ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 4-அத்தியாயம் 7
பிரம்மதேவர் கூறியதைக்கேட்ட ஸ்ரீ ருத்ரர் " நான் மாயை வசத்தால் தவறிழைப்பவர்களைப் பற்றி எண்ணுவதில்லை. தக்ஷனுக்கு அவன் அறிவுமயக்கத்தை நீக்கி நல்வழிப்படுத்தவே இந்த தண்டனை என்னால் கொடுக்கப்பட்டது.. இதனால் துன்பப்பட்ட அனைவரும் நலம் பெறுவர்." என்றார். தேவர்கள் பரமசிவனை உடன் வந்து யாகத்தை நடத்தித்தருமாறு பிரார்த்தித்தார்கள்.
பிறகு எல்லோரும் யாகசாலையை அடைந்தனர். ருத்ரரின் ஆக்ஞைப்படி அங்கு ஓர் ஆட்டின் தலையை தக்ஷன் உடலில் பொறுத்தினர். தக்ஷன் சிவனுடைய கடாக்ஷத்தால் மீண்டும் உயிர் பெற்றான். தூங்கி எழுந்தவன்போல் தன் பழைய உருவைப் பெற்று எதிரில் மங்கள ரூபியான மகாதேவனைக் கண்டான்.
அவர் அருளால் தக்ஷனுடைய மனம் தூய்மை அடைந்து சிவனைத் துதிக்கலானான்.
தக்ஷன் கூறியது,
உங்களை நான் அவமதித்த போதும் என்னிடம் கருணை காட்டி நல்வழிப்படுத்தினீர்கள். தாங்களும் ஸ்ரீஹரியும் கடையாய மனிதனைக்கூட வெறுப்பதில்லை அப்படியிருக்க வேத மார்க்கத்தில் செல்லும் என்னை வெறுப்பீர்களா? ஒரு இடையன் தன் கையில் உள்ள கோலினால் மாடுகள் சரியான வழி செல்லுமாறு செய்வதைப்போல் ஜீவர்களை வழி நடத்துகிறீர்கள். பூஜைக்குரியவரை நிந்தித்ததால் கொடும் நரகத்தில் விழுகின்ற என்னை தன் குளிர்ந்த பார்வையால் காப்பாற்றின பகவான் திருப்தி அடைவாராக"
இவ்வாறு மகாதேவனிடம் மன்னிப்புக் கேட்டபின் தக்ஷப்ரஜாபதி பிரம்மாவின் உத்தரவு பெற்று ருத்விக்குகளுடன் யாகத்தைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார்.
அப்போது கையில் ஹவிஸ்ஸுடனும் பரிசுத்த பாவனையுடனும் தக்ஷன் ஸ்ரீ ஹரியை த்யானிக்க பகவான் ஹரியும் எவ்விதமாக த்யானிக்கப்பட்டாரோ அதேபோல் அவர் முன் தோன்றினார். அவருடைய பிரகாசத்தால் அங்கு இருந்த எல்லா தேவர்களின் ஒளியும் மங்கியதாகக் காணப்பட்டது.
வேதமே இறக்கைகளான கருடன்மேல் நீலமேனியில் பீதாம்பரம், ஜ்வலிக்கும் ஆபரணங்கள், கிரீட குண்டலம் இவற்றுடன் பஞ்சாயுதங்கள் தரித்து , திருமகள் மார்பனாய் வனமாலை தவழும் மார்புடன் மனதைக்கவரும் புன்னகை பூத்து தரிசனம் தந்த ஸ்ரீமான் நாராயணனைப் பார்த்து பிரம்மதேவர் சிவன் உள்பட எல்லோரும் வணங்கினர்.
தஷப்ரஜாபதியாலும் ப்ருகுமுனிவர் மற்ற தேவர்களாலும் துதிக்கப்பட்ட ஸ்ரீ ஹரியானவர் கூறினார்.
" ஆத்மா என்றும் , ஈஸ்வரன் என்றும், ஜீவசாக்ஷி என்றும், ஸ்வயம்ப்ரகாசன் என்றும், நிர்குணன் என்றும், கூறப்படும் நானே பிரம்மாவும் சிவனும் உலகின் முதற் காரணமாகவும் ஆகின்றேன்.என் குணமயமான மாயையினால் உலகை சிருஷ்டித்தும், காத்தும், அழித்தும் செய்பவனாக அந்ததந்த உருவமும் பெயரும் தரிக்கிறேன்.
அப்படி இருக்கையில் மூடர்கள் பிரம்மாவையும் ருத்திரனையும் இதர ஜீவராசிகளையும் பரமாத்மாவும் எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாகவும் உள்ள என்னிலிருந்து வேறாகக் கருதுகின்றனர். உடல் உறுப்புகளை எப்படி மனிதன் தன்னிலிருந்து வேறாகக் காண்பதில்லையோ அவ்வாறே என்னை பரமாத்மாவாகக் கண்டவர் பிற ஜீவர்களை என்னில் வேறாகக் கருதுவதில்லை.
அனைத்துலகத்திற்கும் ஆத்மாவாகவும் இயற்கையில் ஒன்றாகவும் உள்ள மும்மூர்த்திகளிடை எவர் வேற்றுமையைக் காண்பதில்லையோ அவரே சாந்தி அடைவர். "
இவ்வாறு பகவானால் கூறப்பட்ட தக்ஷபிரஜாபதி அவரவர் ஹவிர்பாகங்களை முறைப்படி கொடுத்து யாகத்தைப் பூர்த்தி செய்தார்.
மைத்ரேயர் கூறினார்.
இதற்குப் பிறகு தன் உடலை விட்ட தாக்ஷாயணி ஹிமவான் மகளாக அவதரித்து மறுபடி சிவனையே கணவனாக அடைந்தாள் என்று ரிஷிகள் மூலம் அறிந்தேன், இந்த தக்ஷ யக்ஞம் பற்றிய விவரத்தை உத்தவர் மூலம் அறியப்பெற்றேன். இந்த பரமசிவன் லீலையை ஸ்ரத்தையுடனும் பக்தியுடனும் கேட்பவர்கள் புகழுடன் தீர்க்காயுளும் பாவங்களினின்று விடுதலையும் அடைவார்கள். இதைச்சொல்பவரும் கேட்பவரும் முக்தி அடைவார்கள்.
அடுத்து உத்தானபாத வம்சமும் த்ருவ சரித்திரமும் தொடர்கிறது.
No comments:
Post a Comment