ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 1- அத்தியாயம் 14/15
அத்தியாயம் 14
யாதவர்களைக் காணவும் கிருஷ்ணனைப் பற்றிய சேதியை அறிந்துகொள்ளவும் த்வாரகைக்குச் சென்ற அர்ஜுனன் ஏழு மாதங்கள் ஆகியும் திரும்பாததினால் யுதிஷ்டிரர் நாரதர் கூறியதைக் கேட்டு பகவான் சரீரத்தை விட்டுவிடும் காலம் நெருங்கி விட்டதோதோ என்று கவலையுற்றார்.
அதற்கேற்ப சில கெட்ட சகுனங்கள் ஏற்பட்டன. நதிகள் கலங்கி விட்டன. ஹோமம் செய்யும்போது நெய்யினால் அக்னி ஜ்வலிக்கவில்லை. கன்றுகள் பால் குடிப்பதில்லை பசுக்கள் கறப்பதில்லை.அவைகள் கண்ணீர் விட்டு அழுகின்றன. ஆலயங்களில் மூர்த்திகள் அழுவனபோலும் வியர்ப்பன போலும் அசைவன போலும் காணப்படுகின்றன. தேசமே களையிழந்து காணப்படுகின்றது.
இவ்வாறு யுதித்டிரர் பீமனிடம் வருந்தி பேசிக்கொண்டிருக்கையில் அர்ஜுனன் த்வாரகையிலிருந்து திரும்பினான். அவன் முகம் களையிழந்து காணப்பட்டது.
அத்தியாயம் 15
அர்ஜுனன் கூறினான்.
" எவன் உண்டு பாத்திரத்தில் மிகுந்த கீரையை உண்டு துர்வாச முனிவரிடம் இருந்து நம்மைக் காப்பாற்றினானோ, என் தேரின் முன் நின்று எவன் பீஷ்மத்ரோணாதியரின் உயிரைத்தான் பார்வையாலேயே கவர்ந்தானோ, அவன் நம்மை வஞ்சித்து விட்டான்.
எவனுடைய பாதகமலங்களை பிறவிப்பிணி நீங்க புருஷஸ்ரேஷ்டர்கள் சேவிக்கிறார்களோ அந்த சர்வேஸ்வரனை நான் புத்தி கேட்டு என் தேரோட்டும்படி அல்லவா கேட்டுக் கொண்டேன்.
அவன் என்னை எப்படி எல்லாம் காப்பாற்றினான்! ஒருமுறை களைப்புற்ற குதிரைகளுக்கு நீர் தர நான் வில்லால் பூமியைப் பிளந்தபோது எதிரிகள் என்னை தாக்காமல் அவர்களைத் தன் மாயையால் மயக்கமுறச்செய்தான். துரோணரின் ஆக்னேயாஸ்திரம், கர்ணனின் நாகாஸ்திரம் இவற்றில் இருந்து என்னைக்க் காப்பாறினான்."
( கர்ணன் நாகாஸ்திரம் விட்டபோது கண்ணன் தேரைத் தன் கால் கட்டைவிரலால் பூமிக்குள் அழுத்த அந்த அஸ்திரம் அர்ஜுனன் கிரீடத்தை மட்டும் கவர்ந்து சென்றது. யுத்தம் முடிந்த பின் வழக்குக்கு மாறாக தான் முதலில் இறங்காமல் அர்ஜுனனை இறங்கச்சொன்னார் . அவர் இறங்கியவுடன் கண்ணனால் செயலறச்செய்யப்பட்ட ஆக்னேயாஸ்திரம் தேரை எரித்துவிட்டது. )
அர்ஜுனன் தொடர்ந்தான்.
" சய்யாஸநாடன விகத்தன போஜனாதிஷு
ஐக்யாத் வயஸ்ய ருதவான் இதி விப்ரலப்த:
ஸக்யு: சகேவ பித்ருவத் தனயஸ்ய ஸர்வம்
சே(से)ஹே மஹான் மஹிதயா குமதே: அஹம் மே
அற்பபுத்தி உடைய நான் படுக்கும்போதும் இருக்கும்போதும் நடக்கும்போதும் பொழுதுபோக்காக பேசும்போதும் சாப்பிடும்போதும் ஒன்றாகவே பழகியதால் 'நண்பா நீ எவ்வளவு உண்மை பேசுபவன்' என்று அவன் மேன்மை அறியாமல் பரிஹாஸம் செய்வேன். அது அவ்வளவையும் தோழனுக்குத் தோழன் போலும் பிள்ளைக்குத் தந்தை போலும் பொறுத்துக்கொண்டு என்னுடன் அன்புடன் உரையாடினானோ அவன் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டான் என்று நினைக்கும்போது அது என் ஹ்ருதயத்தைப் பிளக்கிறது.
கிருஷ்ணனுடன் என் வீரம் போய்விட்டது . த்வாரகையிலிருந்து பெண்களைக் காத்து அழைத்து வருகையில் இடையர்களால் கோழை போல் ஜெயிக்கப்பட்டேன். ஒரு சிலரைத்தவிர மற்ற யாதவர்கள தங்களுக்குள் சண்டை புரிந்து முனிவர்கள் சாபத்தால் அழிந்தார்கள்."
இவ்வாறு கூறிய அர்ஜுனனின் மனம் கண்ணன் உரைத்த கீதையை நினைந்து அமைதியுற்றது.
குந்தி கண்ணன் சென்றதைக்கேட்டு அனன்ய பக்தியுடையவளாய் தன் உயிரைத்துறந்து கண்ணன் பாதத்தை அடைந்தாள். யுதிஷ்டிரர் பரீக்ஷித்திற்கு முடி சூட்டிவிட்டு சகோதரர்களுடனும் த்ரௌபதியுடனும் வடக்கு நோக்கிச்சென்று ஸ்வர்கம் அடைந்தார்.
யமதர்மனின் அவதாரமான விதுரரும் பிரபாச தீர்த்தம் சென்று தன் பூதவுடலை நீத்து பித்ரு தேவதைகள் அழைத்துச்செல்ல தன் இருப்பிடமான யமலோகத்தை அடைந்தார்
No comments:
Post a Comment