான் 
அபத்யதாம் அகாத் யஸ்ய ஹர: சுத்தேன கர்மணா ( ஸ்ரீ. பா. 5.4.6)
ராஜரிஷியான நாபியின் மகத்தான செயலை யார் செய்யமுடியும்? அவருடைய பக்தியால் திருப்தியடைந்த பகவான் தானே அவர் புதல்வனாகத் தோன்றினார் அல்லவா?

ப்ரஹ்மணா அன்ய: குத: நாபே: விப்ரா மங்கள பூஜிதா:
யஸ்ய பர்ஹிஷி யக்ஞேசம் தர்சயாமாஸு:: ஒஜஸா ( ஸ்ரீ. பா. 5.4.7)
நாபியைத்தவிர் வேறு யார் ருத்விக்குகளை திருப்தி செய்து அவர்களின் மகிமையால் பகவானின் தர்சனம் கிடைக்கும்படி செய்ய முடியும்!

பிறகு ரிஷபதேவர் தனது அஜனாப வர்ஷம் கர்ம க்ஷேத்ரம் என்பதை எண்ணி குருகுல வாசத்தை அனுசரித்துக்காட்டி குருதட்சிணை அளித்து குருமார்களின் அனுமதியுடன் க்ருஹஸ்த தர்மத்தை அனுஷ்டித்துக்காட்ட விரும்பி இந்திரன் கொடுத்த ஜெயந்தி தேவியை மணந்து அவளிடம் நூறு புத்திரர்களை அடைந்தார்.

அவர்களில் மூத்தவரான மஹாயோகி பரதரினால் இந்த அஜநாப வர்ஷம் பாரதவர்ஷம் என்று பெயர் பெற்றது.
ரிஷபரின் புத்திரர்களுள் ஒன்பது பேர் சிறந்த பக்தர்களாக விளங்கி பக்தியை பரப்புவதில் ஈடுபட்டனர். அவர்களுடைய உபதேசங்கள் பதினோராவது ஸ்கந்தத்தில் நவயோகி சம்வாதம் என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளது

, எண்பது பேர் பிதாவின் உபதேசத்தைக் கேட்டு பிராமண தர்மத்தை அனுஷ்டித்து வேத மார்கத்தை பின்பற்றினர்.

அடுத்த அத்தியாயத்தில் ரிஷபரின் உபதேசமும் அதற்குப்பின் அவர் அவதூதராக ஸஞ்சரித்ததும் சொல்லப்படுகிறது.

  

No comments:

Post a Comment