நாரதபக்திசூத்ரம் - 19/2௦
சூத்ரம் 19
நாரதஸ்து ததர்பித அகில ஆசாரதா தத்விஸ்ரமணே பரமவ்யாகூலதா இதி
நாரதர் மற்ற விளக்கங்களை கொடுத்த பிறகு பக்தி என்றால் என்ன என்று தன்னுடைய சித்தாந்தத்தைக் கூறுகிறார். இறைவனைத் தஞ்சம் புகுந்து அவனிடம் எல்லா செயல்களையும் ஒப்படைத்து விடுதல் , அவனைப் பற்றி நினைவு வராதபோது அதை எண்ணித் துயருறுதல். இதுதான் பக்திக்கு அடையாளம் என்று கூறுகிறார்.
அதாவது பரிபூர்ண சரணாகதி. அப்படி சரண் அடைந்தவர்கள் அவனை நினைப்பது தவிர செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. .அப்படி இருக்கையில் அவனை மறப்பது என்பது ஏது?
சுக்ரீவனைப்போல சரண் அடைந்த பின் அவனால் கிடைத்த நிம்மதியான வாழ்வில் ஆழ்ந்து போய் அவனை மறக்க இயலும்.
அதற்குத்தான் லக்ஷ்மணனைப்போல குருவானவர் நமக்கு இறைவன் நினைவு மறக்காமலிருக்க உதவுகிறார். குருவிடம் மனது லயித்தால் போதும். எப்போதும் நம்மை கண்காணித்துக்கொண்டு இருக்கிறார் எனற நினைவு நமக்கு இகலோக சுகங்களில் மூழ்காமலிருக்கச் செய்யும்.
அதனால்தான் 'குருர்பிரம்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மகேஸ்வர: குருஸ்ஸாக்ஷாத் பரம் பிரம்ம' என்று கூறியுள்ளது,
பூஜை , நாமசங்கீர்த்தனம் தியானம் இவை எல்லாமே சரணாகதியின் அங்கங்களாக ஆனால் அதுதான் நாரதர் கூறும் பக்தியாகும். உலக வ்யவஹாரங்களில் ஈடுபட்டு இருக்கும்போதும் எல்லாம் அவனுக்கே ஸமர்ப்பணம் என்ற எண்ணத்துடன் செயலாற்றுவோர் பக்தர்கள். இதற்கு ஆழ்வார்களும் மற்ற துகாராம் மீரா போன்ற புனிதமான பக்தர்களும் உதாரணம். .
சூத்ரம் 20
அஸ்து ஏவம் ஏவம்
இவ்வாறு உள்ளதுதான் பக்தி
. சூத்ர கிரந்தங்களில் மற்றவர் கொள்கைகளைக் கூறிப் பின்னர் தன் முடிவை எடுத்து இயம்புவது மரபு. அதன்படி நாரதர் மற்ற கருத்துக்களைக் கூறிப் பின்னர் தன் சித்தாந்தத்தை விளக்குகிறார்.
பக்தி என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்த்து விட்டு அதற்கான உதாரணங்களை இனி வரும் சூத்ரங்களில் தரப்போகிறார்.
அவர் சொன்ன கோட்பாட்டின்படி
1. பக்தி என்பது காமம் இல்லை . அதற்கு எதிர் ஆகும் துறவு. இதை முன்னமே பார்த்தோம்.
2. துறவு என்பது எல்லா செயல்களையும் விடுவது அல்ல.
3.தன்னலமின்றி லௌகிக வைதிக கர்மங்களை செய்தல் அதையும் பகவதர்ப்பணமாக செய்தல் மூலம் இறைவனைச் சேர்தல்.அதனால் தீயவை தானே விலகும்.
4.இவற்றைக் கூறும் சாஸ்திரங்களை பின்பற்றி அவற்றை பாதுகாக்கவேண்டும்.
.
இதை அவரவர் கொள்கைப்படி வரையறுத்துக் கூறியுள்ளனர். வியாசர் பூஜை முதலியவைகளில் ஆர்வமே பக்தி என்றும், கர்கர் தெய்வக்கதைக்ளில் ஈடுபாடு என்றும், சாண்டில்யர் ஆத்மானந்தத்திற்கு விரோதம் இல்லாமல் இருப்பது என்றும் , சரணாகதி அடைவது இமைப்பொழுதும் பகவானை மறக்காமல் இருப்பது பக்தி என்று நாரதரும் கூறியுள்ளனர்.
தொடர்ந்து நாரதர் கோபிகைகளின் பக்தியை சிறந்த உதாரணமாக எடுத்துரைக்கிறார்.
No comments:
Post a Comment