Friday, August 17, 2018

Srimad bhagavatam skanda 1 adhyaya 13 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1 அத்தியாயம் 13

அத்தியாயம் 13

தீர்த்தயாத்திரை சென்ற விதுரர் மைத்ரேயரிடம் இருந்து பிரம்ம ஞானத்தை அடைந்து ஹஸ்தினாபுரம் திரும்பினார். அவரை முறைப்படி உபசரித்து உணவளித்து அவர் ஓய்வெடுத்த பின்னர் யுதிஷ்டிரர் அவருடைய தீர்த்த யாத்திரை பற்றிய விவரங்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் யாராவது பிரயாணத்தில் இருந்து திரும்பினால் அவரை எப்படி கவனிக்க வேண்டும் என்பது.,. அவர்களுக்கு உணவளித்து சிரமபரிஹாரம் செய்த பின்னரே அவர் போய் வந்த விவரத்தைப் பற்றி கேட்க வேண்டும்.

ஆனால் நாம் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் ஏதோ விஷயமாக போய் திரும்பினால் அவர்கள் செருப்பை கழட்டும வரை கூட பொறுமையாய் இருப்பதில்லை. போன காரியம் என்ன ஆயிற்று என்று உடனே கேள்வி கேட்கிறோம். இது தவறு. .

விதுரர் கிருஷ்ணர் வைகுண்டத்திற்கு ஏகியது தவிர மீதி எல்லா விஷயத்தையும் அவர்களிடம் சொல்கிறார். கருணையினால் அந்த துக்கச் செய்தி அவரகளுக்குத் தானே த்வாரகையில் இருந்த அர்ஜுனன் திரும்பி வரும்போது தெரியட்டும் . இப்போதே அவர்களை துக்கத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றார் அதை மட்டும் சொல்லவில்லை.

பாரத யுத்தம் முடிந்து 2௦ வருடங்கள் ஆகிவிட்டன. திருதராஷ்டிரருக்கு மரண காலம் நெருங்கியதை உணர்ந்து விதுரர் அவரிடம் கூறினார்.

"பெற்றோர் உடன்பிறந்தோர் மக்கள் எல்லோரையும் இழந்து கௌரவர்களால் பலவிதத்திலும் துன்புறுத்தப்பட்ட பாண்டவர்களை அண்டி வாழ்வது உயிர்மேல் உள்ள ஆசையினால் அல்லவா? இவ்விதம் உயிர் வாழ விரும்பினாலும் உடல் கிழிந்த துணியைப் போல ஒருநாள் இற்று விழுந்து விடும்.

கதஸ்வார்த்தம் இமம் தேஹம் விரக்தோ முக்தபந்தன: 
அவிக்ஞாத கதிர்ஜஹ்யாத் ஸ வை தீர உதாஹ்ருத: (பா. 1.13. 25)
பற்று நீங்கியவனாக பந்த பாசங்கலைத் துறந்து வெளிக்கிளம்பி இந்த சரீரத்தை தானாகவே எவன் விடுகிறானோ அவனே தீரன்.

ய: ஸ்வகாத் பரத: இஹ ஜாத நிர்வேத ஆத்மவான் 
ஹ்ருதி க்ருத்வாஹரிம் கேஹாத் ப்ரவ்ரஜேத் ஸ நரோத்தம: ((பா. 1.13. 26)
எவன் தானாகவோ பிறருபதேசத்தாலோ இங்கு வைராக்கியம் அடைந்து தைர்யத்துடன் ஹரியை த்யானித்து வீட்டிலிருந்து துறவு பூண்டு வெளிக்கிளம்புகிறானோ அவன்தான் மனிதருள் உத்தமன்.,

ஆகையால் யாருக்கும் தெரியாமல் வடதிசை நோக்கிச்செல்லுங்கள் . இனி வரப்போகும் காலம் மனிதர்களின் குணத்தை அழிப்பதாக இருக்கும்.,(கலியுகம்) "

இதைக்கேட்டு திருதராஷ்டிரரும் காந்தாரியும் இமயமலை நோக்கி புறப்பட்டனர். அவர்களை வந்தனம் செய்வதற்காக வந்த யுதிஷ்டிரர் அவர்களை காணாமல் வருந்தியபோது நாரதர் அங்கு வந்தார்.

அவர்கள் துணை இல்லாமல் எப்படி இருப்பார்கள் என்று கவலைப்பட்ட யுதிஷ்டிரரிடம் நாரதர் கூறினார்.

" இது உங்கள் அறியாமை. யாரும் யாரையும் காலத்தின் வசம் , கர்மத்தின் வசம் இவைகளில் இருந்து காப்பாற்ற இயலாது.

த்ருதராஷ்டிரர் இமயமலையில் உள்ள ரிஷிகள் ஆஸ்ரமத்தை அடைந்து விட்டார். ஐம்புலங்களை ஒடுக்கி கட்டை போல் அமர்ந்திருக்கிறார் இன்னும் ஐந்து நாளில் த்ன் உடலை விட்டுவிடப்போகிறார் .பர்ணசாலையோடு அவரும் காந்தாரியும் எரிந்து சாம்பலாவர்.

பகவான் கிருஷ்ணர் தேவகாரியம் முடிந்து இங்கிருந்து கிளம்ப தயாராகிக் கொண்டிருக்கிறார். நீங்களும் அதுவரை இந்த பூமியில் இருங்கள். விதுரர் திருதராஷ்டிரரின் முடிவிற்குப் பிறகு திரும்பவும் தீர்த்த யாத்திரை மேற் கொள்ளப்போகிறார். " 
இவ்விதம் கூறிவிட்டு நாரதர் சென்றுவிட்டார்




No comments:

Post a Comment