Monday, September 24, 2018

Srimad Bhagavatam skanda 4 adhyaya 2,3,4 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 4- அத்தியாயம் 2,3,4.

அத்தியாயம் 2

விதுரர் கூறினார்.
பெண்ணிடம் அன்பு கொண்டவரான தக்ஷன் ஏன் தன் பெண்ணான ஸதிதேவியை அலட்சியம் செய்தார்? உலகம் போற்றும் தெய்வமான மகாதேவனிடம் ஏன் பகைமை கொண்டார்?

மைத்ரேயர் கூறினார்.
முன்னொரு காலத்தில் தேவர்களும் முனிவர்களும் பிரஜாபதிகளும் சேர்ந்து செய்த ஸத்ர யாகத்தில் தக்ஷ பிரஜாபதி பிரவேசித்தபோது அவருடைய் ப்ரகாசத்தால் கவரப்பட்டு அனைவரும் ஆசனத்திலிருந்து எழுந்து மரியாதை செய்தனர். பிரம்மாவும் மகாதேவனும் மட்டும் எழுந்திருக்க வில்லை. 
தக்ஷ பிரஜாபதி பிரம்ம தேவரை ( அவர் பிதாவானதால்)வணங்கி தன் ஆசனத்தில் உட்கார்ந்து அங்கு முன்னே இருந்த மகாதேவனைக் கண்டு அவர் தனக்கு மரியாதை செலுத்தாததைக் கண்டு கோபம் கொண்டு நிந்தித்தார்.

"என் பெண்ணை மணம் செய்துகொண்டதனால் இவன் என் சிஷ்யனாகிறான். ஆனால் எனக்கு வாய்வார்த்தையால் கூட மரியாதை காட்டவில்லை. இவனுக்கு பிரம்மதேவர் தூண்டுதலினால்தான் பெண்ணைக் கொடுத்தேன் " என்று கூறி, சிவனை சுடுகாட்டில் திரிபவன், தமோகுணம் மிக்கவன் பூதகணங்களுக்கு பதியானவன். சிவன் என்ற மங்கள நாமத்திற்கு பொருத்தமில்லாதவன் என்று கூறிப் பலவாறு நிந்தித்தான்.

ஆனால் மகாதேவன் அதைப் பொருட்படுத்தாமல் அமைதியாக வீற்றிருந்தார். அதைக்கண்டு மேலும் கோபம் கொண்ட தக்ஷன் யாகங்களில் சிவனுக்கு ஹவிர்பாகம் இல்லாமல் போகக்கடவது என்று சாபமிட்டான்., இவ்வாறு அங்கிருந்த பெரியோர்கள் தடுத்தும் காரணமின்றி சிவனை நிந்தித்துவிட்டு சாபம் கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டகன்றான்.

அதைக்கண்ட சிவனடியார்களுக்குள் சிறந்தவரான நந்தி தேவர் தக்ஷனுக்கும் அவனைச்சேர்ந்த அந்தணர்களுக்கும் பிரதிசாபம் இட்டார்.

மூடனும் அகந்தை கொண்டவனுமான் தக்ஷன் தத்துவமார்கத்தை அறியாமல் கர்ம மார்கத்திலேயே உழன்று நாசம் அடையட்டும் என்றும் , விரைவிலேயே அறிவற்ற அவன் ஆட்டுத்தலை பெறுவான் என்றும் அவனுக்கு சாதகமாக இருந்த அந்தணர்களும் தவம் கெட்டு விஷய சுகத்தில் உழலட்டும் என்றும் சாபம் கொடுத்தார்.

அதைக்கண்ட அந்த யாகத்தின் தலைமை புரோகிதரான ப்ருகு , சிவனை பின்பற்றுவோர் பாஷாண்டிகளாகத் திரியட்டும் என்று சாபமிட்டார். இதையெல்லாம் பார்த்த மகாதேவன் வருத்தத்துடன் அந்த இடம் விட்டகன்றார்.

பிறகு ஹரியைக் குறித்து செய்யப்பட அந்த யாகத்தை ப்ரஜாபதிகள் அனைவரும் சேர்ந்து பூர்த்திசெய்து சுத்த மனத்தினராய் கங்கை யமுனை இரண்டு நதிகளும் சந்திக்கும் இடத்தில் அவப்ருத ஸ்நானம் செய்தனர்.

அத்தியாயம் 3
பல வருடங்கள் இந்த விரோதம் நீடித்தது. பிரம்மா தக்ஷனை தலைமை பிரஜாபதியாக நியமித்தபின் அவனுடைய அகந்தை இன்னும் பெரிதானது. பிரம்மஞானிகளை அவமதித்து அவர்களை அழையாமல் வாஜபேய யாகம் செய்துப் பின்னர் ப்ருஹ்ஸ்பதிஸவம் என்னும் சிறந்த யாகத்தைச் செய்ய ஆரம்பித்தான்.,

அதற்கு முனிவர்கள் தேவர்கள் முதலிய அனைவரும் தம் தம் பத்னிகளோடு வருகை தந்தனர், இதைப்பற்றி அங்கு செல்லும் தேவர்கள் மூலம் கேள்வியுற்று தாக்ஷாயணியாகிய சதி தேவி தன் பதியிடம் கூறினாள்.

"தேவ! உங்கள் மாமனாரான என் பிதா ஒரு மகத்தான யக்ஞம் செய்ய்ப்போகிறார். அதற்கு என் சகோதரிகள் அவரவர் பதிகளுடன் வருவார்கள். நானும் அவர்களையும் என் தாய் முதலியோரையும் சந்தித்து பலகாலம் ஆகிவிட்டதால் அங்கு போக ஆசைப்படுகிறேன். நாம் இருவரும் செல்லலாமே, என்றாள்.

மகாதேவர் கூறினார். "தேவி, உறவினர் வீட்டிற்கு அழைக்காமலே செல்வதில் தவறில்லைதான் . ஆனால் அவர்கள் நம்மிடம் விரோதமனப்பான்மையுடன் இல்லாவிடில்தான் அது சாத்தியம். 
நான் ஏன் உன் தந்தையை ஸத்ர யாகத்தில் வணங்கவில்லை என்றால் வணங்குதல் என்பது இதயத்தில் உறையும் பரம புருஷனுக்கே அன்றி தேஹாபிமானம் கொண்டவர்க்கு செய்யத்தகாதது.

அப்படியிருக்கையில் தவறே செய்யாத என்னை தகாத வார்த்தைகளால் நிந்தித்து என்னிடம் த்வேஷம் கொண்டவராதலால் அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் உன்னால் சென்று பார்க்கத்தகாது. என் சொல்லைக்கேளாமல் நீ போனால் அங்கு உனக்கு அவமதிப்பு உண்டாகும். அதுவே மரணத்திற்கும் காரணமாகும்.

அத்தியாயம் 4.

இவ்விதம் கூறிவிட்டு வரப்போவதை அறிந்தவராக மகாதேவர் மௌனமானார். இதைகேட்ட ஸதீதேவியும் பந்துக்களைப் பார்க்க ஆவலும் பதியின் சொற்கள் உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் கொண்டு உள்ளும் புறமும் போவதும் வருவதுமாக இருந்தாள்.பின்னர் பெண்களுக்கே உரிய பிறந்த வீட்டு பாசத்தால் தூண்டப்பட்டு சாதுக்களுக்கு பிரியமான எவர் தன் உடலில் பாதியைக் கொடுத்தாரோ அவரை விட்டு நீங்கிப் பிறந்தகம் புறப்பட்டாள்.

யாகசாலையை அடைந்த அவளைத் தாயாரையும் சகோதரிகளையும் தவிற மற்றவர்கள் தக்ஷனுக்கு பயந்து அலட்சியம் செய்தனர். யாகத்தில் ருத்ரனுக்கு பாகம் இல்லாததையும், தந்தையால் கணவருக்கு ஏற்பட்ட அவமதிப்பையும் தனக்கு நிகழ்ந்த அனாதரவையும் கண்டு லோகேச்வரியான அவள் உலகங்களை எரிப்பவள் போல்கோபம் கொண்டாள்.

அவள் தன் தந்தையிடம் கூறியது,
"பரமேஸ்வரனுக்கு மேல் எவரும் இல்லை அவர் எல்லா உயிர்களுக்கும் பிரியமானவர். அவருக்கு வேண்டுபவர் வேண்டாதவர் என்பதில்லை. உம்மைத்தவிர வேறு எவர்தன அவர்மேல் விரோதம் பாராட்டுவார்?

சிவ என்ற நாமம் ஒருமுறை கூறினும் பாவத்தைப் போக்கக்கூடியது. பரிசுத்தமான கீர்த்தியுடையவரும் மீற முடியாத ஆணையுள்ளவருமான அவரை மங்கலத்தை இழந்த நீங்கள் த்வேஷிக்கிறீர்கள் . 
மயானத்தில் வசிக்கும் இவருடைய நிர்மால்யத்தை பிரம்மாதி தேவர்கள் சிரசில் தரிக்கிறார்கள். அவர்களுக்கு இவர் மங்கலமானவர் அல்ல அமங்கலமானவர் என்று தெரியாமற் போனது எப்படி?

பகவத் நிந்தையைக் கேட்டால் காதைப் பொத்திக்கொண்டு அங்கிருந்து அகல வேண்டும். அல்லது அப்படிச் செய்பவர்கள் நாக்கை அறுத்துவிட வேண்டும்.இது இரண்டும் முடியாமற்போனால் உயிரை விட்டுவிடவேண்டும்.ஆகவே நீங்கள் தந்த இந்த உடலை நான் விட்டுவிடுகிறேன். உமது மகள் என்று த்வனிக்கும் தாக்ஷாயணி என்ற பெயரை அந்த ரிஷபத்வஜர் விளியாட்டாகக் கூப்பிட்டால கூட நான் நொந்து போவேன்,"

மைத்ரேயர் கூறினார். 
இவ்விடம் கூறிவிட்டு மஞ்சள் பட்டணிந்து வடக்கு நோக்கி யோகத்தில் அமர்ந்து தன் பர்த்தாவை தியானம் செய்யும்போது அவள் உடல் யோகாக்னியினால் எரிந்தது. பார்த்தவர் தக்ஷனை இகழ்ந்து ஸதீதேவியின் செயலுக்கு பெரும்துயரம் அடைந்தனர். அப்போது அவளுக்குத் துணையாக வந்த சிவகணங்கள் தக்ஷனைக்கொல்ல முயற்சிக்க ப்ருகு தன் மந்திர சக்தியால் அவர்களை பின்வாங்கி ஓடும்படி செய்தார்.

அடுத்து வரும் அத்தியாயங்கள் தக்ஷனின் அழிவையும் பிறகு அவனை சிவன் தன் கருணையால் உயிர்ப்பித்ததையும் தன் செயலுக்கு வருந்திய அவன் யக்ஞத்தை நிறைவு செய்வதையும் கூறுகின்றன.

No comments:

Post a Comment