Thursday, November 15, 2018

Narada bhakti sutram 11-14 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்ரம் 11-14

சூத்ரம் 11
லோகவேதேஷு ததனுகூலாசரணம் தத்விரோதிஷு உதாஸீனதா

.அனன்ய பக்தி என்பது வேதத்தில் கூறிய நித்ய நைமித்திக கிரியைகளை செய்வதுடன் வர்ணாஸ்ரம தர்மத்தை அனுசரித்து வேதத்திற்கு ஒவ்வாத கிரியைகளை விடவேண்டும் என்பது., மேலும் எல்லா செயல்களையும் பகவத் கைங்கர்யமாகவே செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்கும் வேத கிரியைகளை விட்டுவிடவேண்டும்.

பக்தனுக்கு 'இந்திரலோகம் ஆளும் அச்ச்சுவை பெறினும் வேண்டேன்' என்ற மனோபாவம் தானாகவே வந்துவிடுகிறது. பக்திக்கு உதவும் உலகக் கடமைகளை செய்யலாம் பக்திக்குப் புறம்பானவைகளை விட்டு விடவேண்டும். இதைப் புரிந்து கொள்ள பக்தர்களின் சரிதத்தை படிப்பதே போதுமானது.

சூத்திரம் 12.
பவது நிஸ்சய தார்ட்யாத் ஊர்த்வம் சாஸ்த்ரரக்ஷணம் 
உயர்நிலை பக்தி வந்த பின்னும் சாஸ்திரவிதிகளைக் காக்கவேண்டும்

கீதையில் கண்ணன் சொல்கிறான் ,' த்ரைகுண்யவிஷயா வேதா: நிஸ்த்ரைகுண்யோ பவ அர்ஜுன,' (ப.கீ. 2.. 45) 
வேதங்கள் மூன்று குணங்களோடு சம்பந்தப்பட்டவை . அவற்றிற்கு அப்பால் இரு என்று.

இந்த உலக, மறு உலக பயன்களைக் கூறும் வேத கர்மாக்களையே இது குறிக்கும். வேதம் என்பது கர்மகாண்டம் என்று சொல்லப்படும் யாக யக்ஞாதிகளை பற்றியது மட்டுல் அல்ல. ஞானகாண்டம் என்று சொல்லப்படும் உபநிஷத்துகளும் இதில் அடக்கம்.

மேலும் 'யத்யதாச்சரதி ஸ்ரேஷ்ட: தத்தத் ஏவ இதரே ஜனா: '(ப.கீ-3.21) என்றும் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறதே.மகான்களை அனுசரித்தே இதர ஜனங்களும் செயல் புரிவார்கள் என்பது இதன் பொருள். பகவான் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதாரம் எடுத்தபோது சாஸ்திர சம்ஸ்காரங்களை பின்பற்ற இதுதான் காரணம். மகான்களுக்கும் அவதார புருஷர்களுக்கும் கர்மாவினால் ஒன்றும் ஆகவேண்டியதில்லை. ஆனாலும் அவர்கள் விடாமல் பூஜை புனஸ்காரங்கள் இவற்றை செய்கிறார்கள். இது மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்கேயாம்.

சூத்திரம் 13.அன்யதா பாதித்ய சங்கயா
மேற்கூறியபடி செயலாற்றாவிடில் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
பிரம்மத்தை உணர்ந்த ஞானிகளுக்கு கர்மாவினால் ஆவதொன்றும் இல்லை. ஆனால் அவர்களை பின்பற்றி மற்றவர்களும் கருமங்களை விடுவார்களேயானால் அது உலகமக்களின் அழிவிற்கு வழி வகுக்கும். முழுமையான ஞானம் இன்றி கர்மத்தை விடும்போது அது மறுபடி சம்சாரத்தில் தள்ளிவிடும்.

சூத்ரம் 14.
லோகோ அபி தாவதேவ கிந்து போஜனாதிவ்யாபார: து ஆசரீரதாரணாவதி 
உலக வியாபாரங்களை எப்படி செய்ய வேண்டும் என்றால், சரீரத்தை உயிர் உள்ளவரை காப்பாற்ற மட்டுமே.
சரீர போஷணம் வேறு சரீர தோஷணம் வேறு. முன்னது உயிர்வாழத் தேவையான அளவு உணவு முதலியவை. இதில் உடை க்ருஹம் எல்லாம் அடங்கும்.பின்னது சரீர சுகத்திற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.

கீதையில் பகவான் கூறுகிறார் , 
யுக்தாஹாரவிஹாரஸ்ச யுக்தசேஷ்டச்ய கர்மஸு
யுக்தசஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி துக்கஹா (ப.கீ. 6.17)
உணவு, ஒய்வு, செயல்கள், தூக்கம் விழிப்பு எல்லாம் அளவாக உள்ளபோது அதுவே எல்லாவித இடர்களையும் நீக்கும் யோகம் எனப்படும். இதுதான் பக்திநெறி. 
பக்தியின் வரைமுறை என்னவென்பதை அடுத்த ஆறு சூத்திரங்கள் கூறுகின்றன.


No comments:

Post a Comment